அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் விசாரணைக்கென அழைத்துச் சென்ற கறுப்பின இளைஞரின் மரணத்துக்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் உணவகம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் 46 வயதான ஜோர்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பின மனிதர் கடந்த திங்கட்கிழமை வீதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கையில் விலங்கு மாட்டி விசாரித்தனர்.
தான் ஒரு அப்பாவி என கூறியதையும் செவிமடுக்காத காவல்துறை உறுப்பினர் ஒருவர் அவரை தரையில் குப்புறத் தள்ளி கால் முட்டியால் கழுத்தை அழுத்திய போது இதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மின்னபோலீஸ் நகரில் கறுப்பின மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜோர்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூழ்ந்தனர் போராட்டக்காரர்கள். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அமெரிக்காவின் நியூயோர்க், லொஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொல்லப்பட்ட ஜோர்ஜ் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரது உயிரிழப்பிற்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிறவெறி அதிகரித்து வருவதையே இச்சம்பவம் காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். #அமெரிக்கா #கறுப்பினஇளைஞர் #கைது #நிறவெறி