காவற்துறை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் உயிரிழந்த கறுப்பின அமெரிக்க பிரஜையொருவருக்கு நீதி கோரி அமெரிக்காவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் அதிகாரி ஒருவரால் முழங்காலில் வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு 46 வயதான George Floyd கொல்லப்பட்டார். இந்த சம்பவம் காணொளியாக வௌியாகி, கடுமையான எதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
குறித்த காணொளியில் George Floyd அதிகாரிகளிடம் தன்னால் மூச்சு விட முடியவில்லை என்றும் தயவு செய்து தன்னை கொல்ல வேண்டாம் என்றும் கெஞ்சியமை பதிவாகியுள்ளது. பின்னர் மூச்சுத் திணறிய நிலையில்,வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான காவற்துறை அதிகாரிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
George Floyd-இன் மரணத்தை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். Detroit பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
இதேவேளை, கலிபோர்னியாவின் ஓக்லண்டிலுள்ள கட்டிடமொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாநில பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இதன்போது, மின்னியா காவற்துறைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் டெக்சாஸின் ஹூஸ்டனில் நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 200 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்த CNN ஊடகவியலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தொடர் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. எனினும், ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறை சம்பவங்கள் அதிகரித்ததாக Minneapolis மேயர் Jacob Frey தெரிவித்துள்ளார். நியூயோர்க், அட்லாண்டா மற்றும் பிற பிராந்தியங்களிலும் வன்முறை சம்பவத்தினால் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.