159
யாழ்.கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று யுவதியொருவரை கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்தவேளை வெள்ளை வானில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் வாளுகள், கொட்டான்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து யுவதியை கடந்த முயன்றுள்ளனர்.
அதற்கு வீட்டில் இருந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் யுவதியை வாள் முனையில் வெள்ளை வானில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.
உடனடியாக சம்பவம் தொடர்பில் வீட்டார் கொடிகாமம்காவல்துறையினரருக்கு அறிவித்த போதிலும் காவல்துறையினர் நேரில் வந்து முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் அவர்கள் காவல் நிலையம் செல்ல முயன்ற போது , யுவதியை கடத்தி சென்றவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு அருகில் யுவதியை வாகனத்திலிருந்து இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, அங்கு முறைப்பாட்டை ஏற்கும் பிரிவில் இருந்த பெண் காவல்துறை உத்தியோகஸ்தர் யுவதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் , இதனை கடத்தல் என முறைப்பாடு செய்ய முடியாது. ஊரடங்கு நேரத்தில் உங்கள் வீட்டிற்குள் வந்தார்கள் என்றே முறைப்பாடு வழங்க முடியும். இதனை பெரிது படுத்தாமல் விடுங்கள் என எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தியுள்ளார். அதனால் பெற்றோர் முறைப்பாட்டை வழங்க தயக்கம் காட்டியுள்ளனர்.
அதன் பின்னரே குறித்த காவல்துறை உத்தியோகஸ்தரின் சகோதரன் முறையானவரின் தலைமையில் சென்ற குழுவினரே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் விபரம் பெற்றோருக்கு தெரிந்துள்ளது. தற்போது யுவதியின் பெற்றோர் , குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கோ தமது பிள்ளைக்கோ எதிர்காலத்தில் ஆபத்து நேரிடலாம் எனும் அச்சத்தில் உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாம காவல்துறை பொறுப்பதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #கொடிகாமம் #ஊரடங்கு #வெள்ளைவான் #கடத்தல்
Spread the love