சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.
மல்லாகம் சட்டத்தரணி ஒருவர், தனது கட்சிக்காரரிடம் நீதிமன்றில் சொந்தப் பிணைக்கு பண கட்டவேண்டும் என்று தெரிவித்து மேலதிகமாகப் பணம் அறவீடு செய்தார் என்ற விவகாரம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
அவ்வேளை அந்த விவகாரத்தில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் க.சுகாஷ் மீது குற்றம் சுமத்தி சமூக வலைத்தளங்களில் தனிநபர்களால் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதுதொடர்பில் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாக சட்டத்தரணி க.சுகாஷ், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய அதன் தலைவர் சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சமூக வலைத்தளங்களில் 28.05.2020 திகதி எமது சங்கத்தின் செயலாளர் கனகரட்ணம் சுகாஷ் தொடர்பில் வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகள் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இவ்வாறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவருவது தொடர்பிலும் சங்கம் கவலை கொள்கிறது.
எந்தவொரு சட்டத்தரணியினது பெயர் குறிப்பிட்டும் எந்தவொரு முறைப்பாடும் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு இதுவரை கிடைக்காத நிலையிலும் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது கவலையானதும் கண்டித்தக்கதுமான செயலாகும்.
மேற்படி உறுதிப்படுத்தப்படாத செய்தி தொடர்பான விடயப்பொருள் தொடர்பில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆழமாக ஆராய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறான ஏதேனும் விடயம் வெளிப்பட்டால் எமது சங்கம் அதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கையை எடுப்பதற்கு தயாராகவுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றது – என்றுள்ளது. #சட்டத்தரணி #மோசடி #சட்டத்தரணிகள்சங்கம் #கவலை