208
விசேட தேவையுடையவரை காவல்துறையினர் பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்டவரை காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.கிரீமலை பகுதியில் கடந்த 24ஆம் திகதி இரவு 11 மணியளவில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றினை அடுத்து அவ்விடத்திற்கு விசாரணைக்காக வந்திருந்த காங்கேசன்துறை காவல் நிலையத்தை சேர்ந்த உப காவல்துறைபரிசோதகர் மு.உதயானந்தன் (வயது 35) தலைமையிலான காவல்துறை குழுவினர் மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய முயன்ற போது , உப காவல்துறை பரிசோதகர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
வாள் வெட்டுக்கு இலக்கான உப காவல்துறைபரிசோதகரை ஏனைய காவல்துறையினர் அங்கிருந்து மீட்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதேவேளை சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினருக்கும் அறிவித்தனர்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேலதிக காவல்துறையினர், உப காவல்துறை பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் விசேட தேவையுடையவரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபர் மறுநாள் மல்லாகம் நீதவானின் முன் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்திருந்தார்.
அந்நிலையிலையே, அன்றைய தினம் இரவு தம்மை கைது செய்த காவல்துறையினர் தன்னை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து ‘கிளுவன்’ தடியால் மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும் , சம்பவத்துடன் தொடர்பில்லாத தன்னை பொய் குற்றசாட்டு சுமத்தி காவல்துறையினர் கைது செய்து தாக்கி சித்திரவதை புரிந்ததாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை கையளித்துள்ளார் #KKS #காவல்துறையினர் #சித்திரவதை #மனிதவுரிமைஆணைக்குழு
Spread the love