(க.கிஷாந்தன்)
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார்.
கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எவ்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, உப தலைவர் செந்தில் தொண்டமான், பொருளாதார மருதபாண்டி ரமேஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட இ.தொ.காவின் உயர்மட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.
பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியிருந்த தலைமை வேட்பாளர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26 ஆம் திகதி அகால மரணமடைந்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அவரின் மகனான ஜீவன் தொண்டமானை நியமிக்குமாறு கடந்த 27 ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இ.தொ.கா. பிரமுகர்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுச்செயலாளரின் கையொப்பத்துடனான கடிதத்தையும் கையளித்தனர்.
இந்நிலையிலேயே மேற்படி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜீவனிடம் கையொப்பம் வாங்குவதற்காக பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் குழு இன்று கொட்டகலை வந்திருந்தது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஐந்து வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ஜீவன்தொண்டமான் #வேட்புமனு #ஆறுமுகன்தொண்டமான்