காவற்துறை உடலைத் தாக்கியது – சட்ட வைத்திய அதிகாரி உள்ளத்தை தாக்கினார்….
அளுத்கமவின் தர்ஹா நகரைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனை காவற்துறையினர் ஈவிரக்கம் இன்றி கடுமையாக தாக்கியமை குறித்தும், பிரதேசத்தின் சட்ட வைத்திய அதிகாரி இனரீதியாக அவமதித்து கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டமை குறித்தும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ருவீட்டரில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
ஓட்டிசம் என்ற மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்ட 14 வயதுச் சிறுவனைக் காவற்துறையினர் அளுத்கமவின் தர்ஹா நகரில் மோசமாக தாக்கியுள்ளனர் என பதிவிட்டுள்ள அவர் தாக்கப்பட்ட சிறுவனின் உடற் காயங்களைின் படங்களையும், காணொளிகளையும் வெளியிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான சிறுவன், சிறுவயது முதலே நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது 14 வயது என்ற போதிலும், ஆறுவயதுச் சிறுவனுக்கு உள்ள மனோ நிலையுடனேயே அந்தச்சிறுவன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 25 ஆஅ் திகதி தாரிக் தனது துவிச்சக்கரவண்டியில் வீட்டில் இருந்து புறப்பட்டு தர்ஹா நகரில் உள்ள அம்பஹாகா நகரிற்கு சென்றுள்ளார். போகும் வழியில் உள்ள காவற்துறைச் சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த காவற்துறையினர் சிறுவனை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஒரு குழுவாக காணப்பட்ட காவற்துறையினர், சிறுவனை துவிச்சக்கர வண்டியில் இருந்து இழுத்து வீழ்த்தி உள்ளனர். ஓட்டிசத்ததால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவன் காவற்துறையுடன் பேசமுடியவில்லை.
தொடர்ந்தும் தலையிலும், முகத்திலும், உடலின் பலபாகங்களிலும், கடுமையாக தாக்கியதுடன் நிலத்தில் இழுத்து வீழ்த்தியும் உள்ளனர். இதன் பின் அந்த வழியால் சென்ற பொதுமக்களும் தாரிக்கை தாக்கி உள்ளனர். பேசமுடியாத சிறுவன் அழுதுகொண்டிருக்க, அப்போதும் அடங்காத காவற்துறையினர், சிறுவனின் கைகளை பின்புறமாக மடக்கி அருகே காணப்பட்ட மின்கம்பத்துடன் கட்டி வைத்தனர்.
இதனை அவதானித்த, அவ்வழியால் சென்ற தாரிக்கின் தந்தையை தெரிந்த ஒருவர் தந்தையை அழைத்துச் சென்று சிறுவனைின் நிலையை உணர்த்தி உள்ளார். தனது மகனின் நோய் குறித்தும் அவரது நிலைகுறித்தும் காவற்துறைக்கு விளக்கிய தந்தையையும் காவற்துறையினர் கடுமையாக பேசி உள்ளனர். மகன் வீட்டை விட்டு வெளியேற தந்தையே காரணம் என எழுத்தில் பத்திரத்தை வாங்கிய பின்னரே தாரிக்கை அழைத்துச் செல்ல அனுமதித்துள்ளனர்.
காவற்துறையினர் குறித்த அச்சம் காரணமாக தாரிக்கை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தந்தை தயங்கி உள்ளார். எனினும் பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார். எனினும் முறைப்பாட்டை ஏற்க மறுத்த காவற்துறை மேலதிக நடவடிக்கையையும் எடுக்க மறுத்துள்ளது.
அதன் பின்னர் அவர் அந்தப் பகுதிக்கான சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார். அதன் பின் பொதுமக்களின் உதவியுடன் களுத்துறை மாவட்ட பிரதி காவவற்துறைமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதனை அடுத்து தாரிக்கை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அவர் பணித்துள்ளார். தொடர்ந்து காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் களுத்துறை நாகொட வைத்தயசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் உதவியை நாடியுள்ளனர்.
அதனால் கோபம் அடைந்த சட்ட வைத்திய அதிகாரி இந்த சிறுவனை ஏன் இங்கு கூட்டிவந்தீர்கள் என உரத்து பேசியதுடன் இவ்வாறான முஸ்லீம்களாலேயே நாம் முகக் கவசம் அணிய வேண்டியிருக்கு, இந்த சிறுவனை அங்கொடை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறியுள்ளார்.
எனினும் அந்த வைத்தியசாலையின் மன நல வைத்தியர் ஒருவர் இந்த சிறுவனுக்கு ஏற்கனவே மருத்துவ சேவையை வழங்கிய நிலையில் அவரது உதவியுடன் மருந்துவ உதவியை பெற்று சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் களுத்துறை காவற்துறைப் பிரிவு அத்தியட்சகரின் கீழ் விசாரணகள் ஆரம்பமாகியுள்ளன. மேலதிக விசாரணைகளுக்காக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். #சட்ட வைத்தியஅதிகாரி #தாரிக் #காவற்துறையினர் #ஓட்டிசம்