இராமாயண இலக்கியம் ஆரிய-திராவிட போட்டியே தவிர வேற ஏதும் இல்லை இதனால் இராவணனை பற்றிய தகவல்கள் வெறும் கட்டுக்கதைகள் மாத்திரமே அன்றி வேறு என்னவாகத்தான் இருக்கமுடியும்.
இராமாயண இலக்கியம் எவ்வகை இலக்கியம் என்பதை பார்ப்பதற்கு முன்னமாக இந்த ஆரியர் யார்? திராவிடர் யார்? என்பதன் புரிதல் வேண்டும் அல்லவா. ஆம் அந்த வகையில் ஒரு சிறு கதை வடிவில் அதனை பார்ப்போம். உலக ஆதி காலம் எந்த வகையில் இருந்தது என்பது அனைவரும் அறிந்த விடயமே. அதாவது ஆதிகால மனிதர்கள் எவ்வாறு காணப்பட்டனர், தனக்கு எந்த விதமான குறிக்கோள்கள் இன்றியும் கிடைத்ததை வேட்டையாடி உண்டும் தனக்கென குறிப்பிட்ட இடங்களை மையமாக கொண்டு அங்கேயே வாழப்பழகாத காலத்தில் எது நாட்டில் மாத்திரம் அன்றி அனைத்து நாடுகளிலும் இதே போன்ற கட்டமைப்பே இருந்திருக்கும் அல்லவா? ஆம் கண்டிப்பாக அதே போலதான் கட்டமைப்பு இருந்திருக்கும். இருப்பினும் காலங்கள் உருண்டோட மாற்றங்கள் வருவது இயல்பு தானே! அதே போலவே தான் அன்றும் அவ் மனிதர்களின் வாழ்வில் மாற்றங்கள் நிகழ்ந்தன. வேட்டையாடி குறிப்பிட்ட இடத்தில் தங்கி வாழ தெரியாத மனிதர் சற்று சிந்தனைசெய்து தாம் குறிப்பிட்ட இடத்தில் தங்கி இருந்து தமக்குத்தேவையான உணவை தாமே உற்பத்தி செய்து கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொண்டனர். இதற்கு மேலாக ஓர் படி மேல் நின்று கொண்டு தான் இத்தனை நாட்களாக வேட்டையாடிய மிருகங்களை ஏன் கொல்ல வேண்டும் அதனை நாம் உண்ணாமல் மாற்று வாழியை சிந்தனை செய்யும் முகமாக மிருகங்களை (ஆடு,மாடு…..) வளர்த்து அதன் மூலம் வருகின்ற பயன்களை அடைய வேண்டும் என எண்ணிக்கொண்டான். இதுவே திராவிடர்களின் வரலாறாக இருந்து வருகின்றது.
குறிப்பாக சொல்லப்போனால் மாற்றங்கள் என்பது அனைத்து சமூகத்திடமோ அனைத்து நாடுகளிடமோ ஒரே காலத்தில் ஏற்படும் என்பதை நாம் எதிர் பார்க்க முடியாது அல்லவா? சற்றுத் தாமதமாகவேனும் சிறுக சிறுகவே மாற்றங்கள் இடம் பெறும் அல்லவா. இதனைப் போன்றே அன்றும் ஏனைய சமூகங்களிலும் நாடுகளிலும் இடம் பெற்றுள்ளைமை குறிப்பிடத்தக்கது. அதாவது ‘வோல்கா’ என்கின்ற இடத்தில் இருந்த மனிதக் குழுமம் ஒன்று அதிக குளிரின் நிமிர்த்;தம் வெப்ப பிரதேசத்தை நோக்கிய தமது பயணத்தை தொடர்ந்தது. வருகின்ற வழிகளில் தமது உணவுக்காக மிருகங்களை வேட்டையாடியும் குறிப்பிட்ட இடங்களில் தங்கியும் தமது வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டு தனது பயணத்தை தொடங்கினர். தங்கிஇருந்து வருகின்ற வழிகளில் பல்வேறுபட்ட இடர்பாடுகள் ஏற்படுகின்றன. தன்னுடன் கூடவே வருகின்ற மனிதர்கள் இறக்கின்றனர். அவ் மனிதர்களை அதே இடத்தில் விட்டுவிட்டு மீண்டும் தனது பயணத்தை தொடங்குகின்றனர். மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மழை வெள்ளம் அதிக காற்று என்ற பல்வேறுபட்ட இடர்பாடுகளை எல்லாம் கடந்து பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடந்த நிலையில் பல்வேறுபட்ட அனுபவங்களின் மத்தியில் இந்தியாவின் கைபர் கணவாய் ஊடாக கங்கை நதியை வந்தடைகின்றான்.
இங்கு வருகைதந்த மனிதக் குழுமம் அன்று கங்கை நதிக் கரையோரங்களில் தனது சீவனோபாயத்தை மேற்கொண்டிருந்த பூர்விக குடிகளை கண்டு வியந்து போகின்றது. தனக்குத் தேவையான உணவை தயாரிக்கும் முயற்சியில் விவசாயப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு மிருகங்கள் வளர்க்கின்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற இந்த திராவிட மக்களை பார்த்துவிட்டு வியந்து போகின்றான.; ஏன் நம்மால் வாழ இயலாது நாமும் இவர்களைப் போன்ற குறித்த இடத்தில் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற ஒரு யூகத்தின் மத்தியில் அதே இடத்தில் தமது குடும்பத்தை விஸ்தரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றான.; அங்கு திராவிடர்களால் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு, கோழி எல்லாம் களவாண்டு தனது பசியைப் போக்கிக் கொள்கின்றான். சிறிது காலம் செல்ல செல்ல சற்று சிந்தித்து அவர்களைப் போல நாமும் வாழ வேண்டும் என்ற ஒரு நப்பாசையில் அவர்களைப் போலவே செய்து கொள்கின்றான். இதுவே ஆரியர்களின் வரலாறாக இருந்து வருகின்றது. (வோல்கா முதல் கங்கை வரை என்கின்ற புத்தகத்தில் நான் கூறிய ஆரிய-திராவிர் பற்றிய மேலதிக விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்)
இவ்வாறு வந்து குடியேறியவர்கள், ஆரிய இனத்தவர்களாக, பார்ப்பனிய சமூகமாக எம்மத்தியில் இன்று இருக்கின்றனர் என்பது எவராலும் மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். இது இவ்வாறு இருக்க, சிறிது காலம் செல்ல செல்ல தான் அனுபவரீதியாக பட்டுத் தேறிய பல்வேறுபட்ட விடயங்களை இங்கே இருந்த கருப்பின திராவிடர்களை நோக்கி திணிக்கின்றான். வந்தேறு குடிகளாக வந்து குடியேறிய நீண்ட உடல் தோற்றமும் அகன்ற மார்புகளையும் வெள்ளை நிறத்தையும் கண்டதும் இங்கு வசித்து வந்த கறுப்புத் திராவிடர்கள் வியப்புடன் ஆச்சரியமாக பார்த்திருக்கின்றனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தாம் கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், தாங்களே கடவுளின் பிரதிநிதி எனவும், தான் கூறுகின்ற மந்திர தந்திரங்கள் மூலமே இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம் எனவும் இங்கு உள்ள திராவிடர்கள் மத்தியில் பொய்யான ஒரு கட்டுமானத்தை கட்டியமைக்கின்றான். தனக்கு பணிவிடை செய்யவும் தமது வேலைகளை செய்யவும் ஆட்கள் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் சாதியம் என்கின்ற ஒன்றை இவனே வேலைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கின்றமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இவ்வாறு ஆரியர்களின் வருகையினால் உருவாகிய பார்ப்பனிய சமூகம் தன்னுடைய இயலாமையினை நிலைநிறுத்திக் கொண்டு வாழ்வதற்காக காலாகாலமாக இருந்து வந்த எமது கறுப்பின திராவிடர்களை பேய்க்காட்டி வைத்து எழுதிய எழுத்துக்களை வைத்து இன்றும் ஓர் புரிதல் இல்லாதவர்களுக்கு இவ் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகவேனும் சற்றுத்தெளிவாகிக் கொள்ளுங்கள். அந்த வகையிலே வால்மீகி என்கிற வட இந்தியன் சமஸ்கிருத மொழியில் எழுதிய இலக்கியம் தான் இராமாயணம். இராமாயணம் தமிழில் எழுதப்பட்ட காவியம் அல்ல. அதை எழுதியவன் தமிழனும் அல்ல. இராமாயணம் ஒரு கற்பனை இலக்கியம். இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் புழக்கத்தில் உள்ளன. கறுப்பு நிற இராவணனை கெட்ட நடத்தை கொண்ட அசுரனாக சித்தரிப்பதன் மூலம் கறுப்பர்களான நம் எல்லோரையும் சம்ஸ்கிருத ஆரியன் இழிவுபடுத்துகிறான். கருப்பர்களான நாங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாக நம்மீது காழ்ப்பினைக் கொட்டிக்கொண்டே, நமது அரசியல் அடையாளமாக இராவணனின் அழிவை கொண்டாடுகிறது சமஸ்கிருத ஆரியக் கும்பல்.
நமக்கும் இராமாயணத்திற்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கறுப்பர் கூட்டமான நம்மை இழிவுபடுத்தும் நோக்கில் சமஸ்கிருத மொழியில் புனையப்பட்ட வடமொழி இலக்கியம் இராமாயணம்.சிவந்த நிற இராமன் கதாநாயகன்.கறுப்பு நிற இராவணன் வில்லன்.இராமாயணம் என்பதே ஆரியர்-திராவிடர் போராட்டம் தான் என்று விவேகானந்தர் தொடங்கி பண்டித நேரு வரை கூறியுள்ளனர்.தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் இராமாயணத்தை ஆரியர் – திராவிடர் போராட்டமாகவே கருதி மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். தீ பரவட்டும் என்று இராமாயணத்தைக் கொளுத்தச் சொன்னவர் அறிஞர் அண்ணா.
இராமர் பட எரிப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்திக் காட்டியவர் தந்தை பெரியார்.இராவண லீலா நடத்தியவர் அன்னை மணியம்மையார். ‘ தென்திசையைப் பார்க்கிறேன் என் சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா – என் தமிழர் மூதாதை – என் தமிழர் பெருமான் இராவணன் காண்…’ என்று புயல் பாட்டுப் பாடினாரே நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.பெரும் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் படைத்தவர்! சென்னை அரசாங்கம் பல மாதங்களாக கஷ்டப் பட்டு ஆராய்ந்து, இ.பி.கோ. 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின்படி ஆட்சேபகரமான அம்சங்கள் இருப்பதாகத் தேடிப் பிடித்து குற்றஞ்சாற்றி புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இராவண காவியம் என்ற நூலைப் பறிமுதல் செய்துள்ளது.நமது வேலைக்கார சிறுவன் நம்மைப் பார்த்துச் சிரித்தான். ஏண்டா சிரித்தாய்? என்றேன். இல்லை, இராவண காவியத்தைத் தடை செய்துள்ளார்களே சார் இவர்கள் இருக்கிற பீடத்திலே இனி என்றைக்குமே எதிர்க் கட்சிக்காரர்கள் இடம் பெற மாட்டார்களா? என்றான். ஏன்? இடம் பெறுவார்களே என்றேன். அவர்கள் ஒருவேளை, இராமாயணம், பெரிய புராணம், கந்த புராணம் முதலிய எல்லா ஏடுகளுக்குமே தடையுத்தரவு பிறப்பித்துவிட்டால் என்ன சார் ஆகும்? என்றான் அவன். எனக்கும் சிரிப்புத் தான் வந்தது.
இன்று இராவண காவியத்தில் என்னென்ன குற்றங்கள் காட்டப்படக் கூடுமோ, அவைகள் வேறு எந்தப் புராண இலக்கியத்திலும் இல்லாமல் இல்லை. இராமாயணமே கூட அத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப முடியாதென்றே தோன்றுகிறது. இவ்வாறு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் புதுவாழ்வு இதழில் (1948 ஜூன்) எழுதினார்.ஆம், புலவர் குழந்தையின் இராவண காவியம் இன்று தான் தடை செய்யப்பட்டது (2.6.1948). காங்கிரஸ் ஆட்சியால் என்ன குற்றமாம்? இந்தியன் தண்டனைச் சட்டம் 153 ஏ என்ன கூறுகிறது? மதம், இனம், பிறந்த இடம், வாழுமிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறுபட்ட குழுக்களிடையே பகையை வளர்ப்பது – (இதற்குரிய தண்டனை மூன்றாண்டு) 295 ஏ – என்ன கூறுகிறது? எந்த ஒரு பிரிவு மக்களின் மதத்தையோ, மத நம்பிக்கைகளையோ இழிவுபடுத்தி, அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவது (இதற்கும் தண்டனை மூன்றாண்டுகள்) பேராசிரியர் அன்பழகன் அவர்கள் புதுவாழ்வு இதழில் கூறியுள்ளது போல இத்தகைய குற்றங்களை உண்மையில் புரிந்திருப்பது இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களே. திராவிடர்களைக் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் இழித்துப் பழிப்பது அவர்களின் இதிகாசங்கள் தானே? இதற்கு எதிராக தன்மான உணர்வோடு இலக்கியங்கள் படைக்கப்பட்டால் – அது குற்றமா? கம்பனைக் கரைத்துக் குடித்த ரா.பி. சேதுப்பிள்ளை போன்றவர்கள் கூட புலவர் குழந்தையின் இராவண காவியத் தேன் குடத்தில் வீழ்ந்து புகழ் மொழிகளை உதிர்த்தனர் என்றால் இராவண காவியத்தின் சிறப்பினை எடுத்தோதவும் வேண்டுமோ!
1948இல் இதே நாளில் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட இராவண காவியம் மீதான தடை மானமிகு கலைஞர் அவர்களால் நீக்கப்பட்டது (17.05.1971) புலவர் குழந்தை கொங்கு நாட்டுத் தங்கக் கரும்பு புலவர் குழந்தை அவர்கள் திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்திட்ட பெரும் புலவர் ஆவார். இன்று அவருடைய பிறந்தநாள் (1906). கவிச் சக்ரவர்த்தி கம்பன் என்பார் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து இராமாயணம் எழுதினான் என்றால் நமது புலவர் குழந்தை. தமிழினத் தன்மானச் செருக்குடன் இராவண காவியம் தீட்டி தம் பெரும் புலமை கம்பனுக்குக் குறைவானதல்ல என்று கம்பீரமாகக் காட்டிய தீரர் ஆவார். கம்ப இராமாயணம் புகழ்பாடும் இரா.பி.சேதுப்பிள்ளை கூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தைப் பலபடப் புகழ்ந்துள்ளார்.
தேனினும் இனியசெந்தமிழ்க் குழந்தை!நான் கம்ப ராமாயணக் கவிச் சுவையில் கட்டுண்டு கிடந்தனன்……. தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்துவிட்டது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.கம்ப இராமாயண அன்பர் என்று அறிமுகமான புலவர் அய்யன்பெருமாள் கோனாரோ ஒருபடி மேலே சென்று புகழ்ந்துள்ளார்.
இனி யொரு கம்பனும் வருவானோ
இப்படியும்கவி தருவானோ?
கம்பனே வந்தான்
அப்படிக் கவிதையும் தந்தான்
என்று கம்பன் அடிபொடியாழ்வார்களையே ஒப்புக்கொள்ளச் செய்த ஒப்பாரில்லாப் புலவர் மாணிக்கம் நமது புலவர் குழந்தை ஆவார். 1948 இல் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட இராவண காவியம் கலைஞர் அரசால் 1971 இல் தடை நீக்கம் செய்யப்பட்டது. காங்கிரசின் இனவுணர்வுக்கும், திராவிட இயக்கத்தின் இனவுணர்வுக்கும் இடையே உள்ள ஒப்புவமை இதுதான்! தந்தை பெரியார் நெறியில் நின்று திருக்குறளுக்குத் தனிச் சிறப்புமிக்க உரையும் எழுதிய பெருமை இந்தப் பெருமகனாரையே சாரும். தமிழ்ப் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவு படுத்தும் புராணக் கருத்து-களைப் பாடிவந்தனர். அதற்கு மாறாக இராவண காவியத்தைச் செய்து தமிழரின் இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன். இக் காவியத்தைப் பள்ளிகளில் பாடமாக வைக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே பாராட்டினார்கள் என்றால் புலவர் குழந்தையின் பெருமைக்கு வேறு எந்த மகுடம் தேவை?
இவ்வாறு இராமாயணம் பற்றியும் ஆரியர்களின் திருவிளையாடல்கள் பற்றியும் ஏறாளமான குப்பைகள் உள்ளன. ஆகவே ஆரிய – திராவிடப் போட்டிக்காக எழுதப்பட்ட இராமாயணத்தில் திராவிட இராவணனைப் பற்றி எவ்வாறையா? சிறந்த முறையில் எழுதுவானுகள் அவனுகளுக்கு அவன்ட அவன்ட இனமோ மதமோ சாதியோ பெரிது என்ற ரீதியிலும் நாளைய சமூகம் தன்னுடைய சிறப்பை மாத்திரம் தான் பேச வேண்டும் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வின் வழியில் நின்றே இராவணனை அரக்கனாகவும் கெட்ட வழியில் நடப்பவனாகவும் சித்தரித்து பிராமன ஆண் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று எழுதியவை தான் ஐயா இந்த கட்டுக்கதை இராமாயணம் என்பதை இராமாயணத்தை தூக்கிப்பிடித்து பேசித்திரியும் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும் எனவே இராமாயணம் வெறும் ஆரிய – திராவிடப் போட்டிக்காக எழுதப்பட்டவையே வடிவமைத்து வைக்கப்பட்டவையே ஒழிய வேறு ஏதும் இல்லை. இது தோழர்களால் தரப்பட்ட தகவல்கள் இதனை ஒன்றாக தொகுத்து எனது புரிதலில் உள்ள தகவல்ளையும் ஒற்று சேரத் தொகுத்து எழுதப்பட்டவையே இப்பதிவு. புரிதல் இல்லாதவர்களுக்கு புரிதலினை ஏற்படுத்துவது மாத்திரமே எனது நோக்கம் இனியாவது இராமாயணத்தை தூக்கிப்பிடிக்கும் திராவிடர்கள் சற்று சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதே எனது அவா….
தொகுப்பு:-
கு.மதுசாந்
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்