(க.கிஷாந்தன்)
மவுசாகலை நீர் தேக்கத்தில் குவிந்துள்ள உக்காத கழிவு பொருட்களை அகற்றும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிரமதான பணியில் தேசிய மின் கட்டமைப்புக்கு பங்களிப்புச் செய்யும் மஸ்கெலியா மற்றும் மவுசாகலை நீர்தேக்கங்கள் சுத்திகரிக்கப்பட்டன.
அந்த நீர்தேக்கங்களில் காணப்பட்ட பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்கள் தொன் கணக்கில் அகற்றப்பட்டன. மஸ்கெலிய நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஓயாவின் இரு மருங்கிளும் குப்பை கூலங்கள் குவித்து காணப்படுகின்றமை குறித்தும் அதனால் நீர் மாசவடைவது குறித்தும் அண்மையில் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
மவுசாகலை நீர் தேக்கத்தில் குவிந்துள்ள உக்காத திண்ம கழிவு பொருட்களால் மீன்கள் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளதாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நீர் தேக்கத்திலிருந்து செல்லும் நீரை பயன்படுத்தி லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிடிய, விமலசுரேந்திரா மற்றும் கெனியோன் உள்ளிட்ட 5 மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஸ்கெலிய பிரதேச செயலாளர் ஆர்.ரஜிவன், மஸ்கெலிய நகர் மற்றும் மஸ்கெலிய ஓயா ஆகியவற்றை சிலர் ஆக்கிரமித்துள்ளதுடன் அவர்களால் இவ்வாறான கழிவுகள் நீரில் எரியப்படுவதாக தெரிவித்தார்.
எனவே பிரதேச மக்கள் சூழலை நேசித்து இந்த நீர்தேக்கத்தை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா காவல்துறையினர் ஆகியோர் இணைந்து இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.
நிகழ்வில் மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார, மஸ்கெலிய பிரதேச செயலாளர் ஆர்.ரஜிவன், மஸ்கெலிய பிரதேச சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். #மவுசாகலை #நீர்தேக்கம் #சிரமதானம் #மின்சாரம்