மட்டகளப்பின் உருவக அடையாளங்களாக இருப்பவை நீரரமகளீர் என சுவாமி விபுலானந்தரால் அழைக்கப்படும், மீன்மகளீர்களும் மற்றும் பாடுமீன்களும் ஆகும். மீன்மகளீர் பற்றிய உருவக அடையாளங்களும் கதைகளும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பற்றிய சுவார்ஸ்யமான வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதும், அடங்குவதும், பின்னர் மீள்கிளம்புவதாகவும் இருந்து வருகின்றன. குறிப்பாக, மீன்மகளீரின் காண்பிய உருவாக்கங்கள், ஆண்நோக்குநிலைப்பட்டு இருப்பதன் காரணமாக மேற்படி விவாதங்கள் கிளம்புவதும், அடங்குவதும், மீள்கிளம்புவதாகவும் இருப்பது புரிந்துக் கொள்ளப்பட வேண்டியது.
ஆண்ணிலை நோக்கில் பெண் உருவச் சித்திரிப்பு என்பது பாலியல் தன்மைகளை முதன்மைப்படுத்துவனவாகவே இருந்து வருகிறது. பெண் என்பவளும் ஆண்களைப் போலான அறிவும், உணர்வும், உணர்ச்சியும், அதற்கும் மேலாக சமமான உரிமையும், உடைய பிறவி. இத்தகையதொரு சிந்தனையற்ற நிலையில், மேற்படி சித்திரிப்பு கேள்விக்குரியதாக ஆக்கப்படுவது காரணமாக, மீன்மகளீர் காண்பிய உருவாக்கம் மீதான, விவாதங்கள் நிகழ்ந்தும் வலுவடைந்தும் வருகின்றன.
இந்நிலை காரணமாக, மீன்மகளீர் உருவசிலைகள், அகற்றப்படுவது அல்லது விகாரப்படுத்தப்படுத்தப்பட்ட உறுப்புகள் கறுப்பு மைபூசி மறைக்கப்படுவது, நிகழ்ந்து வருகின்றமை அவதானத்திற்குரியது.
இந்நிலையில் பெண் என்பவள் பெருத்த மார்பும், சிறுத்த இடையும், பருத்த தொடையுமென வணிகமயப் பண்பாடு கட்டமைத்திருக்கும், காண்பிய உருவங்கள் மீதான விமர்சனங்களும் அதற்கு மாற்றான காண்பிய உருவாக்கங்களின் சாத்தியப்பாடுகளும் பயில்நிலையில் இருந்து வருகின்றன.
இந்த விடயம் சார்ந்து மட்டகளப்பின் பெண்கள் அமைப்புகளும். பெண்ணிலைவாதச் சிந்தனையாளர்களும் படைப்பாளர்களும் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து பல கலைச்செயல்வாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.
இத்தகையதொரு பின்னணியில், ஓவியர் சுசிமன் நிர்மலவாசன் மீன்மகளீர் காண்பியக் கலையாக்கமொன்றை நிகழ்த்தி இருக்கின்றார். மட்டகளப்பின் வாய்மொழிமரபுகளிலும் கலைஇலக்கியங்களிலும், இத்தகைய மீன்மகளீர், சித்திரிப்பைப் பரவலாகக் காணமுடியும்.
ஓவியர் சுசிமன் நிர்மலவாசனுடைய மீன்மகளீர் காண்பிய உருவாக்கம் பலரையும் மகிழ்ச்சிக் கொள்ள வைக்கும், அழகுடனும் எளிமையுடனும் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. மட்டகளப்பின் மரபார்ந்த அலங்காரங்களையும், உள்ளிணைத்து மேற்படி காண்பிய உருவாக்கத்தைச் செய்திருப்பது சுசிமன் நிர்மலவாசனின் கலைத்திறத்தையும் கருத்தியல் விருத்தியையும் புலப்படுத்துவதாகவே இருக்கின்றமை குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியது.
ஊருக்குள்ளும் உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லுவதும் எடுத்துச் செல்லக்கூடியதும் எவருக்குக் கொடுக்கக் கூடியதும் எம்முடனேயே வைத்திருக்க விரும்புவதுமான கலைப்படைப்பாக, இனி எங்களுடனும் எல்லோருடனும் மீன்மகளீர்.
கலாநிதி.சி.ஜெயசங்கர்.