முடக்கல் நிலையினை படிப்படியாக தளர்த்துவதே சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்ததென ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் முடக்கல் நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான நாடுகள் முடக்கல் நிலையினை படிப்படியாக தளர்த்தி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடைப்பிடிக்கும் முடக்க நிலையினை எவ்விதம் விலக்குவது என்பது தொடர்பாக யுசிஎல் மற்றும் ஸின்{ஹயா பல்கலைக் கழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது நேச்சர் இதழில் மனித செயல்பாடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொருள் விநியோக சங்கிலி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொரோனா வைரஸ் பரவலால் நேரடியாக பாதிக்கப்படாத நாடுகள் உட்பட 140 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
சீனாவில் 2 மாதங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்ட முடக்க நிலை மற்றும் ஓரளவு தளர்த்தப்பட்ட முடக்க நிலையை 4 மாதம் முதல் 6 மாதங்கள் வரை சில நாடுகளில் பின்பற்றப்பட வேண்டியிருக்கும். இதற்கு பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படுவது மட்டும் காரணமல்ல, வைரஸ் பரவலின் தீவிரம் அங்கு அதிகமாக இருப்பதும் காரணமாகும்.
நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்ட முடக்க நிலை காரணமாக தொழில் துறை தனது வழக்கமான நிலைக்குத் திரும்ப கால அவகாசம் தேவைப்படும் என்பதனால் படிப்படியான தளர்வுகள் பிராந்திய அளவில் தீர்வு அளிப்பதோடு சர்வதேச அளவிலும் விநியோக சங்கிலி தொடர்வதற்கு வழிவகுக்கும் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸால் நேரடியாக பாதிக்கப்படாத நாடுகளில்; கூட மக்களின் நுகர்வு குறைந்து போனதால் அவற்றின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீத அளவுக்கு பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக சுற்றுலா துறையை பெரிதும் நம்பியுள்ள கரீபியன் நாடுகள், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் எரிசக்தியை சார்ந்துள்ள கஜகஸ்தான் போன்ற நாடுகள், ஏற்றுமதியை பெரிதும் சார்ந்துள்ள நாடுகள் என்பன பாதிப்பை சந்திக்கின்றன. சர்வதேச நிறுவனங்கள் தாங்கள் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான விநியோகத்தர்களை பெரிதும் சார்ந்துள்ள சூழலில் அதுவும் பாதிப்பை சந்திக்கும்.
குறிப்பாக ஓட்டோமொபைல் துறை உற்பத்தி பாதியளவு சரிவைச் சந்திக்கும் என யுசிஎல் பார்ட்லெட் மைய பேராசியர் டபோ குயான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அளவை மதிப்பிடுவது மிகவும் கடினம். குறுகிய காலத்துக்கு உறுதியாக கடைப்பிடிக்கப்பட்ட முடக்கநிலை ஓரளவு பயன் தரும். அதேபோல அதை படிப்படியாக விலக்கிக் கொள்வதுதான் இதில் இருந்து மீள்வதற்கு உள்ள ஒரே வழி. அதன் மூலம்தான் அறுபட்டு போன விநியோக சங்கிலியை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
12 மாதங்கள்
தற்போது அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை நடவடிக்கைகளை அடுத்த 12 மாதங்களில் படிப்படியாக தளர்த்த வேண்டும். அவசர கதியில் 2 மாதங்களுக்குப் பின்னர் முடக்க நிலையை தளர்த்தினால் பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் ஒரு முறை முடக்க நிலையை அமுல்படுத்த வேண்டி இருக்கும். இவ்விதம் மீண்டும் ஒரு முறை முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டால் பொருளாதார சரிவை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. #முடக்கல்நிலை #சர்வதேச #பொருளாதாரவளர்ச்சி #கொரோனா