பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை இவ்வாரத்திற்குள் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் திகதி தொடர்பில் அநேகமாக நாம் தீர்மானித்துவிட்டோம். எனினும் எம்மிடம் கலந்துரையாடல்களை கோரியுள்ள அரசியல் கட்சிகளிடம் இந்த வாரத்தினுள் கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
யூன் 20 தேர்தல் திகதி இன்னும் ரத்துச் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடுவதில் சிக்கல் இல்லை. நாம் அடுத்த வர்த்தமானியில் யூன் 20 தேர்தல் திகதியை நீடித்து வெளியிடுவோம் என்ற போதிலும் அது யூன் 21 ஆக இருக்காது.
அத்துடன் வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார். #பொதுத்தேர்தல் #தீர்மானம் #மகிந்ததேசப்பிரிய #தேர்தல்ஆணைக்குழு