தெற்கில் இடம்பெற்ற போராட்டத்திற்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தி பெண்களை சித்திரவதை செய்ததாக காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெண் காவல்துறை அதிகாரியொருவர் இல்லாத நிலையில், ”பெண்கள் மீது கை வைக்க” ஆண் காவல்துறை அதிகாரிகளுக்கு உரிமை கிடையாது என பிரபல நடிகை சமனலி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
”காவல்துறை அதிகாரிகளால் பெண்கள் தாக்கப்பட்டு வாகனங்களில் இழுத்துச் செல்லப்படுவதை தொலைக்காட்சி ஊடாக காணமுடிந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
”போராட்டத்தின் போது வாகனத்தில் தூக்கி எறியப்பட்ட ரஷ்மி வித்யாஞ்சலி பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். அவரது மூக்குக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னரே அவர் வாகனத்தில் தூக்கியெறியப்பட்டார்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையினரால் வாகனத்திற்கு தூக்கியெறியப்பட்ட ரஷ்மி வித்யாஞ்சலி நோய்வாய்ப்பட்டு கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பெண்களின் சுகாதாரம் குறித்து காவல்துறையினர் அவதானம் செலுத்தவில்லை என நடிகை சமனலி பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
“எங்கள் சகோதரிகளில் சிலர் கைது செய்யப்பட்டதிலிருந்து காவல் நிலையத்தில் மாதவிடாய் காலத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் எங்களுக்கு புதிய ஆடைகள் தேவை என அவர்கள் கோரியுள்ளனர். எனினும் சட்டத்தரணிகள் ஊடாகவேனும் அவற்றைப் பெற்றுக்கொடுக்க காவல்துறையினர்மறுத்துள்ளனர்.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் கறுப்பின இனத்தைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டு காவல்துறையினரால் கொலை செய்யப்பட்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னிலை சோசலிஷக் கட்சி நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டத்தினை காவல்துறையினர் தடுத்திருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் பல்வேறு சர்ச்கைகளைத் தோற்றுவித்திருந்ததோடு, சட்டத்தை மீறி காவல்துறையினரே செயற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குறிப்பாக பெண்கள் பலர் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் கைது செய்யப்பட்ட விதம் மற்றும் அவர்களை வாகனங்களில் ஏற்றிய செயற்பாடுகளும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. இந்நிலையில், இந்த விடயத்திற்கு கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரபல நடிகை சமனலி பொன்சேகா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
”தேசிய பாகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கும் இந்த அரசாங்கம் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பதை நாம் அறிவோம்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.
”சட்டத்தை மதித்து இடம்பெற்ற இந்த போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையினருக்கு காணப்பட்ட உரிமை என்ன? தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டது யார் காவல்துறையினரா? அல்லது போராட்டக்காரர்களா?” என சமனலி பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
”அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான சித்திரவதையை நாம் எதிர்க்கவில்லை எனின், நாம் நாம் மனிதாபிமானத்திலிருந்து நீண்ட தூரம் விலகியிருக்கின்றோம் என்றே அர்த்தப்படும். கலைஞர்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.” எனவும் சமனலி பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். #தெற்கில் #பெண்களை #காவல்துறைஅதிகாரி #குற்றச்சாட்டு #சமனலிபொன்சேகா #போராட்டம்