189
தமிழர்களின் ஏக பிரதிநிதித்துவம் என சொல்லி பிரிந்து நிற்கிறார். தாம் மட்டும் பிரிந்து நிற்காமல், மக்களையும் பிரித்தாள்கிறார்கள் இதனால் தமிழர்கள் பிரதிநிதித்துவமின்றி தனித்துவிடப்பட்டுள்ளார்கள். என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
யாழில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் கட்சியின் நாடாளுமன்ற தேர்தலின் யாழ். தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் மற்றவர்களை வேதனைப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ , அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் சொல்லி வாக்கு கேட்பவர்கள் இல்லை. நாங்கள் சரியாக சிந்தித்து செயல்பட வேண்டும். நாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்று பட வேண்டும் என ஒன்றுபட்டவர்கள்.
இப்ப உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை. எங்களுடைய இலட்சியம் எங்கள் தலைவர்களின் இலட்சிய பாதையில் பயணிப்பதே எமது இலக்கு.
ஏக பிரதிநிதித்துவம் என்றால் எல்லோரும் ஒன்றாக நிற்பது. இப்ப யார் ஒன்றாக நிற்கிறார் ? பலவாக பிரிந்து நிற்கிறார். பல கட்சிகள் ஏன் தோற்றம் பெற்றது என தெரியவில்லை.
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை எமது கட்சியில் இணைய வருமாறு கேட்ட போது அவர் வரவில்லை. இன்று தேவையற்ற பலரை இணைத்து தானும் ஒரு கட்சி ஆரம்பித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணி என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்ததோ என்ன கொள்கையை கொண்டு பயணித்ததோ அதே நோக்கம், கொள்கையுடனும் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறது. எமது கொள்கையுடன் இணைந்து பயணிப்போர் எம்முடன் இணைந்து பயணியுங்கள் என தெரிவித்தார். #ஏகபிரதிநிதித்துவம் #ஆனந்தசங்கரி #பிரித்தாள்கிறார்கள் #தமிழர்விடுதலைகூட்டணி
Spread the love