கொரோனா பாதிப்பால் பிரித்தானிய மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் தெற்காசிய மக்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வி;ல் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகள் உள்ளிட்ட 27 நிறுவனங்கள் மற்றும் 260 மருத்துவமனைகள் பங்கு பெற்றன.
இந்த ஆய்வில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு 1,000 வெள்ளையின மக்களில் 290 பேர் இறக்கின்ற அதேவேளை ஒவ்வொரு 1,000 தெற்காசிய மக்களில் 350 பேர் இறக்கின்றனர் என தெரியவந்துள்ளது. வெள்ளை இனத்தவரோடு ஒப்பிடும்போது, மருத்துவமனையில் உள்ள தெற்காசிய இனத்தவரின் மரண வீதமும் தொற்று விகிதமும் சற்று அதிகமாகவே உள்ளதென ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கும் தெற்காசியாவைச் சேர்ந்த அனுமதிக்கபட்ட நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேர் டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு நோயைக் கொண்டிருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதில் யார் யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீர்மானிக்கும் போது இனத்தையும் தற்போது வயதையும் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தெற்காசிய இன கொரோனா நோயாளிகளில் சுமார் 40 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் காணப்படுமுவதனாலேயே ஆசிய இனத்தவர்களின் கொரோனா தொற்றும், இறப்பு வீதமும் அதிகமாக காணப்படுகின்றது என எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈவன் ஹாரிசன் தெரிவித்துள்ளார்.
எனவே தெற்காசிய மக்கள் அதாவது சிறுபான்மையின மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் கொரோனா வைரசிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக முகக்கவசம் அணிதல் மிகமிக அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ்;, பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகளே தெற்காசிய நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது #பிரித்தானியா #கொரோனா #தெற்காசிய #ஆய்வு #நீரிழிவு