168
முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனத்தின் பட்டறையிலிருந்து வெடிமருந்தைக் கடத்த முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வெடிமருந்து கடத்தல் முயற்சி நேற்று மாலை இடம்பெற்ற நிலையில் சந்தேக நபர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
“பளை காவல்துறை பிரிவுக்கு உள்பட்ட முகமாலை பகுதியில் உள்ள கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனத்தின் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளில் இருந்து சி4 அல்லது ரிஎன்ரி வெடிமருந்தைத் திருடிய இருவர் தப்பிக்க முயன்றனர்.
அதன்போது தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களை கண்டுள்ளார். பாதுகாப்பு உத்தியோகத்தரைக் கண்டதும் வெடிமருந்து பொதியை அங்கேயே கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பித்துள்ளனர்.
அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பித்ததை பாதுகாப்பு உத்தியோகத்தர் தனது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினருக்கும் இராணுவத்துக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரும் இராணுவத்தினர் வெடிமருந்து பொதியை மீட்டனர். அதனுள் சுமார் 2 கிலோ கிராம் எடையுடைய ரிஎன்ரி அல்லது சி-4 வெடிமருந்து காணப்பட்டது.
இந்த நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வழங்கிய ஒளிப்படத்தில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத்தகட்டின் அடிப்படையில் சந்தேக நபர்களை மானிப்பாய், அளவெட்டி ஏழாலை என நேற்றிரவு முதல் தேடப்பட்டனர்.
எனினும் சந்தேக நபர்களில் ஒருவர் எழுதுமட்டுவாழில் கைது செய்யப்பட்டு கொடிகாமம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மற்றொருவர் அரியாலையில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேக நபர்கள் இருவரும் முகமாலை பகுதிக்கு கருக்கு மட்டை வெட்டுவதற்கு செல்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது #வெடிமருந்து #கடத்த #கைது #முகமாலை
Spread the love