273
யாழ்ப்பாணம் மாநகர வீதியில் கழிவுப் பொருள்களை வீசுவதைத் தடுத்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகரை வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அத்தியடி பகுதியில் வீதியில் நீண்ட காலமாக கழிவுப்பொருள்கள் வீசப்பட்டு வந்தன. அதனால் அந்தப் பகுதியைச் சூழவுள்ள குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர் . இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளலில் காத்திருந்தார்.
அதன்போது ஒருவர் கழிவுப்பொருள்கள் அடங்கிய பொதியை வீசுவதற்கு முற்பட்டதை அவதானித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர், அதனைத் தடுக்க முற்பட்டுள்ளார். அதனால் இருவருக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரைத் தாக்கிவிட்டு குப்பைப் பொதியை வீசிவிட்டு அந்த நபர் தப்பித்திருந்தார். சம்பவத்தில் காயமடைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
தாக்குதல் நடத்தியவரின் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள கிறீம் ஹவுஸின் உரிமையாளரை நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சுகாதாரப் பரிசோதகரைத் தாக்கியதாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் இன்று முற்படுத்தினர்.
பொது ஊழியர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொது ஊழியரின் கட்டளையை மதிக்காது செயற்பட்டமை, பொது ஊழியருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டமை மற்றும் பொது ஊழியரைத் தாக்கியமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுக்கள் பி அறிக்கையில் முன்வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகருடன் 4 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபரை வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். #பொதுச்சுகாதாரப்பரிசோதகர் #கழிவு #ஸ்ரான்லிவீதி #கிறீம்ஹவுஸ்
Spread the love