உலகில் வாழும் மனிதர்களுக்கு நேரகாலம் என்பது அவரவர் பிறப்பில் தொடங்கி, இறப்பு வரையான கால வலைரயறைக்குள், அவரவர் வளர்ச்சி மாற்றம் முதல் கொண்டு, நடப்பியல் வாழ்க்கை வரை மிக முக்கியமான விடயம் ஆகும். அத்தகைய நேரத்தை சிறப்பாக முகாமை செய்வதற்கான சுய நிர்வாகம் எம்மிடம் காணப்படுமாயின், அவரவர் சுயம் சார்ந்த புரிதலையும், எங்களுடைய இறுதிக் குறிக்கோள், இலட்சியம் என்ன என்பதையும் பற்றிய தெளிவான விளக்கமும்; புரிதலும் கிட்டும். காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது என்பார்கள். ஆகவே நேரத்தை சரியாக முகாமைத்துவம் செய்துகொள்வது என்பது தனி மனிதரின் வாழ்வின் வினைத்திறனான செயற்பாடாகும். சிறந்த நேர முகாமைத்துவம் வாழ்வின் வெற்றிக்குரிய பாதையை காட்டுகின்றது.
முகாமைத்துவம் என்பது திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுத்தல் போன்ற கருமங்களின் ஊடாக வினைத்திறனான இலக்கினை அடையும் செயலே முகாமைத்துவம் ஆகும். ‘நேர முகாமைத்துவம் என்பது எமது வாழ்வின் இலக்கினை நோக்கிய திட்டமிடலில், காலத்தை வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்கான நேர அட்டவணையின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட ஒரு செயல் ஒழுங்கு’ என்று குறிப்பிடலாம்.
நேர காலம் என்பது ஒரு நேர்கோட்டுப் பயணம், அது தொடக்கப் புள்ளியில் ஆரம்பிப்பது மாத்திரமே அதற்கு முடிவில்லை, எமது உயிர் எம்மை விட்டு பிரியும் நொடியில் எமக்கான நேரம் முடிவடைகிறது என்பதே யதார்த்தம். காலமும் நேரமும் ஒருபோதும் மனிதனுக்காக காத்திருக்காது. நேரகாலத்தை கையில் பிடித்துக்கொண்டு நாம் ஓடுகிறோம் நாம் நின்றாலும் நேரம் தனது பாதையில் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு தனி மனிதனிதரின் வளர்ச்சியில் வெற்றி என்பது அவரவர் நேர காலத்தை சிறப்பாக நிர்வகித்துக் கொள்ளும் விதத்தில் அமையும். எனவே எப்போதும் மீளப்பெற்றுக்கொள்ள முடியாத அரிய கைப்பொருளான நேரத்தை நுட்பமான முறையில் பயன்படுத்த வேண்டும்.
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற சக்கரத்தில் வேகமாக ஓடுகின்ற ரயில் போன்றதே நேரம். இறந்த காலம் எப்போதுமே இறந்த காலம் தான் கடந்த காலத்தை மீட்டுக்கொள்வதென்பது பூமியை பின்புறமாக சுற்றுவதற்கு சமம். இதனை இருபதாம் இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளின் அறிவியல் கோட்பாடுகளின்படி கடந்த காலத்திற்குள் பயணிப்பது என்பது சாத்தியமில்லை என நிரூபித்துள்ளனர். கால பயணத்தை மேற்கொள்வது என்பது ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு செயலாகும். இதற்கு சாத்தியமே இல்லை, ஆகவே இறந்த கால அனுபவத்தின் ஊடாக நிகழ்காலத்தை சிறப்பாக கட்டமைத்து எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
நாம் நாளாந்தம் சந்திக்கின்ற ஒவ்வொரு நாளினதும் மகத்துவத்தை உணர வேண்டுமேயானால், நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் இன்றைய நாள் எனது இறுதி நாளாக இருந்தால் நான் என்ன செய்வேன், இன்றைய பொன்னான நேரத்தை காலவீனடிப்பின்றி சிக்கனமான முறையில் திட்டமிட்டபடி ஒழுங்குபடுத்தி இன்றைய வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ளும்போது சுயநேர முகாமைத்துவம் தானாகவே ஒழுங்கமைக்கப்பட்டு விடும். எங்களுடைய நாளாந்த செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முறைப்படுத்தப்பட்ட நேர அட்டவணைப்படி நடக்கும் போது ஒரு நாளில் உள்ள 24 மணித்தியாலங்களும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் பூரணமானதாக, தாராளமானதாக அமையும்.
ஒரு நாளை ஒரு நாள் என்று ஒருமையில் பார்ப்பதற்கு மாறாக 24 மணித்தியாலங்கள் 1440 நிமிடங்கள் 86400வினாடிகள் என்ற பன்மையில் பார்க்கும்போது ஒரு நாளின் செயற்திட்டங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க வேண்டும் என்ற திடமான மனம் உருவாகும். நேரத்தை சிறப்பாக கடைப்பிடிப்பதால் வாழ்க்கை சிறப்பாக வாழ முடியும் எனும் கருப்பொருள் ஆழ்மனதில் தெளிவாகும். பயனுள்ள மிக முக்கியமான செயற்பாடுகளுக்கு நேரத்தை அதிகம் செலவு செய்ய வேண்டும் என்ற மனப் பக்குவத்திற்கு ஏற்ப நேரத்தை முகாமை செய்யும் போது பட்சத்தில் எந்த ஒரு செயற்திட்டத்திலும் வெற்றியை காண முடியும். ‘நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட நேரம் என்பது நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு மனதின் நிச்சயமான அடையாளமாகும்’ ‘சர் ஜசக் பிட்மென்’.
ஒரு மனிதர் தனக்கு என்ன வேண்டும் என்பதையும் அதை எவ்வாறு பெறுவது என்பதையும் பற்றி உணர்ந்து கொள்வதற்குள் வாழ்க்கையின் அரைவாசி காலம் கடந்து விடுகிறது. இதை ‘இளமைக்கு மட்டும் தெரிந்திருந்தால், முதுமைக்கு மட்டும் முடிந்திருந்தால்’ என்ற முதுமொழி உணர்த்துகிறது. எனவே இளம் வயதிலிருந்தே நேரத்தை சாமர்த்தியமாக பயன்படுத்துபவர்களுக்கு செழுமையான உருவாக்கம் என்பது இயல்பாகவே கிடைக்கிறது. நேர நிர்வாகம் என்பது வாழ்க்கை நிர்வாகம் என்ற கருத்தை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால், தமது பிரம்மாண்டமான மனித சக்தியைப் புரிந்து கொள்ளவே முடியாமல் போகின்றது. உதாரணமாக இவ்வையகத்தில் வாழ்வின் வெற்றி பெற்றவர்களாக நாம் கருதுகின்ற அனைவருடைய வரலாற்று சரித்திரத்தை எடுத்து நோக்கினால் அவர்கள் நேரத்தை சரியாக முகாமை செய்தவர்களாக, செய்பவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
நேரத்தைப் பொறுத்து அளவில், நாம் ஞானமாக நடந்து கொள்வது சிறந்தது. அதாவது எதற்காக, எவ்வளவு நேரம் செலவிடுவது என்ற புரிதல் இருக்க வேண்டும். நேரத்தினை இலக்குகளை அடைவதற்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும். நாளை, நாளை என்று காலத்தை வீணடிக்கும் பிற்போக்கான செயற்பாட்டின் காரணமாக நேரமும் காலமும் வீணடிக்கப்படுகிறது. எந்த ஒரு செயலையும் திட்டமிட்டபடி செய்து முடிப்பதனால், மனநிறைவு ஏற்படுவதுடன் காலவிரயத்தை தடுக்க முடிகிறது. நேர முகாமைத்துவம் என்பது பேணப்படும் போது, எந்த சூழ்நிலையிலும் நேர்மறையான சிந்தனையுடன் செயற்படும் ஆற்றல் வந்துவிடும். டேவிட் நாரிஸ் என்பவரின் ‘பணத்தை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பதைவிட நேரத்தை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பது மிக மிக முக்கியம்’ என்ற கூற்றுப்படி, நேர முகாமைத்துவமே அனைத்திற்கும் அடிப்படையாகிறது.
ஒருவர் மிகச்சிறந்த நேர நிர்வாகியாக இருக்க வேண்டுமேயானால், அவர் வேலைக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்கு மாறாக நேரத்தை நிர்வகிப்பதால் செய்யவிரும்பும் விஷயங்களை செய்வதற்கான நேரம் தாராளமாக கிடைக்கும். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரையிலான அனைத்துச் செயற்பாடுகளிலும் விரும்பியோ விரும்பாமலோ நேரம் செல்வாக்குச் செலுத்தும். நேரத்தை சிறப்பாக ஆள தெரிந்தவன் எளிமையான வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்கிறான். அவனுடைய நாளாந்த பயணம் எப்போதும் இயற்கை சமநிலைக்கு ஒத்ததாகவே காணப்படும். அவனது நாளாந்த செயற்பாடுகள் அகக் காரணிகள் புறக் காரணிகளின் தாக்கத்திற்கு உள்ளாகாமல் திட்டமிட்டபடியான செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறும்.
பூமி சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு ஒரு வருடமாகும். பூமி சூரியனை வலம் வரும்போது, நம் வயதில் ஒரு வயது கூடுகிறது. அதாவது ஒரு வருடத்தை இழக்கின்றோம். நாம் எல்லோரும் பூமியில் வாழ்வதால் இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும். நாட்கள், மாதங்கள் பறக்கும். பறந்து கொண்டிருக்கும் நேரத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம் வாழ்வில் உள்ள நேரத்தை மாற்றிக்கொள்ள முடியும். நாங்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை 500 ஆண்டுகள் இருப்பதுபோல சிந்திக்காமல் மிகச் சொற்ப நாட்களிலே எங்களுடைய வாழ்நாள் முடிவடையப் போகிறது எனும் நோக்கத்தில் சிந்திப்போமானால் எங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் மாற்றமடையலாம். அதாவது காலம் தான் இருக்கிறதே பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற அசட்டைதனத்தில் இருந்து விடாமல், நாம் நமது செயற்பாடுகளை முகாமைத்துவஞ் செய்து மேற்கொள்ளும் போது உள மகிழ்ச்சி ஏற்படுவதோடு, அதன் வழி சிறப்பான வாழ்க்கை என்பதும் சாத்தியமாகிறது என்பதாகும்.
வாசிப்பு மனிதரை பூரணமாக்கும் என்ற, அடிப்படையில் தினமும் வாசிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். எதற்காக நேரத்தை செலவிடுகிறோம் என்ற அடிப்படையில் சிந்திக்கும் போது வாசிப்பதற்காக நேரத்தை செலவிடுவது என்பது முக்கியமாகிறது. குறிப்பாக எங்களுடைய அறிவு வளர்ச்சிக்கும் சிந்தனா வளர்ச்சிக்கும் வாசிப்பு என்பது இன்றியமையாததாகிறது. எனவே தினமும் நல்ல புத்தகங்களை வாசிப்பதற்கு சிறிது நேரத்தை ஒதுக்குவது சிறந்தது.
ஆகவே எமது வாழ்வில் நேரத்தை சிறப்பாக முகாமை செய்து வாழ பழகிக்கொள்ளவேண்டும். முதலில் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். எமது நாளாந்த செயற்திட்டங்களை நேர அட்டவணைப்படி செயற்படுத்தும் போது சில சந்தர்ப்பங்களில் சில முக்கியமான வேலைகளை செய்து முடிப்பதற்கான நேரம் போதாதென்றால், ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழுப்பி நான் தேவையற்ற எந்த விடயத்துக்கு அதிக நேரம் ஒதுக்குகிறேன்? என்று இனங்கண்டு தேவையான மிக முக்கியமான விடயங்களுக்கு முதலில் நேரத்தை செலவழித்துக்கொள்வது உயர்வான செயலாகும். ஆகவே நேரத்தை திட்டமிடப்பட்ட முறையில் முகாமை செய்து, வாழ்க்கையை வெற்றிக்கான பயணத்தில் இட்டுச்செல்வோம்.
ச.றொபின்சன்,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.
1 comment
?