தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதனையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையிலும் தற்போது முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றை தடுக்க மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? அல்லது மாநிலம் முழுவதுமே முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்படுமா என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அதேவேளை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் 2.70 லட்சமாக அதிகரிக்கும் எனவும் சென்னையில் எதிர்வரும் ஒக்டோபரில் கொரோனா பாதிப்பு உச்சநிலையை அடையும் எனவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு மூலம் தகவல் வெளியாகி உள்ளமை குறித்தக்கது #தமிழகம் #ஊரடங்கு #முதலமைச்சர் #கொரோனா #ஒக்டோபர்