180
யாழ்.மாநகர சபையின் நடவடிக்கைகளில் முன்னாள் முதல்வர் இ.ஆர்னோல்ட் தலையீடு செய்வது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் மாநகர சபை நடவடிக்கைகளை அவரே தொடர்ந்தும் முன்னேடுக்கின்றாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
யாழ்.மாநகர சபை முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் பதவி வகித்த கால பகுதியில் தனக்கு உறுதுணையாக குழு ஒன்றினை அமைத்திருந்தார். அந்த குழுவில் பணியாற்ற என புதிய ஆளணி ஒன்றினை உள்வாங்கி இருந்தார்.
குறித்த குழு ஆரம்பிக்க முனைந்த போதே சபையில் எதிர்ப்பு கிளம்பி , குழு ஆரம்பித்து , அதற்கு ஆளணி தேவைப்பட்டால் , மாநகர சபையில் ஏற்கனவே உள்ள ஆளணிகளை பயன்படுத்துமாறும் , புதிதாக ஆளணியை உள்வாங்க வேண்டாம் எனவும் சபையில் உள்ள பலரும் கூறி இருந்தனர்.
அதற்கு அப்போதைய முதல்வர் ,இ.ஆர்னோல்ட் , தனக்கு தகுதியான ஆளணி மாநகர சபையில் இல்லை என கூறி சபையின் எதிர்ப்புக்கு மத்தியில் , புதிய ஆளணியை தனக்காக உள்வாங்கி இருந்தார். அவர்களுக்கு சுமார் ஒரு வருட காலமாக மாதாந்த சம்பளம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் மாநகர சபையின் மாதாந்த அமர்வு, பதில் முதல்வர் து.ஈசன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன் போது , முன்னைய முதல்வரினால் அமைக்கப்பட்ட குழுவை கலைக்குமாறும் , அந்த குழுவிற்காக எடுக்கப்பட்ட ஆளணிகளை உடனடியாக இடை நிறுத்த வேண்டும் என சபையில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது,
அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது, ஆனாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவை குழுவை கலைக்க தொடர்ந்து வலியுறுத்தியது.
அதனால் குறித்த விடயம் வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என கோரப்பட்டது. அதற்கும் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்த போதிலும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு தற்போது பதில் முதல்வராக உள்ள , து. ஈசன் வாக்கெடுப்புக்கு சம்மதித்தார்.
சொந்த செலவில் சூனியம்.
அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ப.தர்சானந்த், முதல்வரின் இந்த செயற்பாடானது (வாக்கெடுப்புக்கு சம்மதித்தது) வட்டிக்கு பணம் வாங்கி அந்த பணத்தில் தனக்கு சூனியம் வைப்பது போன்றது என கூறி வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட போது , தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்டவை குழுவை கலைக்க வேண்டும் என வாக்களித்தனர். கூட்டமைப்பினர் கலைக்க வேண்டாம் என வாக்களித்தனர். அதன் போது குழுவை கலைக்க வேண்டும் என 17 வாக்குகளும் , கலைக்க வேண்டாம் என 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனை அடுத்து சபையினால் குறித்த குழு நேற்றைய தினத்துடன் கலைக்கப்பட்டு , அதற்காக உள்வாங்கப்பட்ட ஆளணி நேற்றைய தினத்துடன் இடை நிறுத்தப்பட்டனர்.
ஆர்னோல்ட் சபை நடவடிக்கையில் குறுக்கீடு.
குழு கலைப்பது தொடர்பிலான வாக்கெடுப்பு நடந்து முடிந்து , சபையினால் குழு கலைக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் , சபையினை பதில் முதல்வர் து.ஈசன் தொடர்ந்து முன்னெடுத்து செல்கையில் , முன்னாள் முதல்வர் இ,ஆர்னோல்ட் பதில் முதல்வரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு குழு கலைப்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தியமை மற்றும் குழுவை கலைத்தமை தொடர்பில் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பாவித்துள்ளார் என சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
யாழ்.தேர்தல் மாவட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதனால் , இ.ஆர்னோல்ட் தனது பதவி, அதிகாரத்தை துணை முதல்வரான து.ஈசனிடம் கையளித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய மாதாந்த அமர்வில் நடைப்பெற்ற விடயம் தொடர்பில் சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டு இருந்த போதே தொலைபேசியில் பதில் முதல்வரை தொடர்பு கொண்டு , சபை நடவடிக்கையில் தலையீடு செய்தமை தொடர்பில் உறுப்பினர்கள் பலரும் விசனம் தெரிவித்தனர்.
அதேவேளை , வெளியில் இருந்து சபை நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வது தொடர்பிலும் தமது கண்டனத்தை தெரிவித்தனர். #யாழ்மாநகரசபை #ஆர்னோல்ட் #தலையீடு #ஆளணி
Spread the love