193
சுகாதார விதிமுறைகளை பேணும் முகமாக கையுறைகள் அணியாது ,வெற்றுக்கைகளால் அருகில் வந்து தொட்டு சோதனை செய்தமை மற்றும் உடமைகளை தொட்டு சோதனை செய்தமை தொடர்பில் தனது கண்டனத்தை தெரிவித்த ஊடகவியலாளருக்கு எதிராக நெல்லியடி காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வடமராட்சி மாலு சந்தி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றவர்களை , காவல்துறையினர் கையுறைகள் அணியாது வெற்றுக் கைகளால் தொட்டு சோதனைகளை மேற்கொண்டனர். அதன் போது கூட்டத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களையும் வெற்றுக்கைகளால் அருகில் சென்று தொட்டு சோதனை செய்ததுடன் , அவர்களது உடமைகளையும் வெற்றுக் கைகளால் சோதனை செய்தனர்.
சுகாதார விதிமுறைகளை பேணாத காவல்துறையினரின் இந்த செயற்பாட்டுக்கு ஊடகவியலாளரான ம. மதிவாணன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்தார். அதற்கு காவல்துறையினர் செவி சாய்க்காத நிலையில் , காவல்துறையினரின் செயற்பாடு தொடர்பில் செய்தி அறிக்கையிடும் நோக்குடன் காவல்துறையினரை புகைப்படம் எடுத்த வேளை , ஊடகவியலாளருடன் முரண்பட்டுக்கொண்ட காவல்துறையினர் ஊடகவியலாளர் தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என வழக்கு பதிந்துள்ளனர். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் 30ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றுக்கு சமூகம் அளிக்குமாறும் அறிவுறுத்தி யுள்ளனர்.
நாட்டில் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பேணுமாறு சுகாதார அமைச்சு கடுமையாக ,மக்களை அறிவுறுத்தி வரும் நிலையில் காவல்துறையினர் விதிமுறைகளை மீறி வெற்றுக்கைகளால் சோதனை நடவடிக்கைகளை முன்னேடுத்தற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் விசனம் தெரிவித்திருந்த நிலையில், காவல்துறையினர் தமது தவறை மறைக்கும் நோக்குடன் ஊடகவியலாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் என பலரும் ஆதங்கப்பட்டனர் #சுகாதாரவிதிமுறை #காவல்துறையினர் #ஊடகவியலாளர் #கையுறைகள் #சோதனை
Spread the love