நாம் பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்றவகையில் அனைத்து ஆண்களையும் ஒரு குடைக்குள் கொண்டு வந்து பல குற்றச்சாட்டுக்களை அவர்கள் மீது வைத்து விடுகின்றோம். என்னதான் ஆணாதிக்கம் எனப் பேசிக்கொண்டாலும் ஆண்கள் வரிசையில் பலர் தங்களது அம்மா, மனைவி, சகோதரி என அனைத்துப் பெண்களையும் தங்களுக்கு நிகராக மதிக்கவும் அவர்களுக்குரிய சுதந்திரம் என்னவோ அதை வழங்கவும் செய்கின்றனர். ஒரு பெண் தன்னுடைய கருத்தினை தெளிவாக வெளிப்படுத்த களம் ஒன்றை அமைக்கும் போது அதனைத் தகர்த்தெறிய வெளிக்கிளம்பியிருக்கும் ஆண்களுக்கு மத்தியில் அப்பெண்ணை அந்தக் களத்தின் பின்னர் வேறு உலகம் காணச் செய்வதற்காக பல ஆண்கள் தந்தை, கணவன், சகோதரன் எனப் பலவேடம் பூண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
“கோழி கூவும், கோழி எப்பொழுது கூவியிருக்கிறது. என்னவொரு பெண்ணாதிக்கத்தனம் என்றவகையில் ஒரு பதிவினை நண்பர் ஒருவர் இட்டிருந்தார். அந்தப் பதிவினைப் பார்த்துவிட்டு இதிலாவது பெண்ணாதிக்கம் இருக்கட்டுமே என்றேன். அதற்கு அந்த நண்பர் ஆதிக்கமே வேண்டாம். அனைவரும் சமமானவர்கள்தான் என்றார். அவ்வாறென்றால் எதற்காக இந்தப் பதிவினை இட்டீர்கள் எனக் கேட்டேன். அவரின் பதில் வெறும் நகைச்சுவைக்காக என்றார். நானும் அதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டேன். இருப்பினும் அந்த நண்பர் பெண்களை சமமாக மதிக்கக்கூடியவர் என்பது அவ்விடத்தில் தென்பட்டது. ஆண்களைப் போலவே பெண்களும் சமமானவர்கள். அவர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள். சமத்துவம் என்பது இருக்கிறது என்று பலவாறு தன் கருத்தைக் பதிவிட்டார். இருப்பினும் நான் ஆணாதிக்கம் என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனை யாராலும் மாற்ற முடியாது என்ற வகையில் பேசிக்கொண்டிருந்தேன். அந்த நண்பர் உடனே மாற்ற முடியாததது என்று ஒன்றுமில்லை நாம் தான் அதனை மாற்ற வேண்டும். மாற்ற வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் இருக்கிறது எனப் பேசிக்கொண்டார். ஆணாதிக்கம், பால்நிலை சமத்துவமின்மை என்ற விடயங்கள் மாறுமோ, மாறாதோ என்பது வேறுகதை. ஆனால் அந்நண்பர் ஓர் மனவெழுச்சியுடன் பேசிய கதைகள் அவரை அவ்விடத்தில் ஓர் ஆண்தேவதையாக பார்க்கச் செய்தது.
பெண்கள் மட்டும்தானா தேவதைகளாகப் பார்க்கப்பட வேண்டும். ஆண்களும் தங்களைப் போலவே பெண்களுக்கும் வழிவிட்டு அவர்கள் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் போது தேவதைகளாகத்தான், ஆண் தேவதைகளாகத்தான் பார்க்கப்படுவார்கள். ஒரு பெண் தன் கருத்தை உயர்த்திப் பேசும் போதோ, தன் செயலைப் பயமின்றி ஆணை விட ஒரு படி மேற்கொண்டு செய்யும் போதோ அவள் வாயாடி, ஆட்டக்காரி என்று அடக்கி வைக்க நினைக்கும் ஆண்களுக்கு மத்தியில் இதுவரை பெண்களை சுதந்திரப் பறவைகளாக பறக்கவிடும் ஆண் தேவதைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக வேலை கிடைத்தும் வேலைக்குச் செல்லவேண்டாம் என்ற கணவன்மாரின் ஆணைகளுக்கு மத்தியில் மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு, வீட்டு வேலைகளைச் செய்யக்கூடிய எத்தனை ஆண்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமூகம் நோக்கும் கோணமோ வேறானது. ஏன் ஆண் என்றால் சமைக்கக்கூடாதா?, துணி துவைக்கக்கூடாதா? ஆண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தால் அவர்கள் பலசாலி இல்லை என்று அர்த்தமல்ல. அவர்கள் உழைத்துக் களைத்தவர்கள் தான். தன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு ஜீவன் இருக்கின்றது என்ற நம்பிக்கையில் வாழ்பவர்களாகவும் தன் மனைவியின் விருப்பங்களுக்கு இடமளிப்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். நீதான் அந்த வேலையைச் செய்ய வேண்டும் நான்தான் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்றில்லாமல் உனக்குப் பிடித்தது எதுவோ அதை நீ செய். எனக்குப் பிடித்தது எதுவோ அதை நான் செய்கின்றேன் என்று தங்களுக்குப் பிடித்த வகையில் வாழ்க்கையைக் கொண்டு போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்களை ஆண் தேவதைகள் என்பதில் தவறில்லையே.
வியட்நாமில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர்களில் பலர் தமது நாட்டு நினைவுகளை நெஞ்சில் நிறுத்திக் கொண்டு வாழ்கின்றனர். அந்தப் பலரில் ஒருவரான ஹ{யிங் தங் நுவங் என்பவர் தன் நாட்டு நினைவுகளில் தோய்ந்து ஒரு நூலை எழுதியிருந்தார். அந்நூல் “தான் இழந்த நாடு” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இந்நூலின் ஒருபகுதியான “எனது வியட்நாம் பாட்டி” என்ற தொகுப்பில் பாட்டி என்ற கதாபாத்திரத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒரு கதை எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் தன் நாட்டை நினைவுகூர்ந்து இக்கதையினை எழுதியிருந்தாலும் இக்கதையானது சமூகத்திற்கு ஒரு விடயத்தைச் சொல்லிவிட்டும் செல்கிறது.
இக்கதையில் படித்த ஒரு கல்விமானை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாட்டி என்ற கதாபாத்திரம் நல்ல சுறுசுறுப்பானவராகவும் கலை ஆர்வம் உடையவராகவும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அவரது கணவர் அவருக்கு எதிர்மாறானவகையில் கூச்ச சுபாவமும் விறுவிறுப்பாகப் பேச விருப்பமில்லாத மௌனம் சாதிக்கக்கூடியவராகவும் இருக்கிறார். ஆனால் தன் மனைவிக்குரிய அத்தனை சுதந்திரங்களையும் அவர் வழங்குகிறார். தன் மனைவி செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கண்டு பொறாமை கொள்ளாது பாராட்டக் கூடிய ஒரு நபராக இருக்கிறார். ஒருநாள் இவ்விருவரும் ஹோட்டல் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருந்த வேளையில் பாட்டியின் கணவரது சுபாவத்தைக் கண்டு எள்ளி நகையாடிய ஒருவனை பாட்டி அடித்து விலாசுகின்ற போது அவருக்குள் பயவுணர்வு இருந்தது. இருந்தும் அவர் பாட்டியை கண்டித்துவிடவில்லை. தனக்கு இல்லாத வலிமை தன் மனைவிக்கு இருக்கிறது என்று மகிழ்ச்சியடைகிறார். இக்கதையை இவ்விடத்தில் கொண்டு வந்ததற்கு காரணம் என்னவென்றால் தன் மனைவி தனக்கு மேல் சென்று செயற்பட்டால் அவள் மீது பொறாமை கொள்ளும்; கணவன்மாருக்கு மத்தியில் அம்மனைவிமாரை, அவர்களுடைய கடின உழைப்பைப் பாராட்டி ஊக்கப்படுத்தக்கூடிய ஆண்களும் இப்பாட்டியின் கணவன் போல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய கணவன்மார்கள் தங்களது மனைவிகளுக்கு தேவதைகளாகத்தான் தென்படுகிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் பல அண்ணன்மார்களுக்கு ஒரு தங்கை இருப்பது வழக்கம். அத்தங்கைக்கு ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களது சுதந்திரத்தைப் பறித்து பொத்திப் பொத்தி வளர்க்கும் அண்ணாக்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு தங்கள் உடன்பிறப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றுதான் கூறவேண்டும். இத்தகைய பெண் பிள்ளைகள்தான் பின்னர் தவறான செயற்பாடுகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு மத்தயில்தான் தங்கள் சகோதரிகள் மீது நம்பிக்கை கொண்டு என் தங்கை மீது நம்பிக்கை இருக்கிறது. அவளால் முடியாதது வேறுயாரால் முடியும் என்று கூறி அவர்களுக்குரிய சுதந்திரத்தைக் கொடுக்கின்ற அண்ணாக்களும் இருக்கிறார்கள். இந்த சமூகத்தைப் பார்த்து பிள்ளையை ஒழுங்காக வளர்க்கத்தெரியாதவர்கள், கட்டாக் காலி மாடு மாதரி சுற்றித்திரிகிறதே எனப் பலர் பேசிக்கொள்ளலாம். ஆனால் அப்பிள்ளை எவ்வளவு தான் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும் அதேவேளை சரியான பாதையில்தான் செல்கிறது என்று அப்பிள்ளையின் குடும்பத்திற்கும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ப்பு எவ்விதத்திலும் தவறாமல் இருக்க முடியும். இரண்டும் சுமூகமாக இருக்கும் போது தங்களுக்கு சுதந்திரத்தை அளித்த அண்ணன்மார்கள் அத்தங்கைமார்களுக்கு தேவதைகள்தானே. ஆக நாம் என்னதான் இந்த ஆண்சமூகமே அப்படித்தான் என மொத்தமாக ஆண்கள் மீது பழிபோட்டுக் கொண்டாலும் அந்த ஒருசில அரக்கர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு பெண்ணையும் கண்ணாக மதிக்கக்கூடிய ஆண்கள், அப்பெண்களின் மனதில் ஆண் தேவதைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தெ.பேபிசாளினி
கி. பல்கலைக்கழகம்