எந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள சுயாதீன முஸ்லீம் எழுத்தாளரை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை மீறியதாக தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரம்ஸி ராஸிக்கிற்கு, மருத்துவ வசதிகள் மற்றும் சட்ட உதவிகளை அணுகுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் சிவில் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய குழு ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அவருக்கு மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ள போதிலும் அவருக்கு தேவையான சிறப்பு மருந்துகள் வழங்கப்படாமை காரணமாக ரம்ஸி ராஸிக்கின் உடல்நிலை மோசமடைந்துவருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வைத்து இவ்வாரம் ராஸிக்கை சந்திப்பதற்கு சட்டத்தரணி ஒருவர் முயன்ற போதிலும் கோவிட் 19 வைரஸ்சை காரணம் காட்டி அவரை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக்கா உடுகமவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ஸ்ரீலங்காவில் முஸ்லீம் சமூகத்தை ஒடுக்குகின்ற அனைத்து வகையான இனவாத செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கான ஜிகாத் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் என தெரிவித்து ஒய்வுபெற்ற அரச உத்தியோகத்தரான ரம்ஸி ராஸிக் கைதுசெய்யப்பட்டார்.
இந்தப் பதிவை இட்டு இரண்டு நாட்களின் பின்னர் மற்றுமொரு பதிவை வெளியிட்டிருந்த ரம்ஸி ராஸிக், கற்பனை செய்ய முடியாத அளவு மரண அச்சுறுத்தல் தமக்கு விடுக்கப்பட்டதாகவும் முந்தைய பதிவை தவறாக அர்த்தப்படுத்திய பலர், இனவாத கருத்தை விதைத்ததாக தம்மீது குற்றஞ்சாட்டியதுடன் கைதுசெய்து சிறைவைக்குமாறு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ரம்ஸி ராஸிக் இலங்கை முஸ்லீம்களின் அடிப்படைவாதத்தையும் இனவாதத்தையும் விமர்சித்த வரலாற்று காணப்படுவதையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள செயற்பாட்டாளர்கள் குழு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முற்போக்கான முஸ்லீம்கள் மீது வெளியில் இருந்தும் முஸ்லீம் சமூகத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கேள்விக்கு உட்படுத்துவதுமாறும் அதனை எதிர்கொள்வதற்கான கருத்தியல் மற்றும் அறிவுசார் போராட்டத்தை முன்னெடுக்குமாறே ரம்ஸி ராஸிக் தனது பதிவின் ஊடாக கூற முற்பட்டார் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத் தெளிவு இல்லாம், பாரபட்சமான முறையில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் இணக்கப்பாட்டு சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் இணக்கப்பாட்டுச் சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் ஸ்ரீலங்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
வன்முறையில் ஈடுபடுவோரை பொறுப்புகூற வைப்பதை நோக்காக கொண்ட அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாட்டுச் சட்டம், அண்மைக்காலமாக அரசு மற்றும் அதன் கொள்கையை விமர்சிப்பவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிவில் சமூகத்தின் ஆசிர்வாதத்துடன் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்ட கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் விருது பெற்ற எழுத்தாளர் ஷக்திக்க சத்குமாரவை நான்கு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைப்பதற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் இருந்த அரசியல் தலைவர்களைப் போன்று, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமை தொடர்பில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் ரம்ஸி ராஸிக்கை விடுவிக்குமாறு கோரி கடிதங்களையும் அனுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.