மனிதர் அவர்தம் உடல் இயக்கமும், வாழ்வியல் இயக்கமும் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளின் அடிப்படையில் இடம்பெறும் நிகழ்வு தான் என்பது, தூண்டலுக்கு ஏற்ப துலங்கல் என்ற மனிதரின் அடிப்படை உடலியக்க செயற்பாட்டின் ஊடாக வெளிப்பட்டு நிற்கும் உண்மை நிலைப்பாடாகும். இந்த அடிப்படையில் நோக்கும்போது தூண்டல் – துலங்கல் என்ற இயல்பொத்த செயற்பாட்டில் கற்றல் – கற்பித்தல் ஆகிய செயல்முறைகளின் செல்வாக்கு நிலையினை அவதானிக்கலாம்.
தூண்டல் காரணி ஒன்றாக அமைகின்ற போதும், துலங்கல் என்பது அவரவர் அனுபவம் சார்ந்து, இயல்பு நிலை சார்ந்து, சூழல் சார்ந்து, பிறப்புரிமை சார்ந்து மாறுபட்டு அல்லது வேறுபட்டு அமையும் என்பதும் இயல்பான நிலைப்பாடாகும்.
ஆக மனிதரின் உடல் இயக்க அடிப்படையே, அதன் துலங்கல் முறையில் அல்லது செயற்பாட்டில் பன்மைத்துவத்தை ஏற்கின்ற நிலையில், உடல் இயக்க நிலையின் சாரமாக அல்லது மையமாக தொழிற்படும் கற்றல் – கற்பித்தல் என்பதும் பன்மைத்துவத்தை ஏற்கின்ற பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகின்ற செயல் ஒழுங்காக அமைதலும், அமையப் பெறுதலும் தேவைப்பாடுடையதாகிறது.
கற்றல் என்ற செயற்பாடு அதன் அடிப்படை நிலையில், நூலறிவு, அனுபவ அறிவு, சமகால நிகழ்வுகளை புரிந்து கொள்ளலும், புரிதலுக்கு ஏற்ப செயற்படும் சமயோசித நிலையும் என இன்னபிற விடயங்களோடு தொடர்புடைய ஒழுங்கு என்ற நிலைப்பாட்டில் நின்றும் சிந்திக்கின்ற பட்சத்தில், இயல்பு நிலையிலேயே கற்றல் என்பது பன்மைத்துவ கூறுகளை உள்ளடக்கிய செயல் ஒழுங்கு என்பது தெளிவாகிறது.
ஆக, கற்றல் என்ற பன்மைத்துவ செயலொழுங்கு, கற்பித்தல் என்ற இன்னொரு நிலையில் பிரயோகிக்கப்படும் போது பன்மைத்துவத்தை ஏற்றலும், அங்கீகரித்தலும் இயல்பாக இடம்பெற வேண்டிய நிகழ்வுகளே. ஆயினும், சமகால சூழல் என்பது கற்றல் – கற்பித்தல் என்ற இயல்பாகவே பன்மைத்துவத்தை ஏற்கின்ற செயலொழுங்குகளை நூலறிவு அதாவது பரீட்சையோடு மட்டிட்டு நிற்கின்ற அறிவு என்ற ஒற்றைக் குவிமையமாகவே வடிவமைத்திருக்கின்ற நிலையையே அவதானிக்க முடிகிறது.
விளக்கி சொல்லப்போனால், இன்றைய நிலையில் கல்வி என்பது வியாபாரமாக மாறி போன அவலச் சூழலில், ஏற்கனவே காலனியக்காரர்கள் வடிவமைத்து தந்ததை வைத்துக் கொண்டு, இன்றளவில் உரு கொண்டு நிற்கின்ற கல்வித் திட்ட செயலொழுங்கில் கற்றலும் – கற்பித்தலும் பரீட்சை சார்ந்தும், புள்ளிகள் சார்ந்தும் மட்டிட்டு நிற்கின்ற நிலையின் வெளிப்பாடு என்பதாகும்.
உண்மையில், கற்றல் என்பது அதன் பிறப்பிலே பன்மைத்துவக் கூறுகளை உடையது எனினும், சமகாலத்தில், அத்தகைய பன்மைத்துவங்களை மறுதலித்து, பரீட்சார்த்தம் அல்லது சான்றிதழ் மையப்பட்ட கற்றல் என்ற ஒற்றை குவிமையமாகவே, கற்றல் என்ற பன்மைத்துவ செயலொழுங்கு வடிவமைக்கப்பட்டு நிற்கின்ற நிலையை பரந்தளவில் அவதானிக்க முடிகிறது.
இத்தகைய ஒற்றை குவிமையப் பார்வையில் கற்றலினுடைய அடிப்படை இயல்பு மறுதலிக்கப்படுவதோடு, சமூகம்சார் எதிர்வினையாற்ற வேண்டிய தேவையை அல்லது சிந்தனையை பாழ்படுத்திவிட்ட நிலையையே அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில்தான் பரீட்சை – புள்ளி என்ற பாதையில் பன்மைத்துவ இயல்புடைய மாணாக்கரும் அடையாளமற்றுப்போய்விடுகின்றனர். குறிப்பாக, எவ்வாறு கற்றல் என்ற பன்மைத்துவ செயலொழுங்கு பரீட்சையோடு மட்டிட்டு நிற்கின்ற அறிவாக மாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அவ்வாறுதான் கற்பித்தல் என்ற செயலொழுங்கும் போட்டிப்பரீட்சை அல்லது புள்ளியை மையப்படுத்தியதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய ஒற்றை குவிமையப் பார்வை, பன்மைத்துவ இயல்புடையவர் வெளிப்பாட்டிற்கு தடையாக இருப்பதோடு, பன்மைத்துவ இயல்புடையவரை பரீட்சை – புள்ளி என்ற அடிப்படையில் மட்டிட்டு, படித்தவர், பாமரர் என்ற பிரிவினையையும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஆக இத்தகைய சமகால வெளியீடுகள், கற்றல் என்ற செயலொழுங்கின் பன்மைத்துவ நிலையின் புரியாமையினது நிலைப்பாடு என்பது தெளிவாகிறது. பன்மைத்துவக் கற்றல் என்பது எவ்வாறு மறுதலிக்கப்பட்டிருக்கிறதோ, அவ்வாறே பன்மைத்துவக் கற்பித்தல் என்பதும் மறுதலிக்கப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகிறது. எப்படி, எதை ஃஎன்ன என்ற இரு வினாக்களை முன்னிறுத்தி செயற்படவேண்டிய கல்வியியல் – கற்பித்தல் செயல்பாடு, பரீட்சை – புள்ளி என்ற ஒற்றை குவிமைய நோக்குடையதாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கு இடமின்றி தகவல் வழங்கலும் பெறலும் என்ற முறையில் கற்பித்தல் செயன்முறை இடம் பெறுவதோடு, அசாதாரண சூழல் ஒன்றிலும் அவரவர் சுயம் சார்ந்து செயற்படுகின்ற நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைகிறது.
ஏற்கனவே சொல்லப்பட்டது போல, கற்றல் என்பது நூலறிவு, சமயோசித சிந்தனை, சமகால அறிவு, சூழல்சார் அறிவு, அனுபவ அறிவு என இன்னபிற விடயங்களோடு தொடர்புற்று, பன்மைத்துவமுடையதாக இருக்கிறதோ, அதேபோல் இத்தகைய பன்மைத்துவங்களை விளங்குவதற்கும், புரிவதற்குமான செயலொழுங்காக கற்பித்தல் முறையும் முன்னெடுக்கப்பட வேண்டும். இத்தகைய பன்மைத்துவ கற்பித்தல் முறைமை தான், பன்மைத்துவ இயல்புடையோர் வெளிப்படுகைக்கும் களமாக அமையும். ஆனால் நடைமுறை கற்பித்தல் என்பது, பரீட்சைக்குத் தயார்படுத்தல் என்ற குறுகிய நோக்கோடு மட்டிட்டு நிற்கின்ற நிலையையே அவதானிக்க முடிகிறது.
கற்றல் – கற்பித்தல் என்பவற்றின் இறுதி நோக்கு என்பது, பரீட்சை சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருப்பதால், இயல்பாகவே பன்மைத்துவ இயல்புடையோர் வெளிப்படுகைக்கு இடமில்லாது போவதுடன், சிறந்த பெறுபேறு அல்லது புள்ளி பெறுபவர் கற்றவர் அல்லது படித்தவர் என அங்கீகரிக்கப்படுதலும், மற்றவர் நிராகரிக்கப்படுதலும் சர்வசாதாரணமாக நிகழ்ந்தேறுகிறது. குறிப்பாக கற்றவர் அல்லது படித்தவர் என்ற அளவீடு ‘சான்றிதழ்’ என்ற ஒன்றை வைத்து மட்டிடப்படுவதும், இதனடிப்படையில் ஏனைய அறிவுடைமையாளர்கள் அல்லது திறனுடையவர்கள் புறக்கணிக்கப்படுதலும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது.
சான்றிதழ் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அறிவுடைமை என்பது அளவிடப்படுகின்ற நிலையில், பன்மைத்துவ இயல்பிற்கும், இயல்புடையோருக்கும் வாய்பற்றுப் போகிறது. ஆக கற்றல் சூழலில் ‘சான்றிதழ்’ கற்றவர் என்ற வகையீட்டை நிர்ணயிப்பதில் பிரதான நிலை பெறுகின்றமை தெளிவாகிறது. இந்த அடிப்படையில், போட்டிப்பரீட்சையில் தோல்வியுற்றவர் படிக்காதவர் என்ற வகையீட்டுக்குள் தள்ளப்படுதலும் சர்வசாதாரணமாக நிகழ்ந்தேறுகிறது. இந்நிலையின் தொடர்ச்சியாகவே, ஏனைய ஆளுமைகள் புறக்கணிப்படுதலும், சூழல் சார் அறிவு உட்பட ஏனையவை அறிவுடைமை அல்லது கற்றலாகக் கருதப்படாமையும் நிகழ்ந்தேறுகிறது.
எழுத்தறிவு அல்லது பெறுபேறு என்பது கற்றலின் ஒரு பகுதியே தவிர. அதுவே முழுமையான கற்றல் எனக் கொள்ளப்படுதல் என்பது பொருத்தப்படாற்ற சிந்தனையின் வெளிப்பாடு என்ற தெளிவுநிலை ஏற்படுகின்ற பட்சத்தில், கற்றலும் கற்பித்தலும் பன்மைத்துவத்தை ஏற்கின்ற அல்லது கற்பிக்கின்ற செயற்பாடு என்பது தெளிவாகும். இத்தகைய தெளிவு நிலை பிறக்கையில், சான்றிதழ் மையப்பட்டு, அறிவுடைமையை நிர்ணயித்தல் என்ற செயன்முறை கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு ஏனைய அறிவுடைமைகளை அங்கிகரித்துக் கொள்ளலும் இயல்பாக இடம்பெறும். இத்தகைய இயல்பு நிலை, பண்மைத்துவ கற்றலுக்கும் கற்பித்தலுக்குமான தேவையை வலுவாக உணர்த்தி நிற்கும். இந்நிலையில் படித்தவர் பாமர் என்ற காலனிய மனோபாவம், சமுகத்திலிருந்து களைத்தெறியப்படும்.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.