282
ஜனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது , அவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்
எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமானது 10 ஆண்டுகளை கடந்து 11 வது ஆண்டில் தொடர்கின்றது . எங்களது உறவுகளை வீடுகளிலிருந்து மனைவி ,தாய் , பிள்ளைகள் அழ அழைத்து செல்லப்பட்டவர்களும் . மாடுகட்ட சென்றவர்களையும் கடத்தி சென்றுள்ளனர். எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்து என்று உண்மை எங்களுக்கு தெரியும் வரை போராட்டம் தொடரும்.
அண்மையில் இராணுவ தளபதி சவேந்திர டீ சில்வா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார். ஏன் அப்படி கூறியிருந்தார் என எனக்கு தெரியாது? எனது கணவரை 2009-05 -17 திகதி எனது கையால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். ஆயிரக்கணக்கான சரணடைந்த உறவுகளை பேரூந்துகளில் ஏற்றிச் சென்றதை என் கண்ணால் கண்டேன்.
உயிருடன் ஒப்படைத்த என் உறவுகள் தற்போது இல்லை என கூறுவதற்கு இராணுவ தளபதிக்கோ சனாதிபதிக்கோ இல்லை எங்களுக்கு இவர்களே பதில் கூறவேண்டும்.
எமது போராட்டத்திற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்காது இருப்பதினாலே சர்வதேசத்திடம் கையேந்தி நிற்கின்றேன். நூற்றுக்கணக்கான உறவுகள் காணாமல் போன உறவுகளுக்காக காத்திருந்து உயிரிழந்துள்ளனர் .
இனிமேலும் இந்த நாட்டில் எந்த ஒரு உறவும் காணாமல் ஆக்கப்பட கூடாது . என் கணவன் இருந்திருந்தால் நான் நான் வீதியில் நின்றிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இராணுவ தளபதியும் சானாதிபதியும் எவ்வித சாக்கு போக்குகளை சொல்லாது எமது சந்ததியை காப்பாற்றுங்கள்.
சனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது அவர் சனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது. இனிமேல் சனாதிபதி யின் ஆட்சி காலத்தில் தமிழ் , சிங்கள , முஸ்லிம் என எந்த உயிரும் காணாமலாக்கப்பட கூடாது என தெரிவித்தார். #உறவுகள் #காணாமல்ஆக்கப்பட்டது #சனாதிபதி #தம்பிலுவில்
Spread the love