வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் வருவோர் 2 வாரம் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் விதிமுறை எதிர்வரும் 10ம் திகதி முதல் கிடையாது என அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் கிராண்ட் ஷொப்ஸ் தெரிவித்துள்ளார்.
50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் வருவோருக்கு 2 வார கட்டாய தனிமைப்படுத்தல் விதிமுறை கடந்த மாதம் 8ம் திகதி முதல் அமுலில் இருந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னணி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் பாதித்தோர் எண்ணிக்கை 2.85 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பிரித்தானியாவில் இன்று சனிக்கிழமை முதல் அங்கு விடுதிகள், உணவு விடுதிகள் தற்காலிகமாக திறக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது #பிரித்தானியா #தனிமைப்படுத்தல் #போக்குவரத்துத்துறை #கொரோனா