நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் மூலம் எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என வாக்குறுதி அளிக்கிறேன். இதை நம்புபவர்கள் எனக்கு வாக்களிப்பது தொடர்பில் சிந்தியுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
யாழில் நேற்றைய தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசு கட்சிக்கு இன்னொரு பெயர் சமஸ்டி கட்சி. தசாப்த காலங்களில் சமஸ்டியை எதிர்த்தவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். ஆனா இன்று அவர்களும் சமஸ்டியை பெற்று தருகிறோம் என சைக்கிளில் வருகிறார்கள். சமஸ்டி மூலம் தீர்வினை பெற முடியும் என நம்புபவர்கள் எம்முடன் இணைந்து பயணிக்க முடியும். சமஸ்டி மூலம் எமக்கான ஆட்சியை ஏற்படுத்துவோம்.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை கொண்டு முதலமைச்சராக முதலமைச்சர் கதிரையில் இருந்தவர் என்று தான் முன்னாள் நீதியரசரை சொல்ல முடியும். முதலமைச்சர் என சொல்ல முடியாது உள்ளது. வடமாகாண சபையின் ஆட்சி காலம் முடிவடைந்து ஒரு கிழமைக்குள் அவர் கட்சி ஆரம்பித்துள்ளார். ஆட்சி காலத்தில் கட்சி ஆரம்பித்திருந்தால், முதலமைச்சர் கதிரை இல்லாமல் போயிருக்கும். அவரது கட்சி கொள்கை என்னவென்று தெரியவில்லை.
பிரபாகரன் ஆயுதத்தால் பெற முயற்சித்ததை தான் சுமந்திரனும் பெற முயற்சிக்கின்றார் என சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் சில தமிழ் ஊடகங்கள் இங்கே மாறி சொல்கின்றார்கள். தமிழ் தேசியத்திற்கு எதிரானவர் சுமந்திரன் எனவும், தேசியத்தை காக்க சுமந்திரனுக்கு வக்களிக்காதீர்கள் எனவும் சொல்கின்றார்கள்
போராட்டங்களை , தியாகங்களை பயன்படுத்தி வாக்கு பெற மாட்டேன். அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பவன் நான். அவர்களின் தியாகங்கள், அர்ப்பணிப்புகளை பயன்படுத்தி வாக்கு பெற முயல்பவர்களே அவர்களை கொச்சைப்படுத்துபவர்கள்.
எனக்கு ஆயுதம் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இருந்திருந்தால் 83ஆம் ஆண்டு யாழ்ப்பணத்திற்கு அகதியாக வந்த போதே ஆயுதம் தூக்கியிருப்பேன். ஆயுதம் எடுத்து தான் உங்களுக்கு உரிமை பெற்று தருவேன். என வாக்குறுதி தரவில்லை. ஆயுதம் எடுத்து தான் உரிமையை பெற முடியும் என சிந்தித்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம்.
நான் உங்களுக்கு தரும் வாக்குறுதி ஆயுதம் இல்லாமல் வன்முறை இல்லாமல் அஹிம்சை மூலம் ராஜதந்திர நகர்வுகள் மூலம் எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என வாக்குறுதி அளிக்கிறேன். இதை நம்புபவர்கள் எனக்கு வாக்களிப்பது தொடர்பில் சிந்தியுங்கள் என தெரிவித்தார். #வாக்குறுதி #ஆயுதம் #சுமந்திரன் #தமிழரசு