210
யாழ்ப்பாணம் நவாலி சென்பீற்றர் தேவாலயத்திற்கு செல்வதற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று மானிப்பாய் காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை மீள உருவாக்க முற்படுகின்றமை, சென்பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக 150 இற்கும் அதிகமானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளமை போன்ற தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்து மானிப்பாய் காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதேவேளை அவரை அங்கு செல்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலையான சிவாஜிலிங்கம் தாம் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யப்போவதில்லை எனவும் காவல்துறையினர் மன்றில் கூறியது போன்று எந்த நடவடிக்கையிலும் தாம் ஈடுபட போவதில்லை என கூறினார். அதனை அடுத்து காவல்துறையினர் மன்றில் முன் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் அருகில் உள்ள முருக மூர்த்தி ஆலயம் மீது விமானப்படையினர் வீசிய குண்டு வீச்சில் 65 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 150 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
கொல்லப்பட்ட பொது மக்களின் நினைவாக நாளை வியாழக்கிழமை காலை முருக மூர்த்தி ஆலயத்திலும், மாலை தேவாலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று , கொல்லப்பட்டவர்களுக்கு நினைவஞ்சலியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #நவாலி #சென்பீற்றர்தேவாலயம் #ஆர்ப்பாட்டம் #நீதிமன்றம் #சிவாஜிலிங்கம் #விமானப்படையினர் #குண்டுவீச்சு
Spread the love