வடக்கு மாகாணத்தில் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு பகல் வேளையில் அனுமதி வழங்கப்படக் கூடாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் பல டிப்பர் வாகனப் போக்குவரத்தால் இடம்பெறுகின்றன என்று சுட்டிக்காட்டி புதிய நடமுறையைக் கொண்டு வருமாறு வலி.தெற்கு பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் தவராசா துவாரகன், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;
வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை கனரக வாகனங்களால் இடம்பெறுகின்றன. குறிப்பாக டிப்பர் வாகனங்களால் விபத்துக்கள் இடம்பெறுகின்றன. மணல் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திய நிலையில் சட்டத்துக்குப் புறம்பான மணல் கடத்தல்கள் பகல் வேளையிலேயே இடம்பெறுகின்றன.
கனரக வாகனங்கள் வீதிகளில் பயணிக்க இரவு வேளையில் மட்டுமே முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையை மீளவும் நடைமுறைப்படுத்துவதனால் பொதுமக்களின் நடமாட்டமற்ற இரவு வேளைகளில் விபத்துக்களைக் குறைக்க முடியும்.
இதேவேளை, இளைஞர்கள் கூடி நண்பர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தினால் அவர்கள் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எனவே அத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #டிப்பர் #கோத்தாபய #வடக்குமாகாணம் #மணல்கடத்தல்கள் #விபத்து