இலங்கையில் நேற்று மாத்திரம் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அந்தவகையில் நேற்றைய தினமே இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த உதவியாளர்கள் மூவர் உட்பட 286 பேரும் வெலிகட சிறைச்சாலை கைதி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனையவர்களில் 9 பேர் இந்தியாவிலிருந்தும், 3 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தும் மற்றுமொருவர் பாகிஸ்தானிலிருந்தும் வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை, கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 342 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று உறுதிப்படுத்தப்பட்ட 300 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1980 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் 463 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #இலங்கை #தொற்றாளர்கள் #வெலிகட #கந்தகாடு