குறுந்திரைப்படங்கள் பார்ப்பது எனது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பார்த்த குறுந்திரைப்படம்தான் மாசறு. இப்படம் யாழ்ப்பாணத்தில், திரு.கு.உதயரூபன் என்பவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடனும் இடம் பெயர்ந்து ஒரு ஊரில் வசித்து வருகின்ற போது அப் பெண் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியே இக் கதை கூறுகின்றது. நம்முடைய சமூகம் தமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முனையாமல், பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணில் இருக்கும் துரும்பைத்தான் எடுக்க துடி துடிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சினை பக்கத்து வீட்டில் ஏற்பட்டு விட்டால் அதுவும் பெண்களுக்கு எதுவும் என்றால் அதனை நடு வீதிக்கு இழுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதே வழக்காகிற்று. நாலு பேருக்கு நல்லது செய்யா விட்டாலும் உபத்திரமாக இருக்காமல் இருந்தாலே புண்ணியமாக இருக்கம்.
கதைக்களம்
போரில் கணவனை இழந்த ஒரு பெண் சமூகத்தின் பார்வையில் எப்படிப் பார்க்கப்படுகின்றார் என்பதுதான் இதன் சாராம்சம். போரில் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த ஒரு இளம் பெண் தன் இரு குழந்தைகளுடன் ஒரு சிறு கிராமத்தில் வசித்து வருகின்றார். அப்போது அப் பெண்ணின் மேல் அயல் வீட்டுப் பெண்கள் ஒரு கண் வைத்திருந்தனர். ஒருநாள் இவர்கள் தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இவர் வீட்டிற்கு இருவர் வந்திருப்பதாக ஒரு வயோதிபர் அழைப்பு விடுகின்றார். இவளும் செல்கின்றார். இதை அயல் வீட்டு மூன்று பெண்கள் பார்த்துப் புறம் பேசிக் கொண்டே இருப்பர். இப் பெண்ணிடம் ஒரு ஆண் அடிக்கடி வருவதை இவர்கள் பார்க்கின்றனர். இவளிடமும் அதிகமாக பணப் புழக்கம் ஏற்படுகின்றது. இது அவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. இவள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதாக நினைத்து வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். தங்களுடைய குழந்தைகளுக்கும் இவள் தவறானவள் அவள் குழந்தைகளுடன் சேர வேண்டாம் என பிஞ்சு குழந்தைகள் நெஞ்சில் நஞ்சை விதைக்கின்றனர். இந்தப் பெண் ஒரு நாள் கடைக்கு வந்து செல்லும் வழியில் வேறு இரு ஆண்கள் அவளை இடைமறித்து சேட்டை செய்கின்றனர். அவள் ஒன்றும் பேசாமல் செல்கின்றாள். அவர்கள் இருவரும் அவள் வீட்டிற்கு வந்து அவள் உடை மாற்றும் வேளை எட்டிப் பார்த்து போனில் போட்டோ எடுக்கின்றனர். சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்கும் போது இவர்கள் ஓடுகின்றனர். அச்சமயம் இவள் பதட்டத்துடன் நிற்கைளில் பக்கத்து வீட்டுக் காறி பார்த்து அதை தவறாக புரிந்து எல்லோரையும் அழைத்து அவளை வாய்க்கு வந்தபடி திட்டுகின்றார்கள். பின் இவள் அவமானம் தாங்க முடியாமல், தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் Àக்கு மாட்டி சாக விழைகையில் அவளை காப்பாற்றி வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவள் உயிர் பிழைக்கின்றாள், நடந்தவற்றை வைத்தியரிடம் கூறுகின்றாள். வைத்தியரின் ஆலோசனை அவளுக்குக் கிடைக்கின்றது. பின் அயலவருக்கு உண்மை நிலவரம் தெரிய வருகின்றது. அவள் சமூகத்தின் பார்வையில் நல்லள் ஆக்கப்படுகின்றாள் அத்தோடு படம் நிறைவடைகின்றது. இன்று நம்மைத் Àற்றும் சமூகம்தான் நாளை நம்மை போற்றும் என்பதை இப்படம் உணர்த்தி நிற்கின்றது.
இப்படத்தில் கையாளப்பட்டுள்ள வட்டார மொழி வழக்குகள் அச் சமூகத்தை முன்னிறுத்திக் காட்டுவது சிறப்பாக உள்ளது.
நம்முடைய வாழ்வியலில் ஏற்படும் ஒரு சமூகவியல் பிரச்சினையினை கருவாகக் கொண்டு களம் அமைத்தமை வரவேற்கத்தக்கது. இது போன்று நம் பண்பாட்டு வாழ்வியல் சார் அம்சங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். நம் யதார்த்தம் உலகறிய பறைசாற்றப்பட வேண்டும்.
இப் படத்தில் ஒரு கிராமிய சூழல், நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அச் சூழலுக்கு ஏற்றதாக படைக்கப்பட்டுள்ளமை படைப்பாளியின் கற்பனை யதர்த்தத்தை தோற்றுவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அதிக கிராமப்புறங்களில் தோட்டத் தொழில் புரிபவர்கள், இதில் வரும் வருமானத்தைக் கொண்டே தமது இயல்பு வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர் என்பதைப் புரிய வைக்கின்றது.
அத்தோடு இப் படம் ஆண்களுக்கு தம் மறைவின் பின்னர் தம் மனைவியர் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதையும் முன்னெச்சரிக்கின்றது.
இப்படத்தில் இயற்கைச் சூழல் கதைக் களமாகக் கொள்ளப்பட்டது வரவேற்கத்தக்கது. சாதாரண கிராமிய வாழ்வியல் ஒவ்வொரு காட்சியிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உம்- வீடுகள், வீட்டு வேலிகள், வீதியோரக் கடைகள், கிராமிய வாழ் பாத்திரங்கள், உடைகள், ஒப்பனைகள், வீட்டுத்தோட்டங்கள்….
பக்கத்து வீட்டுப் புதினம் பார்ப்பதற்கு மீனை வாங்கிய படி தோழியின் வீட்டிற்கு வரும் காட்சி இயல்பு நிலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சம்பவங்கள் கோர்க்கப்பட்ட விதம் கதைக்கு தனிச் சிறப்புக் கொடுக்கின்றது. தூக்கு மாட்டுதல், பின் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றுதலோடு ஆரம்பிக்கும் காட்சி விறு விறுப்பை ஏற்படுத்தியது. இங்கு பிரச்சினையுடன் படம் தொடங்குகின்றது.
பார்வையாளர் மத்தியில் கேள்வியை எழுப்பி, சந்தேகத்தை தோற்றுவித்து, இரக்கப்பட வைத்து, குழப்பத்தில் ஆழ்த்தி, பின்னர் தெளிவு பெற வைப்பதாக இதன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆடம்பரமான ஒளி, ஒலிகள் இதில் பயன்படாமை கதைக்கான சூழலை உண்மையாக உணர வைத்தது. உம்- அவள் வ்டு ஒரு ஓலைக் குடிசை. அதற்குள் குனிந்துதான் செல்ல வேண்டும் அவ்வாறு இருக்கும் போது அதற்குள் ஒளியின் கதிர் வீச்சு செல்லும் வேகம் குறைவாக இருக்கும். அதற்கமைய கமறா பதிவு இடம் பெற்றுள்ளமை அழகை, எழிமைத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
ஓவ்வொரு சம்பவங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள இசை அல்லது ஒலிகள் அச்சம்பவங்களை உண்மையாக உணர வைத்துள்ளது. உம்- காலையில் கதிரவன் ஒளி வீசுகையோடு பாடசாலைக்கு செல்லும் காட்சி.
அர்த்தமற்ற எதையோ தேடிக்கொண்டு ஓய்வு இல்லாமல் அலையும் இளம் தலைமுறைக்கும், எதிர்கால சந்ததிக்கும் நமது பண்பாட்டை அடையாளம் காண வைக்கும் காட்சிகள் வாழ்வியல்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளமை நன்மையேபயக்கும். உம்- பழங்கஞ்சி சாப்பிடும் பழக்கம்.
பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்பதை இதில் வரும் சம்பவங்கள் அடையாளப்படுத்துகின்றது. பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்ற நிலை ஏற்படக் காரணம் என்ன? இதற்குள் இருக்கும் மறைமுக ஆணாதிக்க செயற்பாடு எதுவாக இருக்கும்?
‘விதவை விதவை எண்டு அப்பாவியா வெளில காட்டிக் கொண்டு உள்ள நல்ல கூத்துத்தான் நடக்கிது’, ‘ஆழப்பாரன் மினுக்கிக் கொண்டு வாறத’ போன்ற வாய் பேச்சுக்கள் பொறாமைக்கான குறியீடாக உள்ளது. அவ்வாறு பொறாமை ஏற்படுவதற்கு காரணம் என்ன?
தான் பெற்ற பிள்ளை வந்து ‘நீங்க கூடாதாம்… அம்மா! நீங்கள் உண்மையாவே கூடாதா?’ என்று தாயிடம் கேட்கும் போது தாய் உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்? தாயின் வயிற்றில் இருக்கும் போது நச்சுக் கொடிக்குள் அகப்படாத குழந்தை, வெளியில் வந்து இந்த சமூகத்தின் நச்சு வசையினால் ஆட்கொள்ளப்படுகின்றது. இங்குதான் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் இந்த சமூகம் சூன்னியம் வைக்கின்றது என்று கூறலாம்.
‘குண்டுக்குத் தாக்குப் பிடீத்த எங்களால இங்க இவங்கட வாய் வார்த்தைக்குத் தாக்குப் பிடிக்க ஏலாம இருக்கு’, ‘வறுமையைத் தாங்கிக் கொள்ளலாம் அவமானத்தை எப்படித் தாங்கிக் கொள்வது?’ போன்ற வசனங்கள் ஒரு பெண்ணின் உளம் கசக்கிப் புளியப்பட்டு இயலாமையில் வரும் வார்த்தைகளாகவே உணர கூடியதாக உள்ளது.
ஒரு பிறந்த குழந்தைக்கு அதன் தாய் இதுதான் உன் அப்பா,பாட்டி, பாட்டன் என்று திரும்பத் திரும்ப சொல்லும் போது அதை அக்குழந்தை உண்மையாக்கிக் கொள்கின்றது. ஒரு பொய்யினைத் திரும்பத் திரும்ப நாம் சொல்லும் போதோ அல்லது செய்யும் போதோ அது உண்மையாகின்றது. அது போலதான் நம் சமூகத்தில் பல சம்பவங்கள் நடத்தப்படுகின்றது. தவறான எண்ணங்களை விடுத்து நல்லதையே சிந்திப்போம், நல்லதையே செய்வோம்.
அ.ஆன் நிவேத்திகா