13ஆம் நூற்றாண்டில் குருநாகல் இராஜ்ஜியத்திற்கு சொந்தமான தொல்பொருள் மதிப்பு மிகுந்த கட்டடங்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு கலாசார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய இந்த தொல்பொருள் தளத்திற்கு சேதம் விளைவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திரவினால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவராக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க செயற்படவுள்ளதுடன், குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க, தொல்பொருளியல் பேராசிரியர் டி.பீ.குலதுங்க, கலாசார அமைச்சின் பிரதி பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க, கலாசார நிதியத்தின் பணிப்பாளர் கட்டிடக்கலைஞர் சுமேதா மாதொட ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்கும் அங்கத்தவர்கள் ஆவதுடன் இம்மாதம் 23ஆம் (2020.07.23) திகதிக்கு முன்னதாக இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க எதிர் பார்க்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகரில் அமைந்துள்ள இந்த சேதப்படுத்தப்பட்ட கட்டடம் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொல்பொருள் இருப்பு என கருதப்படும் ஒரு நினைவுச் சின்னமாகும் என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இது 13ஆம் நூற்றாண்டில் குருநாகல் இராஜ்ஜிய காலப்பகுதிக்கு சொந்தமான வன ராஜ சபை மண்டபமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. #குருநாகல் #தொல்பொருள்சின்னங்கள் #சேதம் #மகிந்தராஜபக்ஸ #நினைவுச்சின்னம்