Home இலங்கை ராஜபக்ச ஆட்சியின் கீழ் தொல்பொருள் இடங்களின் தலைவிதி குறித்து பௌத்தர்களுக்கு சந்தேகம்

ராஜபக்ச ஆட்சியின் கீழ் தொல்பொருள் இடங்களின் தலைவிதி குறித்து பௌத்தர்களுக்கு சந்தேகம்

by admin

ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் தலைமையிலான அரசாங்கம் பௌத்த  பாரம்பரியங்களை பாதுகாக்கும் என மக்கள் வைத்த நம்பிக்கை சிதைந்துவிட்டதாக, சிங்கள பௌத்த அமைப்பு ஒன்று  கவலை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதாக உறுதியளித்து, பிரசாரம் செய்த ஜனாதிபதி தற்போது அதற்கு நேரெதிராக செயற்படுவதை மக்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என, ஜூலை 17ஆம் திகதியான இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், ஹெல பொது சவிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நகரமான குருநாகல்லில், இரண்டாம் புவனேகபாகு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பிரதமர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளமைத் தொடர்பில் பொதுமக்கள் சந்தேகம்கொள்வது நியாயமானது எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

“பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் தற்போதைய புத்த சாசன மற்றும் கலாச்சார அமைச்சரின் தேர்தல் மாவட்டத்தில் இதுபோன்ற விடயங்கள் இடம்பெறக்கூடாது. மேலும், தனது தொகுதியில் இத்தகைய மதிப்புமிக்க வரலாற்று தளங்களை பாதுகாக்க முடியாத ஒரு வேட்பாளர் எவ்வாறு வடக்கிலுள்ள முஹுது மகா விகாரை, தெவனகல மற்றும் குரகல இடிபாடுகளை பாதுகாக்க முடியும் என்பது தொடர்பில் பொது மக்களுக்கு நியாயமான சந்தேகம் காணப்படுகின்றது” என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியை அகலப்படுத்துவதற்காக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒப்புதலுடன் குறித்த கட்டிடத்தை இடித்ததாக, குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ விதான ஒப்புக்கொண்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பாரம்பரியமிக்க இடங்களை நிர்வகிக்க ஜனாதிபதி சமீபத்தில் ஒரு செயலணியை அமைத்துள்ளதோடு, அந்தக் குழுவில் ஒரே மதத்தைச் சேர்ந்த  தலைவர்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டமைக்கு சிவில் சமூகத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நகர அபிவிருத்தி என்ற போர்வையில், குருநாகல் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய, 10 கட்டிடங்களில் ஒன்றான இரண்டாம் புவனேகபாகு மன்னரின் அரச  சபை கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையும், தொல்பொருள் துறையும் தகர்த்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்பொருள் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரத்தில் இத்தகைய மதிப்புமிக்க தளங்கள் யாருடைய செல்வாக்கின் கீழ் தகர்க்கப்படுகின்றன என ஹெ பொது சவிய அமைப்பின் தலைவர்  புதுகல ஜினவன்ச தேரர் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 அவமரியாதை, அவமதிப்பு

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சக்திகள் குறித்த விசாரணையை விரைவுபடுத்தவும், எதிர்கால தலைமுறையினருக்காக வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாக்கும் வகையில், குறித்த கட்டிடத்தை அதே இடத்தில் மீண்டும் நிர்மானிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு ஜனாதிபதி செயற்படாத பட்சத்தில் தேர்தலில் ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவர செயற்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அகௌரவமாகவும் அமையுமெனவும்  புதுகல ஜினவன்ச தேரர் குறிப்பிபிட்டுள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் இராசதானியின்  அரண்மனையின் பாதுகாப்பை உறுதி செய்ய தொல்பொருள் ஆணையாளர் மற்றும் காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், இவ்வாறு தகர்க்கப்பட்டமை ஒரு குழப்பமான நிலையை தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் புவனேகபாகு மன்னரின் அரசவையை தகர்த்தமை தொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தொல்பொருள் ஆணையாளர் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். #ராஜபக்ச  #சகோதரர்கள் #தொல்பொருள் #தலைவிதி #குருநாகல் #பௌத்தஅமைப்பு #ஹெலபொதுசவிய

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More