Home இலங்கை அழகிய தீவை அகழ்வாய்விற்குரியதாக்கும் காலமொன்றை உருவாக்கத்தான் போகின்றோமா?!

அழகிய தீவை அகழ்வாய்விற்குரியதாக்கும் காலமொன்றை உருவாக்கத்தான் போகின்றோமா?!

by admin

தொல்பொருட்களும் அவற்றின் பாதுகாப்பும் :

ஒரு நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பற்றி கற்றறிந்து கொள்வதற்கு உதவும் சான்றாதாரங்களுள் ஒன்றாக கடந்த காலத்தின் வாழ்வியலில் பயன்படுத்தப்பட்டு தட்ப வெப்ப நிலைமைகளுக்கு அழிவடையாது தாக்குப்பிடித்து, பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப புதையுண்டுகாணப்படும் பண்டைய பொருட்களும், அவை செறிந்துள்ள இடங்களும் கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய புராதன பொருட்கள் செறிவாகக் காணப்படக்கூடிய இடங்கள் பாதுகாப்பிற்குரிய பிரதேசங்களாகவும், எதிர்காலத்தில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துமுடைய மையங்களாகவுங் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.

ஏனெனில் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் சான்றுகள் உள்ள இடங்களில் மண் அகழ்தல், கட்டிடங்கள் அமைத்தல், புதையல் தோண்டுதல், கல்லுடைத்தல் என்று பல செயல்கள் இடம்பெறக்கூடிய ஏதுநிலைகள் அதிகரித்து வருவதால் இத்தகைய பண்டைய பொருட்கள் சிதைவடைந்து அழிவடைந்து காணாமலாகும் நிலைமைகள் வலுவடைகின்றன.

இத்தோடு உண்மையினையும், எதார்த்தத்தினையும் மறைத்துக் கொண்டு தமக்குரிய வகையில் இன,மத அடிப்படைவாத மேலாதிக்க நோக்கில் வரலாறுகளைக் கட்டமைக்க விரும்பும் தரப்பினர் அதாவது அடையாளங்களை மறைத்து அடையாளங்களை உருவாக்க எத்தனிப்போர் இத்தகைய தொல்பொருட்களை காணாமலாக்கவும் சிதைக்கவும் முயலுகின்ற நிலைமைகள் மேலோங்கி வருவதானாலும் உள்ளதை உள்ளவாறு உண்மைத்தன்மையுடன் பேணுவதற்கேற்றவகையில் குறித்த இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இத்தகைய இடங்களைப் பாதுகாக்கும் வல்லமை ஒரு நாட்டில் அரசாங்கத்திடமே உண்டு என வலியுறுத்தப்படுகின்றது. அதாவது அரசாங்கம் என்பது நாட்டில் வாழும்சகல மக்களினதும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் உறுதிப்படுத்திப் பாதுகாக்கும் அரசியல் சாசனத்தை நிருவகித்து நடைமுறைப்படுத்தும் உயர்ந்த அதிகார அமைப்பாக விளங்குவதால் பக்கச்சார்பற்ற வகையில் பண்டைய பொருட்களையும் அவை காணப்படும் இடங்களையும் பாதுகாக்கும் தகைமையும் பொறுப்புமுள்ளபொது நிறுவனமாக நாட்டின் அரசாங்கமே கொள்ளப்பட்டு வருகின்றது.

வரலாறும் புனைவும், புதிய தேடல்களும் :

வரலாற்றை எழுதுதல், வரலாற்றைக் கட்டமைத்தல் என்பது பெரும்பாலும் காலந்தோறும் அதிகாரங்களில் இருந்தவர்களினதும், வெற்றி பெற்றவர்களினதும் திட்டமிட்ட காரியமாகவே இருந்து வருகின்றது.இந்த வகையில் வரலாற்று எழுத்தியல் என்பதுவரலாற்றை எழுத விரும்பும் அதிகார பீடங்களின் விருப்பு வெறுப்புக்களுக்கும் செல்வாக்கிற்கும் உட்பட்டேஆக்கப்பட்டு வந்துள்ளது. வரலாறுகளைக் கட்டமைத்தவர்கள் தமது வரலாற்றுக்குரிய மூலங்களையே வரலாற்றை அறிய உதவும் நியமங்களாகவும் நிலைநிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக இதுவரை எழுதப்பட்டும், கட்டமைக்கப்பட்டுமுள்ள வரலாறுகளை பூரணத்துவமானது என்றோ! முழுமையானது என்றோ! ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மிகப்பெரும்பாலும் வரலாறு என்பது வரலாற்றைக் கட்டமைக்க விரும்பிய தரப்புக்களின் கருத்தியலுக்கேயுரிய ஊகங்களாலும், வியாக்கியானங்களாலும் நொதியங்கொள்ளச் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய ஊகங்களுக்கும், வியாக்கியானங்களுக்கும் ஏற்ற வகையிலேயே பண்டைய சான்றுப் பொருட்களும், அத்தகைய தொல்பொருட்களுள்ள இடங்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

இதுவரை காலமும் எழுதப்பட்டும், கட்டமைக்கப்பட்டும் வந்துள்ள வரலாற்று எழுத்தியலில் பெண்களின் வரலாறுகள் பதியப்படாதவையாகவே தொடரப்பட்டு வருவதையும் காண்கின்றோம். மிகப்பெரும்பாலும் வரலாறு என்பது அதிகாரத்திலிருந்த ஆண்களின் வரலாறாகவே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த வகையில் இதுவரையாக கட்டமைக்கப்பட்ட வரலாறுகள் அனைத்தும் பெண்களின் வரலாறுகளை மறைத்து அதிகாரத்திலிருந்த ஆண்களின் புனைவுகளால் அலங்கரிக்கப்பட்டது என்ற வகையில் ஆண்களால் ஆக்கப்பட்ட வரலாறுகளின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. இதனால் எல்லா மனிதரினதும் வரலாற்றைத் தேடும் அதனைக் கண்டறியும் மாற்று வரலாற்று முறைமைகள்பற்றிய கரிசரணை உலகம் எங்கும் முக்கியம் பெற்று வருகிறது.

மனிதகுல வரலாற்றில் மிகப்பெரும்பாலும் மனிதர்கள் நிரந்தரமான பொருட்களைப் பயன்படுத்தியதை விடவும் அழியக்கூடியதும் இயற்கையின் சமநிலையுடன் பொருந்தக்கூடியதுமான பொருட்களையே அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரந்து வாழும் ஆதிக் குடிகளின் வாழ்வியலைப் பற்றி ஆராயும் போது அவர்களின் வாழ்வியல் மிகப்பெரும்பாலும் இயற்கையுடன் இணைந்ததாகவும் அழிவடையக் கூடிய பொருட்களின் பாவனையுடன் கூடியதாகவுமே இருந்து வருவதனைக் காண்கின்றோம். இதன் காரணமாக பண்டைய பொருட்களையும் அதனை ஆராய்ந்து கட்டமைக்கும் வரலாறுகளையும் பூரணமான வரலாறாக ஏற்க முடியாதுள்ளது. எனவே தொல்லியல் அகழ்வாய்வு பொதுமையானது என்றோ! முடிந்த முடிவானது என்றோ! இறுதியானது என்றோ! அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது.

ஒரு நாட்டில் அதன் வரலாறு நெடுகிலும் பல்வேறு கால கட்டங்களினதும் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் தாக்கம் இடம்பெற்றிருக்கும் போது அவற்றைக் கவனத்திற்கொள்ளாமல் ஒற்றை நோக்கில் வரலாறுகளைத் திரிபுபடுத்தி கட்டமைத்துள்ள தன்மைகளும் அவற்றின் பொருத்தமின்மைகளும், அதனால் விளைந்து வரும் பேராபத்துக்களும் வரலாற்றுத்துறை சார்ந்த விமரிசகர்களினால் வெளிக்காட்டப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் பல்லின பல்பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அவற்றின் பன்மைத்துவ நடவடிக்கைகளையும் பாதுகாத்து காலத்தின் தேவைகளுக்கேற்றவாறு முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புக்களும், வசதிகளும் ஐக்கிய நாடுகளின் சாசனங்களினூடாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்குரியவையாகவுள்ள நிலைமையில் தொல் பொருட்களையும் அவையுள்ள மையங்களையும் ஒற்றை நோக்கில் வியாக்கியானித்து,ஏனைய பண்பாடுகளை நிராகரிப்பதற்கான வரலாற்று ஆதாரமாகப் பயன்படுத்துவது துரதிஸ்டமானதாகவும், மனித குலத்திற்கு எதிரான குற்றமாகவுமே பார்க்கப்பட்டு வருகிறது.

இப்பின்னணியில் மாற்று வரலாற்று ஆராய்ச்சி முறைமைகள் பற்றிய அக்கறைகள் அதிகரித்து வருகின்றன. புதிய புதிய மாற்று வரலாற்று மூலங்கள் பற்றிய தேடல்களும் ஆராய்ச்சிகளும் விரிவடைந்து வருகின்றன. உதாரணமாக வாய்மொழி இலக்கியங்கள் வரலாற்று மூலங்களாகவும், தொட்டுணராப் பண்பாட்டு; மரபுரிமைகள் வரலாற்றின் மூலங்களாகவும் கொள்ளப்பட்டு வரலாற்றை ஆராயும் பல்வேறு முறைமைகள் விரிவாக்கம்பெற்று வலுவடைந்து வருகின்றன. இவற்றுடன் பேசாப்பொருட்களைப் பேசும் நோக்குடன் விளிம்புநிலை மனிதர்களின் வரலாறுகளைத் தேடும் விளிம்புநிலை ஆய்வுகளும், பெண்களின் வரலாறுகளைக் கண்டறியும் பெண்ணிலைவாத வரலாற்று ஆராய்ச்சிகளும், உலகம் முழுவதும் பரந்து வாழும் ஆதிக்குடிகளின் வரலாறுகளைத் தேடிக்கண்டறியும் ஆராய்ச்சிகளும் அவற்றுக்கேயான ஆராய்ச்சிமுறைகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

பண்டைய பொருட்களும், அவை காணப்படும் இடங்களும் அவை பற்றிய ஆராய்ச்சிகளும் நமது முன்னோர் எவ்விதம் வாழ்ந்தார்கள், எவ்விதம் சிந்தித்தார்கள் என்பதை கணிசமானளவு தெரிந்து கொண்டு அது தரும் படிப்பினைகளுடன் சமகால வாழ்வின் சவால்களை எதிர்கொள்வதற்கான வழிப்படுத்துகைகளுக்கு இட்டுச்செல்வதாக அமைந்திருத்தல் அவசியமானதாகும். இந்த இடத்திலேயே தொல்பொருட்களும், அகழ்வாய்வும் வெறுமனே வரலாற்று மூலங்கள் என குவிமையப் படுவதிலிருந்து விலகி அவை நமது முன்னோரின் விவசாயம், பொறியியல், பௌதீகவியல், இரசாயனவியல், மருத்துவம்,அழகியல்,சூழலியல், பொருளியல், அரசியல், புவியியல் எனப்பல துறைகளுடனும் தொடர்புபடும் விதங்களை அறிந்து கொள்ள உதவும் மிகவும் முக்கியமான சான்றுகளாகக் கொள்ளப்படும் ஏது நிலைகள் வாய்க்கப் பெறுகின்றன. இதன் காரணமாகவே இத்தகைய பண்டைய பொருட்களும் அதனுடன் இணைந்த பண்பாடுகளும் செறிந்துள்ள இடங்கள்; மரபுரிமை மிக்க பிரதேசங்களாகக் கொள்ளப்பட்டும், பிரகடனப்படுத்தப்பட்டும் வருகின்றன.

காலனிய நீக்கமும் அகழ்வாய்வும் :

இன்றைய உலகில் காலனிய நீக்கத்துடனான கல்வி, பண்பாடு, ஆய்வறிவு முறைமைகள் தொடர்பாக அதிக கவனஞ் செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது வரலாற்றில் இப்பூகோளத்தில் வாழும் பல்வேறு மனிதக்குழுமங்கள் மீதும் மேற்கு ஐரோப்பிய அதிகாரத்துவ நாடுகள் மேற்கொண்ட காலனித்துவ ஆக்கிரமிப்பும் அதன் நீட்சியாக உள்ள நவகாலனித்துவ ஆக்கிரமிப்பும் காலனிய மனப்பாங்கை வலுப்படுத்தியுள்ளதுடன், காலனிய நலன்பேணும் ஆய்வறிவு முறைமைகளை நியமங்களாகவும் நியதிகளாகவும் வேர்கொள்ளச் செய்துள்ளன. இப்பின்புலத்தில் அகழ்வாராய்ச்சி எனுந் துறையிலும் காலனிய நோக்கு வலுவானதாக இருந்து வருகின்றது.

பன்மைப்பண்பாடுகளையுடைய மனிதக்குழுமங்களிடையே கடந்த காலத்தைக் கண்டறிதலை பிரிவினைக்கான, அடையாளத் தூய்மைவாதத்துக்கான ஒற்றுமையினைச் சீர்குலைப்பதற்கான நோக்குடன் பிரயோகிப்பதற்கு காலனீய அறிவு கால்கோளிட்டுள்ளது.

காலனித்துவ ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து எழுச்சி பெற்ற தேசியவாதம், தேசிய விடுதலை என்பதும் காலனித்துவத்தை எதிர்ப்பது போல தோற்றங் காட்டினாலும் உள்ளார்ந்த ரீதியில் காலனித்துவ நிகழ்ச்சி நிரலின் படியே இயக்கம்பெற்று வருகின்றது.ஏனெனில் காலனித்துவ ஆதிக்கத்திடமிருந்து ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட தேசிய அரசுகள் பலவற்றில் இனமுரண்பாடுகளும் அதன் காரணமாக உள்நாட்டுப் போர்களும் தீவிரமடைந்தமை இதற்கான சான்றாக உள்ளது. அதாவது காலனித்துவம் வடிவமைத்த ஆட்சியியல் முறைமைகளுக்குட்பட்டு காலனிய மனப்பாங்குடன் தேசிய அரசுகளின் ஆட்சியாளர்கள் நாட்டின் பல்வகைப் பண்பாடுகளிடையேயும் பிரித்தாளும் தந்திரங்களைப் பிரயோகிக்க முற்பட்டமையும், பல்வகை அடையாளங்களை ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர எத்தனித்தமையும் உள்நாட்டில் பகை முரண்பாடுகளுக்கே வழிகோலியது. இதேநேரம் காலனீய நீக்கம் எனும் சித்தத்தெளிவுடன் எழுச்சிபெற்ற கணிசமான தேசிய அரசுகள் பலவும் நவகாலனித்துவ முகவரமைப்புக்களால் சிதிலமாக்கப்பட்டு விட்டமையும் கவனத்திற் கொள்ளத்தக்கது.

இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் உரிய அடிப்படைக் காரணங்களுள் ஒன்றாக காலனிய கருத்தியல்களின் ஆதிக்கமும், காலனிய கட்டமைப்புக்களின் பிரயோகமும் அதன் செல்வாக்கும் காரணம் எனக் கண்டறியப்படுகின்றது. எனவே காலனித்துவத்தின் பிரித்தாளும், பன்மைப்பண்பாடுகளை வித்தியாசங்களாகவன்றி முரண்பாடுகளுக்கான ஏற்றத்தாழ்வுகளுடனான வேற்றுமைகளாக வளர்த்தெடுக்கும் பொறிமுறைகளைக் கொண்ட அகழ்வாய்வு தொடர்பில் சற்றுச் சிந்தித்து நிதானத்துடன் செயலாற்ற வேண்டியது காலத்தின் தேவையாகி நிற்கின்றது.

ஏனெனில் கடந்த பல தசாப்த காலமாக இனங்களுக்கிடையே பகைமுரண்பாடுகளை கூர்மையடையச் செய்வதில் நமது நாட்டின் அகழ்வாராய்ச்சி, வரலாற்று எழுத்தியல் என்பன குறிப்பிடத்தக்களவு தாக்கஞ்செலுத்தியுள்ள பின்னணியில் சமகாலத்தில் ஒரே நாடு ஒரே தேசம் எனும் எண்ணக்கருவாக்கத்தை அர்த்தமுள்ளதாக ஆக்க நாட்டின் எதார்த்தமாகவுள்ள பன்மைத்துவத்தை அங்கீகரித்து அவற்றை உயிர்ப்புடன் இயக்கங்கொள்ளச் செய்தல் அவசியத் தேவையாகவுள்ளது. இங்கு எதார்த்தமாகவுள்ள தேசிய ரீதியிலான பன்மைத்துவம் என்பது ஒவ்வொரு இனக்குழுமங்களுக்குள்ளும் உள்ளகத் தன்மைகளுடன் பயில்விலிருந்து வரும் பல்வகைப் பண்பாடுகளை நுணுக்கமாகக் கவனத்திற் கொண்டு அவற்றின் வித்தியாசங்களை அங்கீகரித்து மதித்துஆக்கபூர்வமான பண்புகளை தழைத்தோங்கச் செய்வதாக இருத்தல் அவசியமாகும்.

பல்வேறு நுண்ணிய பண்பாடுகளிடையேவித்தியாசங்களை மறுதலித்து பகை முரண்பாடுகளை வளர்த்தெடுத்து வணிக, அரசியல் ஆதிக்கத்திற்காக பொதுமைப்படுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட காலனிய கருத்தியல்களுடன் கூடிய அகழ்வாய்வு மற்றும் வரலாற்று எண்ணக்கருக்களிலிருந்தும்ஆய்வு முறைகளிலிருந்தும் நாம் மீண்டுவர வேண்டியது இங்கு கட்டாயத் தேவையாகவுள்ளது.

சமாதானத்திற்கும், சகோதரத்துவத்திற்கும், தேசியங்களின் ஐக்கியத்திற்கும், சுயாதீனத்திற்கும், சுதந்திரத்திற்கும் வழியமைக்கும் பல்பண்பாடுகளின் பன்மைத்துவத்தை வலுவாக்கும் மாற்று அகழ்வாராய்ச்சி முறைமைகள், கருத்தியல்கள், வரலாற்று எழுத்தியல் முறைமைகள் குறித்து நாம் கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது.

இந்த இடத்திலேயே நாம்’உலக அகழ்வாய்வு சபை’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு காலனீய நீக்கங்கொண்ட அகழ்வாய்வு முறைமைகள் குறித்து அதிக கவனஞ்செலுத்தி வருவது பற்றி ஆராய வேண்டியுள்ளது.இவ்வமைப்பு வரலாற்றில் மனித சமூகங்கள் மீது காலனித்துவ ஆதிக்க காலங்களில் ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மைகளை நீக்குவதற்கான முயற்சிகளின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகின்றது. தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகஇயங்கியதுடன், உலகின் பன்மைத்துவத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை உலகில் சமத்துவமின்மையினை கேள்விக்குட்படுத்தி அவற்றினை மீளுருவாக்க வேண்டியதன் தேவையினையும் விதந்துரைக்கின்றது. ஆதிக்குடிகள்,பழங்குடி மக்கள்,பொருளாதார ரீதியில் நலிவாக்கப்பட்ட மக்கள், எண்ணிக்கையில் குறைவான சிறுபான்மையினர், ஏதிலிகள் ஆகிய மனிதக்குழுமங்களின் மரபுரிமைகளைக் கவனத்திற் கொள்ளுதல் பற்றியும், அகழ்வாய்வு மற்றும் வரலாற்று ஆராய்ச்சியில் இத்தகையோரை உள்வாங்கிச் செயற்படுவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றது.

இவ்விதமாக அகழ்வாய்வு தொடர்பிலான உரையாடல்களும் செயற்பாடுகளும் உலகந்தழுவி நடைபெறும் போதுஇத்தகைய மாற்று வரலாற்று அகழ்வாய்வு கருத்தியல்கள் சார்ந்து சிந்தித்து செயற்பட்டு அழகான பன்மைப் பண்பாடுகளின் தேசமாக இலங்கைத்திருநாட்டை கட்டியமைப்பதற்கு முயல வேண்டியது காலத்தின் தேவையாக உணரப்படுகின்றது.

இலங்கைத்தீவும் வரலாறும் தொல்பொருட்களும்

இலங்கைத் தீவு இந்தப் பூகோளத்தின் கேந்திர நிலையத்தில் சமநிலையான பருவநிலை கொண்ட பகுதியில் இடம்பெற்றுள்ள ஓர் அழகான நாடு, இந்நாட்டுக்கேயுரிய ஆதிக்குடிகளுடன் வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் வருகை தந்து குடியிருக்கும் பல்வேறு இன, மத தேசியங்கள் ஒன்றித்து வாழும் நாடு,ஆதிக் குடிகளான வேடுவர்களின் மொழி வழக்கும், எண்ணிக்கையில் குறைவாக வாழும் வனக்குறவர், பறங்கியர் ஆகியோரால் பேசப்படும் மொழிகளின் பாவனையும், உலகில் இலங்கைக்கேயுரிய தனித்துவமும் சிறப்புக் கொண்ட சிங்கள மொழியும், உலகின் செம்மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியும், உலகின் தொடர்பாடலுக்கான பொது மொழியாகக் கொள்ளப்படும் ஆங்கிலமும் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பிரதானம் பெற்றுத் திகழும் ஒரு நாடு. இவற்றுடன் தெலுங்கு இனத்தவர், மலே இனத்தவர், ஆபிரிக்க வழிவந்தோர் எனப் பல்வேறு சிறிய அளவிலான இனக்குழுமங்கள் வாழும் அழகிய தீவு, ஒரே நாளில் பல்வேறு பருவ நிலைகளினதும் சுவாத்தியங்களை அனுபவிக்கும் வசதிகொண்ட வளம் மிக்க நாடு  இத்தீவைப் பொறுத்த வரையில் மேற்கைரோப்பிய காலனித்துவத்திற்கு முற்பட்ட காலங்களில் இந்தியத் தீபகற்பத்தின் ஓர் அங்கமாகவும் இத்தீபகற்பத்தின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் தாக்கங்களிற்கு உட்பட்ட தீவாகவும் இது இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. இதன் காரணமாக வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆதிக்கஞ் செலுத்திய, செல்வாக்குப் பெற்றிருந்த பல்வேறு பண்பாடுகளின் அடையாளங்களை இத்தீவு முழுவதும் காணக்கூடியதாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக தென்னிந்திய வரலாற்றில் தமிழர்களிடையே பௌத்த, சமண சமயங்கள் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த போது அதன் தாக்கத்திற்குட்பட்டு இலங்கைத்தீவிலும் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்களிலும் பௌத்த, சமண மதத் தலங்கள் உருவாக்கப்பட்டிந்ததனையும் பின்னர் பல்லவர் சோழர் காலங்களில் சைவ வைணவ சமயங்களின் எழுச்சியினால் சமண, பௌத்த மதங்களும் அவற்றின் வழிபாட்டிடங்களும் செல்வாக்கிழந்த நிலையில் அதன் சான்றுகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்நிலையில் அத்தகைய சான்றுகளை ஒற்றை நோக்கத்தில் வியாக்கியானஞ் செய்து பயன்படுத்த முயற்சிப்பது இலங்கைத்தீவின் பல்வகைமைப் பண்பாடுகளை மறுதலிக்கும் செயற்பாடாகவே அமைந்திருக்கும்.

ஆக்கிரமிப்பிற்கும், வணிகத்திற்கும், பண்பாட்டுப் பரவலாக்கத்திற்கும் எனப்பல்வேறு நோக்கங்களுடன் வரலாற்றில் செயல்பட்டுள்ள கிரேக்கரினதும், உரோமரினதும், பேரரசன் அசோகனினதும், சீனர்களினதும், அராபியர், பாரசீகர்களினதும், சோழர், நாயக்கர்களினதும், போச்சுக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களினதும் இரு பெரும் உலகப் போர்களினதும் இன்னும் இன்னும் வரலாற்றின் பல்வேறு செல்வாக்குகளுக்கும் தாக்கங்களுக்கும் உட்பட்டு அதன் சுவடுகளையும் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பல்வண்ணமுள்ள நாடு.

இன்றைய சூழலில் பல்தேசிய வணிக நிறுவனங்களின் நலன்களைப் பிரதானப்படுத்தும் நவகாலனித்துவத்தின் தாக்கங்களுக்கு இந்நாடு முகங்கொடுத்து வருகின்றது. இந்த நவகாலனித்துவத்தின் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கும் அதனால் உருவாக்கப்படும் பல்வேறு நெருக்கடிகளுக்கும்,சவால்களுக்கும் முகங்கொடுத்து வாழ்வதற்கான பலமும் வளமும் வாய்ப்புக்களும் இந்நாட்டிற்கேயுரிய பல்லின, பல்பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதனூடாக மென்மேலும் வலிமை கொள்வதாக அமைந்திருக்கும். ஒற்றைத் தன்மையுடைய, ஒரே வாசனையுடைய நவீன நுகர்வுப்பண்பாட்டின் ஆக்கிரமிப்பிலிருந்து விலகி இலங்கைத் தீவுக்கேயுரிய பல்வேறு படைப்பாக்க வல்லமைகளையும், அதன் பண்புகளையும் பல்வேறு வாசனைகளையும், இறைமையினையும், சுயாதீனத்தையும், சுதந்திரத்தினையும் பாதுகாத்து உலகில் இலங்கைத் தீவின் அடையாளத்தை ஆக்கபூர்வமாக நிலைநிறுத்துவதற்கான வல்லமை இங்கு வாழும் பல்லின, பல்பண்பாட்டுப் பாரம்பரியங்களின் உயிர்ப்பிலும் தொடர்ச்சியான இயக்கத்திலுமே தங்கியுள்ளது.

இத்தகைய பல்வகைப் பண்பாடுகளால் பலமுள்ளதாகப்பின்னிப்பிணைக்கப்பட்டுள்ள இந்நாட்டின் அழகை அதன் நறுமணத்தை கவனத்திற் கொள்ளாது ஒற்றை நோக்கில் அகழாய்வு செய்ய முயற்சித்தல் சுவாசிக்கவொண்ணாத நாற்றத்தைத்தரக்கூடிய புதைகுழி தோண்டும் செயல் போலவே போய்முடியும்.

ஆக்கம்:
கலாநிதி சி.ஜெயசங்கர், ஏ.ஜே.கிறிஸ்டி, அ.விமலராஜ்,து. கௌரீஸ்வரன், இரா.சுலக்சனா, கலைமகள் கோகுல்ராஜ், இ.குகநாதன்,

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More