தற்காலத்தில் இளைஞர்கள் அரசியல் என்றால் எவ்விதமான புரிதலில் உள்ளனர் என்பதை நானும் ஓர் இளைஞன் என்ற ரீதியில், பல்வேறுப்பட்ட குழுமங்களுடன் பேசிப் பழகி உரையாடியவற்றில் இருந்து நேர்த்தியான ஓர் அரசியல் புரிதல் இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் நின்றும், இளைஞர்களின் பார்வையில் அரசியல் என்பதாக அரசியல் குறித்த சரியான, முற்போக்கான கருத்துமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே என்னிலைப்பாடாகும்.
குறிப்பாக தற்சமயம் தேர்தல் காலம் ஆகையினால், அரசியல் பற்றி பேசும் நிலை இளைஞர்கள் மத்தியில் பெரிதும் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையிலே ஒழுங்கான புரிதலின் கீழ் தேர்தல் காலங்களில் தமது பிரச்சாரங்களையும், தமது வாக்குகளை அளிப்பது எத்தனை பேர் என்று பார்த்தால் நூற்றுக்கு இருபது வீதம் கூட தேற மாட்டார்கள். அப்படியானால் மீதி 80 வீதமான இளைஞர்கள் எவ் வகையில் அரசியல் பேசுகின்றனர்: எவ் வகையில் தமது பிரதிநிதியை தேர்வு செய்கின்றனர் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஏற்படும் ஒரு விடயம் அல்லவா.
அவ்வகையில் இளைஞர்கள் தாம் சிறிய அளவிலேனும் படித்து தேர்ந்து இருந்தும் தன்னால் ஒரு சிறப்பான அரசியல் பிரதிநிதியை தேர்வு செய்யக்கூடிய அளவு கூட இயலாமல் போனமைக்கான காரணம் தான் என்ன என்கிற கேள்விக்கான பதில்தான் என்னவாக இருக்க முடியும். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் தமது பெறுமதியான வாக்கை யாரோ ஒருவருக்கு அளித்தே ஆக வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்தின் பெயரில், தம்மில் மூத்த ஒருவர் எந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பினும் பரவாயில்லை. நீ என்னோடு வா தற்சமயம் தேர்தலில் போட்டியிடும் குறிப்பிட்ட நபரை எனக்கு நன்றாக தெரியும்: அவருக்கு இந்த முறை நீ வேலை செய்பவனாக இருந்தால், நிச்சயமாக அவர் குறித்த தேர்தலில் வெற்றிவாகை சூடுவார்: உனக்கு அதற்குப் பிறகு வேலை ஒன்று, அரசாங்க வேலை நிச்சயமாக எடுத்து தருவார் மற்றும் இதர பல உதவிகளையும் செய்து தருவார் என கூறி தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் தந்திரோபாயத்தை இன்று செய்து திரியும் எத்தனையோ வேட்பாளர்களை நாம் எம் சமூகத்தில் காண்கின்றோம். இவ்வாறு தம் நலனில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக இருந்துக் கொண்டு போலி அரசியல் செய்யும் ஒரு வேட்பாளர்களா நாளை உனக்கும் உனது சமூகத்திற்கும் நற்காரியங்களைச் செய்யப்போகின்றார்கள்?
இவர்களின் பொய்யான ஆசை வார்த்தைகளுக்கு இளைஞனாக உள்ள நீ ஏமாந்து போய் அவர்களின் பின்னால் எவ்விதப் புரிதலும் தேடலும் இல்லாமையின் நிமிர்த்தம் உனது உரிமையை உனது பொக்கிஷமான அந்த வாக்கை நீ மாத்திரம் அளிப்பது மட்டுமன்றி உன்னோடு பழகிய பாவத்திற்காக உன்னை நம்பும் இன்னும் சிலரும் உனது வார்த்தைக்காக அவர்களுக்கு வாக்களிப்பது நியாயமா தோழா? முன்னொரு காலத்தில் எத்தனையோ இளைஞர்கள் ‘இனி ஒரு விதி செய்வோம்’ என்ற வாசகத்தின் உணர்வு பூர்வமான நிலையின் பால் நின்றுகொண்டு எத்தனையோ மாற்றங்களை செய்து காட்டியுள்ளனர். அன்று அவ்வாறு இளைஞர்களால் செய்ய முடியுமென்றால் ஏன் இன்று ஒரு புள்ளியில் நின்று தன்னால் ஒரு குறிப்பிட்ட பிரதிநிதியைத் தெரிவு செய்ய முடியாமல் போகின்றது. ஓர் இளைஞன் அரசியல் கொள்கை என்ற ஒன்றை எந்த வகையில் தனது கொள்கை என நினைத்து வேலை பார்க்கின்றான் என்றால்இ நன்றாக முகம் தெரிந்த ஒருவரின் கொள்கையை ஆராய்ந்து அறிந்து அதனைப் பின்பற்றுவது என்பது வரவேற்கத்தக்க விடயம்.
ஆனால் நான் கூறியது போன்று நன்றாக பழக்கப்பட்ட முகம் கட்சியின் கொள்கையை பின்பற்றுகின்றது என்ற நோக்கிலும் விசுவாசம் என்கின்ற போர்வையில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களையும் தன்னால் முன்வந்து சொல்ல இயலாத யதார்த்த மற்ற இயல்பில் மனகுமுறல்களை குமுறல்களாகவே வைத்துக் கொண்டு ஒரு கொள்கையினை, ஒரு கட்சியினை பின்பற்றி அவர்களுடன் இணைந்து தாம் ஏமாறுவது மாத்திரமன்றி தனது குடும்பம் தன்னை நம்பியவர்களை மற்றும் சமூகம் என அனைவரையும் ஏமாற்றம் அடைய வைக்கின்றமையுமே இன்று இளைஞர்களின் அரசியல் பயணமாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமே. இது எந்த வகையில் சிறப்பான ஓர் அரசியல் புரிதலாகும்?
இவ்வாறு நீ பின்பற்றும் கொள்கையினால் எவ்வித மாற்றத்தையும் உன்னால் நீ பிறந்து வளர்ந்த சமூகத்திற்கோ இனத்துக்கோ செய்து காட்ட இயலாத காரியம் என்று சொல்லப்படுகின்ற விடயத்தை, சமூகத்தில் மாற்றத்தை கொணரந்தே ஆக வேண்டும் என்கின்ற தீர்க்கமான நோக்கோடு உயிர் வாழும் ஒவ்வொரு இளைஞனும் உணர வேண்டும். இல்லை எனில் இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும். இல்லையெனில் நீ நேசிக்கும் உனது சமூகம் உனது இனம் அரசியல்வாதிகள் என்ற போர்வையில் வேடம் போட்டு திரிபவர்களால் காணாமல் ஆக்கப்படுதல் உறுதி. இதனை ஒவ்வொரு இளைஞனும் அரசியல் புரிதலின் பெயரிலேயே உணரச்செய்து விழித்தெழ வைக்க முடியும் என்பதை மறவாதே.
அரசியல்வாதி என்பவர் யார்? தேர்தல் காலங்களில் வாக்குகளைச் சேகரிக்கும் ஒரே நோக்கத்தை வைத்து ஏதோ ஒரு பிரச்சினை இடம் பெற்றதும் தாமதமாகச் சென்று நானும் வருகை தந்து உள்ளேன் என்பதை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் காட்ட வேண்டும் என்ற நோக்கில் கேமராக்களுக்கு முகத்தைக் காட்டியும், வீரவசனம் பேசியும் அது மாத்திரமன்றி அனைவரது பார்வையையும் தம்மில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் தேவை ஏற்படின் பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுப்பின் அதனை தாமும் வரவேற்பதாக பாவனை செய்துக் கொண்டு தனது சொகுசான வீடுகளில் தானும் தனது குடும்பமும் தன்னுடன் கூடித் திரியும் ஒரு சிலரும் சுகபோகமாக வாழ்வதும், வாழ்ந்துகொண்டு சமூகச் செயற்பாடுகள், அபிவிருத்தி செய்தோம் என கதைகளைப்பரப்பி திரிபவர்கள் தான் அரசியல்வாதியா? இன்றைய இளைஞர்களை கேட்டால் ஆம் என்றே கூற தயாராகவே உள்ளனர். ஏன் என்றால் ஒழுங்கான புரிதலின் நிமிர்த்தம் இவர்களை வளர செய்யாமல் தன்னுடனே அடக்கி ஒடுக்கி வைத்துள்ளதே காரணம் இவர்களே அரசியல்வாதிகள் என்று கூறுகின்றனர் இதனை சற்று சிந்தித்து கொள்ளுங்கள்!
அப்படி என்றால் சிறப்பானதொரு சமூக அரசியல் வாதிகள் எவ்வாறு இருக்க வேண்டும்?. தேர்தல் காலங்களில் மாத்திரம் அன்றி தான் தேர்தலில் போட்டியிடவில்லை எனினும் தனது மக்களுக்கும் தனது சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பிரச்சினை நடைபெற்றால் அப்பிரச்சினை மாத்திரமே அன்றி அங்கு இருக்கின்ற ஏனைய பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டி நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் முகமாக போராடக்கூடிய சமூக இன பற்றுக் கொண்டவர்களாக இருக்கவேண்டும். பாராளுமன்றத்தில் தமது இன சமூகத்திற்கு பாதகமான சட்டங்கள் இயற்றப்படும் பட்சத்தில் பணப் பெட்டிகளை வாங்கி விட்டு தானும் ஆதரிக்கும் கேவலமான ஆட்களாக இல்லாமல் அதனை எதிர்த்துப் போராடும் சமூக நோக்குள்ள நம்மில் ஒருவனாக இருக்க வேண்டும்.
ஊடகங்களுக்கும், கேமராக்களுக்கும், தலை காட்டி வீரவசனம் பேசி திரியும் நான்கில் ஒருவனாக அன்றி, புத்தி சாதுரியமான முறையில் தன் இனத்தினையும் மக்களையும் பாதுகாத்துக்கொண்டு அபிவிருத்தி அடைய வைப்பதும், கல்வியையும், பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், தமது இனம், சமூகம் சார்பாக சிந்தனை செய்யும் வீரியமுள்ள தனி ஒரு தலைவனாக மிளிர வேண்டும். தனக்கும் தனது குடும்பத்திற்கும் தன்னுடன் கூடித் திரியும் குடும்பத்திற்கும் மாத்திரமில்லை. உன்னை நம்பி அவர்கள் உன்னை வெற்றி பெறச் செய்த சாதாரண ஒரு குடிமகனுக்கும் உனது சேவை உனது தொண்டு தொடர வேண்டும்.
இதில் எந்தவிதமான வேறுபாடுகளையோ காட்டவேண்டியது இல்லை. இவ்வாறு வாழ்ந்து காட்டிய அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். அவர்களால் செய்ய முடியுமென்றால் உன்னால் ஏன் செய்ய இயலாமல் போகின்றது என்பதற்கான குறிப்பிட்ட காரணம் தான் என்ன? பணம் ..பணம் …பணம்.. பணத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கின்ற மோகமே காரணம் ஆகும். அவ்வாறெனின் இனி வருகின்ற காலங்களில் பணத்தின்மீது மோகத்தினை வெறுத்தொதுக்குகின்ற ஒருவனை ஆராய்ந்து அறிந்து எம்மால் வாக்களிக்க முடியுமானால் நம் இனத்தையும் சமூகத்தையும் வளர்த்து எடுக்கக் கூடிய ஒரு சிறப்பான தலைவனை நாம் பெற்றுக் கொள்ளலாம். எனவே கூர்மையாக புத்தியுடன் ஒவ்வொரு இளைஞனும் தனது பிரதிநிதி யார்? என்பதை சிறந்த முறையில் ஆராய்ந்து அறிவது எமது இருப்பை எமது இனத்தை எமது பொருளாதாரத்தை எமது கல்வியை மற்றும் எமது எதிர்காலத்தினை காத்து நிற்கும் என்பதை மறக்கவும் மறுக்கவும் முடியாது. விழித்தெழ வேண்டியது இளைஞர்கள் மாத்திரமே.
மற்றொன்று சமத்துவம், சமத்துவம் என்று பேசிக் கொண்டிருக்கின்ற இக் கால கட்டத்தில் பெண்களுக்கென அரசியலில் ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். ஏனெனில் இன்று சமூகத்தின் நிலையைப் பார்த்தால் பெண்களுக்கான பிரச்சனைகள; மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம். மற்றும் பெண்களுக்கு என்று குறிப்பிட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அவற்றினை முன்பு சொன்னது போன்று பெண்களின் மனதை ஒரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று கூறியதற்கு இணங்க பாராளுமன்றத்தில் 25 வீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்ற இக்காலகட்டத்தில் எந்தவிதமான இன மத சாதி அடிப்படையிலும் வேறுபாடுகளை திணிக்காமல், சமூகத்தின் மீது பற்றுக்கொண்ட எதற்கும் அஞ்சாத தைரியம் மிக்க பெண்களை நாம் தெரிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமும் நமது கடமையுமாக உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஒரு பெண் எவ்வளவு இக்கட்டான சூழல்களுக்கு மத்தியில் தனித்து நின்று, தனது குடும்பத்தை நேர்த்தியான முறையில் நடத்துகிறார் என்றால்இ ஏன் அவர்களால் தனது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் இன்று தேவைப்படுகின்ற சிறப்பானதோர் பிரதிநிதியாக வர இயலாமல் உள்ளது. இதனை முதலில் பெண்களே உணர வேண்டும் இல்லையெனில், உங்கள் வாழ்வில் விடிவு ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்து நீங்களாக முன்வர வேண்டும். முன்நிற்பவரை ஒன்று சேர்ந்து வெற்றிபெறச் செய்யவேண்டும். பாரதி கண்ட புதுமைப் பெண்களைப் போல ‘இனி ஒரு புது விதி செய்வோம் !’ என்ற வாசகத்தின் பால் நின்று துணிச்சலாக கைகோர்த்து செயற்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
தோழர்களே ஒரே ஒரு விடயம். இளைஞர்களாக உள்ள நாம் இவ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வில்லை என்றால்இ இன்று இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் என்ற பேரில் செயற்பட்டு வருகின்ற அரசியல்வாதிகள் எம்மையும் எம் சமூகத்தின் இருப்பையும் வருங்காலங்களில் கேள்விக்குள்ளாக்கி விடுவது என்பது நிதர்சனமான உண்மை என்பதை உணர்ந்து, இனி ஒரு விதி செய்வோம் என்ற பெயரில் நின்று சிந்தனை செய்து எம்மைச் சார்ந்த சமூகத்திற்கும், நாட்டிற்கும் உபயோகமுள்ள ஒரு மனிதனாக வாழ்வோம். இதுவே இளைஞர்களின் அரசியல் பயணமாக இருக்க வேண்டுமே தவிர வேறு எதுவுமhக இருக்க முடியாது.
கு.மதுசாந்
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்