நாட்டுப்புற மக்களினுடைய பழக்கவழக்கங்கள், இலக்கியங்கள், கதைகள், நம்பிக்கைகள், பழமொழிகள், வாய்மொழி வரலாறுகள், கலைகள், வாய்மொழிப் பாடல்கள், விடுகதைகள், வசைபாடுதல்கள், மருத்துவ முறைகள் போன்ற பல முறையியல்களை உள்ளடக்கியதே நாட்டார் வழக்காறுகள். ஒரு சமூகத்தின் அல்லது ஒரு நாட்டின் தொன்மையை அறிவதற்கு இவை சான்றுபகிர்கின்றன. இத்தகைய பண்பாட்டுக் கூறுகளை மீளக்கையளிப்பது இன்றைய தேவைப்பாடாகி விட்டது. அந்த வகையில் வீடுகளில் தன்னலமின்றி மருத்துவம் பார்த்து வந்த மருத்துவிச்சிகளின் சேவை போற்றத்தக்கது.
மேலைப்பண்பாட்டின் மோகத்தினால் இன்று நம் பேண்தகு பண்பாட்டுக் கூறுகள் வழக்கொழிந்து விட்டன. அதில் மருத்துவிச்சி முறையும் ஒன்று. பாரம்பரிய மருத்துவிச்சி என்பவள் நம் சாதாரண பார்வைக்கு மென்மையானவளாக இருந்தாலும் அவள் தன்னம்பிக்கை கொண்டவள். உடல், உள, இதயத்தால் பலமானவள். மிகுந்த அனுபவசாலி உம்- பெண் ஒருத்தி தான் கற்பமாக இருப்பதை உணராத நிலையிலும் அவளுடைய நடை, உடை, பாவனை மற்றும் உடலியல் மாற்றங்களை கண்டுணரக் கூடியவள். இதனை சாதாரண அனுபவம் மிக்க வயதானவர்களும் கண்டறிந்து கொள்வர். அனுபவமே சிறந்த ஆசான்.
இன்று போல் அன்று மாதம் மாதம் பரிசோதனைகள் நடை பெறவில்லை(தடுப்பூசி முறைகள்), சத்துமாக்கள் எதுவும் வளங்கப்படவும் இல்லை. ஆனாலும் ஆரோக்கியமான முறையில் பிள்ளையினைப் பெற்றெடுத்துள்ளனர். இதற்கு போசாக்கான உணவும், உடல் உழைப்பும்தான் காரணம். தடுப்பூசிகள் அறியாக் காலத்தில் நம் முன்னோர்கள் ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் தாய்க்கு வயிற்றுப் போக்கு மருந்துகளை இயற்கையாவே கொடுத்துள்ளனர். அதில் ஆமணக்கு எண்ணெய் குடிக்கக் கொடுப்பது வழக்கம். வீட்டில் உள்ளவர்களே இதனைச் செய்வர். தாய்க்கு வயிறு நோ எழுந்த பின்னரே மருத்துவிச்சியை அழைத்து பரிகாரங்களுக்கு ஆயத்தம் செய்வர். அதுவரை வீட்டில் உள்ளவர்களே அனைத்து பரிகாரங்களையும் செய்வர். இது இடத்துக்கு இடம் வேறுபட்டது.
பாரம்பரிய மருத்துவிச்சி முறை
பாரம்பரிய முறையிலே மெய்ஞானமே அவர்களின் கருவியாக இருந்துள்ளது. நாடி பிடித்தே அனைத்தையும் அறியும் அனுபவசாலிகள்தான் அன்றைய மருத்துவிச்சிமார். தாயின் வயிற்றினைத் தடவித் தடவியே பிள்ளையினை வெளியில் எடுக்கும் திறமை கொண்டவர்கள்
பிறக்கப் போகும் குழந்தை பெண்ணா அல்லது ஆணா அல்லது இரட்டைப் பிள்ளைகளா எனப் பகுத்தாயும் திறனும் இவர்களிடம் இருக்கின்றது. பத்து மாதத்திற்கு முன் பிறப்பது ஆண் என்றும், பத்து மாதத்திற்குப் பின் பிறப்பது பெண் என்றும் அறிந்து வைத்துள்ளனர். இது அவர்களின் அனுபவத்தின் மூலம் கிடைத்த அனுபவமாகும்.
ஏழு அல்லது எட்டு மாதத்திலே தாய்க்கு சட்டிநோ ஏற்பட்டு விடும். அதற்குப் பிள்ளை மெதுமெதுவாக திரும்புவதே காரணம் என்று கூறுகின்றனர்.
வெறுமனே கால் கொடுக்குகளைப் பயன்படுத்தி பிள்ளை பெறுவிக்கும் மருத்துவிச்சிமாரும் நம் சமூகத்தில் இருக்கின்றார்கள். கால் தடைகள் போடுதல், கொடுக்குகளை பயன்படுத்தல் போன்ற சில நுணுக்கமான செயற்பாடுகளையும் செய்துள்ளனர்.
குழந்தையைப் பெறுவிப்பது தாயாக இருந்தாலும் அதில் தகப்பனின் வெளிச் செயற்பாடுகள் முக்கியமான ஒன்றாக பாரம்பரிய முறையில் பேணப்பட்டது. அதாவது பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி விளாவிட்டால் உடனே கணவன் சென்று பால் கொடிகளை அறுத்தல், உரலுக்குள் ஓட்டாங்களச்சி போட்டு இடித்தல்(உடைந்த மண் சட்டி பானைகள்) போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் போது நஞ்சுக்கொடி விழும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. அது நடந்தேறியும் உள்ளது. இது இடத்துக்கு இடம் வேறுபடும். இங்கு கணவன் மனைவிக்கான உறவு உணர்வுகளோடு கலந்ததாக பிரசவ முறைகள் அமைந்துள்ளது.
இன்னும் சில பண்பாடுகளில் மனைவியின் பிரசவ வலியினைக் கணவனும் அனுபவிப்பதற்குரிய மூலிகைகளும் கொடுத்திருக்கின்றனர்.
பிரசவத்தின் போது பெறுவதற்கு கடினப்படுபவர்களுக்கு இலகுவாக்க பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர். பிரசவத்தின் போது மூலிகைகள் குடிக்கக் கொடுத்தல், நன்றாக சத்தி எடுக்க வைத்தல், அடி வயிற்றில் ஆமணக்கு எண்ணெய் தடவுதல் போன்ற பலவழிமுறைகளைக் கையாண்டுள்ளனர்.
இரத்தப் போக்கு பெருகாமல் இருப்பதற்குரிய சில நுட்பமுறைகளையும் கையாண்டுள்ளனர்.
குழந்தை பிறந்த பின்னர் பல நடைமுறைகளைக் பின்பற்றியுள்ளனர்.
• குளிக்க வைக்கும் முறை
குழந்தை பிறந்து மூன்று நாட்களுக்கு ஆடாதோடை, வேப்பம் பட்டை, வேப்பம் இலை, நொச்சி, வாதமடக்கி போன்றவற்றை அவித்து தாயினைக் குளிப்பாட்டுவர். பின்னர் ஒன்பதாம் நாள் சுடுதண்ணியில் குளிப்பாட்டுவர், பதினொராவது நாட்களுக்குப் பின் பச்சத்தண்ணியில் குளிப்பாட்டுவர். ஒன்பது நாட்கள் வரை பெரியவர்களே அனைத்தையும் செய்து வைப்பர். கிட்டத்தட்ட இது ஒரு சம்பிரதாயமாக சில ஊர்களில் பின்பற்றி வருகின்றனர்.
• வயிற்றுப் புண் ஆறுவதற்கு
காயம் என்று சொல்லப்படும் ஒரு கூட்டு அரைத்து சாராயத்தில் கலந்து காலை மாலை என்று தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுப்பர். இதன் போது சரியான தாகம் எடுக்கும். ஆனால் தண்ணீர் குடிப்பதற்குக் கொடுக்க மாட்டார்கள். அதனையும் மருந்துபோல் ஒரு முடடுதான் கொடுப்பார்கள். காரணம் வயிறு பளுத்து சீள் வடியும் என்பதனால். பின்னர் வேர்க்கொம்பு அவித்துக் குடிக்கக் கொடுப்பர். கிட்டத்தட்ட ஜந்து நாட்களில் வயிற்றுப்புண் ஆறிவிடும் என்பது அவர்களின் நம்பிக்கை
• உணவு கொடுக்கும் முறை
ஜந்து நாட்களுக்கு பச்சிளம் கோழிக் குஞ்சினை மிளகுதண்ணி அரைத்துக் காய்ச்சிக் கொடுப்பர். சம்பிரதாயத்துக்கென்று இறைச்சி சொதி, இறைச்சிப் பொரியல் செய்து கொடுப்பர். ஜந்தாம் நாள் தான் இரவுச் சாப்பாடு கொடுப்பர். பதினைந்தாம் நாள் தலைக்குத் தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள் போட்டு வழமையான கறிக்குழப்பினைக் கொடுப்பர்.
இவ்வாறான பல நடைமுறைகள் நம் பாரம்பரிய முறைகளுக்குள் இருந்துள்ளன. அது இடத்துக்கு இடம் வேறுபட்ட முறைமைகளுக்குள் அடங்கும். எமது பாரம்பரியம் திட்டமிட்டு அழிக்கப்பட்டவை இன்று எச்சங்களாக ஆங்காங்கே வடிவமிழந்து கிடக்கின்றன. அவற்றை கண்டறிவது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. அதற்கான ஒரு வடிவத்தை கொடுப்பது எமது கடமை. இன்று பல காரணங்களினால் அழிவை நோக்கிப் பயணிக்கும் மனித சமுதாயம் தேடுவது தம் பழைய முறைமைகளையே. ஆகவே தவறவிடப்பட்ட சமூக நலன்பேண் முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவோம்.
அ.ஆன் நிவேத்திகா