யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இரவுவேளைகளில் வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள பற்றைக் காணிக்குள் கூடாரம் அமைத்து மறைந்து வாழ்ந்து வந்தநிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினா் குறிப்பிட்டனர்
இதுதொடர்பில் காவல்துறையினா் தெரிவித்ததாவது;
மானிப்பாய் காவல்துறைப்பிரிவில் 5 கொள்ளைச் சம்பவங்கள், பளை, தெல்லிப்பழை, இளவாலை காவல்துறைப் பிரிவுகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டமை ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தனர். இந்தக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கு சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் கொள்ளைக் குற்றச்சாட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கட்டுடையில் பற்றைக் காணிக்குள் தற்காலிக கூடாரம் அமைத்து மறைந்திருந்த போது கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கட்டுடை மற்றும் நவாலிப் பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் 4 பவுண் தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளன.
கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளனர். அவர்களிடம் 2 வாள்கள் மற்றும் 15 பவுண் நகைகள் உள்ளன என்று கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொள்ளைக் கும்பல் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளது. அவர்கள் ஒரு இடத்தில் கொள்ளையில் ஈடுபட்டால் வேறு ஓர் பிரதேசத்துக்குச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தலைமறைவாகி வாழ்வதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்..
சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனர். # கூடாரம் #கொள்ளையர்கள் #கைது #வாடகை #மானிப்பாய்