(தெரிந்ததும் தெளியப்பட வேண்டியதும் )
ஆவணமாக்கல் என்பது, இன்றளவில், பரந்தளவில் பேசப்படுகின்ற, அல்லது சிந்திக்கப்பட வேண்டிய எண்ணக்கரு என்ற வகையில், சமகாலத்தில், முக்கியத்துவ மிக்க செயலொழுங்காகக் கருதப்பட்டு, பலதளங்களிலும் விவாதிக்கப்படுவதும், கருத்துரைக்கப்படுவதும் அவதானத்திற்குரியதாகிறது. அந்த அடிப்படையில் ஆவணமாக்கல் என்பது, எதிர்காலப்பயன்பாட்டிற்காக, சேமித்து பாதுகாக்கப்பட வேண்;டிய, ஒன்று என்ற ரீதியில் முக்கியம் பெறுகிறது.
இந்த அடிப்படையில், ஆவணமாக்கல் என்பது, எதிர்கால வாழ்வியலை அல்லது காத்திரமான சமூகக்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்காக் கொண்டு, பாதுகாத்து பராமரித்தல், கையளித்தல் என்ற நோக்கின் பாற்பட்டதாகவும், மறுபுறம் தமது அடையாளங்களையும், உரிமைகளையும் பாதுகாத்து நிலைநிறுத்திக் கொள்வதன் பொருட்டானதாகவும், கேள்விக்குட்படுத்தப்படும் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளுதல் என்ற நோக்கின் பாற்பட்டதாகவும் அமைகின்றது. சுருக்கமாகக் கூறினால், ஆவணமாக்கல் என்பது, எதிர்காலப் பயன்பாட்டையும், காத்திரமான சமூக உருவாக்கத்தையும், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளல், அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தல் ஆகிய இரு பிரதான நோக்கங்களின் பாற்பட்டது என்ற நிலைப்பாடாகும்.
வரலாற்றில் புனைவுகள் நிகழ்கின்ற போது, குறித்த சமுதாயத்தில், இனங்களில், குழுமங்களில் ஆவணம், ஆவணகாப்பகம் என்பது, முக்கியத்துவமிக்க விடயமாகிறது. இந்த அடிப்படையில், தனியாள் ஆவணம் என்பது, தேசிய முக்கியத்துவம் மிக்க, தேசிய ஆவணமாக்கல் செயற்பாட்டில் முதன்மையான, பிரதானமான வலுவூட்டல் செயற்பாடாக அமைகிறது. வரலாற்றில் குரும்பசிட்டி, இரா.கனகரத்தினமும், காரைக்குடி ரோஜாமுத்தையாவும் இந்தளவில் ஆவணமாக்கல் செயற்பாட்டில் முதன்மை பெறுகின்றனர். ஆவணமாக்கல் என்பது, தனியாள், குடும்பம், சமூகம், தேசம் என்ற நீரோட்டத்தில், அவரவர் உரிமைகளின் காப்பீடாகவும், அடையாளமாகவும் கருதப்படுகின்றது.
இந்த அடிப்படையில், ஆவணமாக்கல் என்பது, சாசனங்கள், புத்தகங்கள், நிழற்படங்கள், காணொலிகள், ஒலி,ஒளிப்பதிவுகள், படங்கள், துண்டறிக்கைகள், சிறுகையேடுகள், குறிப்புகள் முதலிய புறப்பொருள் சார்ந்து நடைபெறுவதோடு, அவை ஆவணமாக்கலில் முதன்மை பெறுகின்றன. இத்தகைய ஆவணமாக்கல் என்பது நவீன வாழ்வியல் நீரோட்டத்தில் இன்றியமையாத செயற்பாடாக கருதப்படுகிறது.
வரலாற்றில் நாகரீகங்களின், தோற்றமும், அவற்றின் தனித்துவங்களும் என்பது, அந்த அந்த கால ஆவணப்படுத்தல் முறைகளின் ஊடாக வெளித்தெரிகின்றது. இந்த அடிப்படையில் நோக்குகின்ற போது, தனியாள் நினைவுகள் என்பது ஆவணமாகவும், ஆவணகாப்பகமாகவும் அமைவதை அவதானிக்கலாம். இதனடிப்படையிலேயே வாய்மொழி மரபு அல்லது வாய்மொழித் தகவல்கள் ஆவணத்தில் முதன்மை பெறுகின்றன.
இத்தகையதொரு பின்னணியில் நின்று நோக்குகின்ற போது, அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில், பாதுகாத்து வைத்திருக்கின்ற, நாட்குறிப்புகள், கல்வி தகைமை சான்றிதழ்கள், வரலாற்று முக்கியத்துவமிக்க தகவல்களை சேகரித்து வைத்தல், முத்திரைகளை சேகரித்து வைத்தல், வீட்டு பத்திரம், காணி உரித்து போன்ற இன்னப்பிற செயல்களும் ஆவணமாக்கல் செயன்முறையில், கருநிலையாக அமைகின்றன. சில பரம்பரைகளும், குடும்பங்களும், சமுகக்குழுமங்களும் இத்தகைய ஆவணமாக்கல் செயன்முறையில், ஆவணமாக விளங்குகின்றமையையும் அவதானிக்கலாம்.
அதிகார எல்லைக்குள் வாழுகின்ற மக்கள், தத்தமது மரபுரிமைகளை காக்கவும், அடையாளப்படுத்திக் கொள்ளவும் அதன்வழி தேசிய நீரோட்டத்தில், தமது மரபுரிமைகளின் புனைவிற்கான வாய்ப்பை நலிவடையசெய்து, உண்மைதன்மையை, யதார்த்தத்தை வெளிப்படுத்தவும் ஆவணமாக்கல் வாய்ப்பாக அமைகின்றது. குறிப்பாக, அந்த அந்த காலப்பகுதியில், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆவணமாக்கல் செயற்பாட்டில் ஈடுபடும் போது, தாம்சார்ந்த பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், ஆவணப்படுத்தலும் நடைபெறுகின்றது. இந்த நிலையில், ஏனைய சமூக அமைப்புகள் புறகணிக்கப்படுவதும், அவர்களின் பதிவுகள், ஆவணமாக்கப்படாமல் கைவிடப்படுவதும் நிகழ்கின்றது. இதுவரை கற்பிக்கப்பட்டுவருகின்ற இலங்கை வரலாற்றிலும், இத்தகைய நிலைப்பாட்டிற்கான சான்றாதாரங்களை காணமுடியும்.
இத்தகைய ஆவணமாக்கல் செயன்முறை என்பது, மிக பிரதானமாக, பக்கசார்பான கற்பிதங்கள் வரலாற்றில், முன்மொழியப்படவும், வரலாற்றில் தகவல்கள், வரலாற்று முக்கியத்துவமிக்க சம்பவங்கள், நிகழ்வுகள், அதன் உண்மைத்தன்மைகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதற்கான சூழலுக்கான முடக்கமாக அமைகின்ற பட்சத்தில், அவற்றை ( ஆவணம்) முழுமையாக அல்லது பகுதியளவில் சிதைத்தல் என்பது, திட்டமிட்ட செயலொழுங்காக முன்னெடுக்கப்படுவதையும் அவதானிக்கலாம். வரலாற்றில், 1981 இல் யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டமை, 1987 இல் யாழ் பல்கலைக்கழக நூலகத்தின் தென்னாசியப் பகுதி எரியூட்டப்பட்டமை ஆகிய நிகழ்வுகளை, இத்தகைய இருட்டடிப்புச் செயல்களாகவே கருதக்கிடக்கிறது. ஆக, இத்தகைய வரலாற்றுத் துயர் சம்பவங்கள், அடிகோடிட்டு காட்டுவது, ஆவணமாக்கலின் முக்கியத்துவத்தையும், மறுபுறம் ஆவணத்தின், மீயுச்ச வலுவையும் என்பது தெளியப்பட வேண்டியது.
இந்த அடிப்படையில் நோக்கின், ஆவணமாக்கல் செயன்முறை என்பது தனிமனித அளவிலும் சமுதாய அளவிலும் முதன்மை பெறுகிறது. குறித்தவொரு விடயம் சார்ந்த அறிவிற்கானத் திறவுகோள் என்ற அடிப்படையில், ஆவணப்படுத்தல் பல்வேறு தளங்களிலும், பல்வேறு செயலொழுங்குகளுக்கூடாகவும், முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஆற்றுகைக்கலைகளே ஆவணம்
கலை வாழ்க்கைக்காக என்ற அடிப்படையில், குறித்தவொரு சமூகத்தின் பின்புலத்தினை, சிறப்பாக பண்பாட்டு பின்புலத்தை அறியவும், தெளியவும் அதன்வழி முற்போக்கான சமுதாயக்கட்டமைப்பை உருவாக்கவும் கலைகள் வாழ்வியலில் ஓர் அங்கமாகி, முதன்மைபெறுகின்றன. மறுபுறம் சடங்குகளும், விழாக்களும் வாழ்வியலில் இணைந்த அம்சமாகத் தொழிற்படுகின்றன. இதனடிப்படையில், நிகழ்த்துகை பாரம்பரியமாக விளங்குகின்ற, ஆற்றுகைக்கலைகளை ஆவணப்படுத்தல் என்பது, முக்கியமாக சிந்திக்கப்பட வேண்டியது.
இந்த அடிப்படையில், இதுவரைகாலமும் ஆற்றுகைக்கலைகளை ஆவணப்படுத்தல் என்பது, காணொளிகள், புத்தகங்கள், வாய்மொழி தகவல்கள், படங்கள் என்ற அடிப்படையில், ஆவணப்படுத்தல் செயன்முறையாக முன்னெடுக்கப்படுவதையே அவதானிக்க முடிகிறது. இத்தகைய ஆவணமாக்கல் என்பது, அதன் முழுமையான பரிமாணத்தை வெளிப்படுத்துகிறதா என்பது சிந்திக்கப்பட வேண்டியது. குறிப்பாக, ஒரு எழுத்தாளர் குறித்த ஆவணப்படுத்தல் என்பது, ( சுயசரிதை) எப்போதும் அவரின் முமுமையான தகவல்களை ( பிறப்பு முதல் இறப்பு வரையான) அத்துனைக்கால வாழ்க்கையில், நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கின்ற பட்சத்தில், பாரம்பரிய கலைகள் என்று சொல்லப்படுகின்ற உள்ளுர்க்;கலைகளை ஆவணமாக்கல் என்பதும் அதன் முழுபரிமாணத்தை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும். மாறாக, ஒரு பதிவு அதன் முழுமையை வெளிப்படுத்துவதான கற்பிதங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடக்கூடாது.
பதிவு என்பது, குறித்த சம்பநிகழ்ச்சிக்கான ஆதாரம் என்பதாக அமைய, ஆவணம் என்பது, ஆதாரமாகவும், அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதற்கான, மரபுரிமையாகவும், அறிவை பெற்றுக் கொள்வதற்கான, எதிர்காலப் பயன்பாட்டிற்கான, சேமித்து பாதுகாக்கப்படக்கூடிய சேமிப்பகம் என்ற வகையில், பதிவு என்பதையும் கடந்து முக்கியத்துவமிக்க ஒன்றாகிறது.
வரலாற்றில், ஆவணங்கள் சிதைக்கப்பட்டமைக்கான, வலுவான சான்றாதாரங்கள் இருக்கின்ற பட்சத்தில், ஆற்றுகைக்கலைகளை ஆவணப்படுத்தல் என்பது, இத்தகைய பதிவுகள் வழியே, கற்பிதங்களை புனைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடாதிருத்தலிலும் கவனஞ் செலுத்த வேண்டிக்கிடக்கிறது. குறிப்பாக, சனரஞ்சகபுத்தகபண்பாடும் அதன் வழியே அறிவை, தகவலைப் பெற்றுக் கொள்ளலும் என்பதான போக்கு சமகாலத்தில், வலுவானநிலையில் பேணப்பட்டு வருகின்றமையை அவதானிக்கமுடிகிறது. இந்த நிலையில், புத்தகங்கள் ஆவணங்களின் ஒருபகுதியாக அமைகின்ற பட்சத்தில், புத்தகங்களில் சொல்லப்பட்ட தகவல்களை ஆற்றுகைக்கலைகளின் ஆவணமாகக் கருதுதல் என்பது அதன் முழுபரிமாணத்தையும் வெளிப்படுவதற்கான அல்லது தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்பை பூரணமாக வழங்குகிறதா என்பது குறித்து சிந்திக்க வேண்டிக்கிடக்கிறது.
குறிப்பாக, 1960 களில், பேராசிரியர். சு.வித்தியானந்தன் கூத்து செம்மையாக்கல் என்றடிப்படையில், மேற்கொண்ட இராவணேசன், கர்ணன்போர், நொண்டிநாடகம், வாலிவதை ஆகிய நான்கு அரங்க அளிக்கைகளை மையப்படுத்தியே, ஈழத்தில் பாரம்பரிய அரங்க செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாக கற்பிக்கப்பட்டு வந்துள்ளதுடன், பாடசாலைகளில் குறிப்பாக தமிழ்மொழித்தினப் போட்டிகளில், பாரம்பரிய ஆற்றுகைகள் என்ற அடிப்படையில், படசட்ட மேடையில், ஆற்றுகை செய்யப்படுகின்ற ‘ கூத்துக்களையே’ கூத்து என்பதான தவறான கற்பிதங்களையும், புரிதல்களையும் நவீன மத்தியதர வர்க்கம் பெற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக சில பதிவுகள் இருந்து வருகின்றமை அவதானத்திற்குரியது. ஆக இந்த நிலையில் தான், உண்மையான தன்மையை ஆவணப்படுத்தல் என்ற அடிப்படையில், ஆற்றுகைகளே ஆவணமாகவும், ஆவணகாப்பகமாகவும் அமைகின்றமை குறித்து சிந்திக்க வேண்டி இருக்கிறது.
ஆற்றுகைக்கலைகளை பொறுத்தவரை, புத்தகங்களில் சொல்லப்பட்டு இருக்கின்ற சம்பவ நிகழ்ச்சிகள் அல்லது தகவல்கள் என்பது, குறித்த நிகழ்வுகளை ஊகிப்பதற்கான வாய்ப்பையே பெரும்பாலும் வழங்குகிறது. உதாரணமாக, கூத்தில், எட்டுப்போடுதல் என்பது ஆட்டக்கோலங்களில் ஒன்றாக ஆவணம் என்று சொல்லப்படுகின்ற பதிவுகளில் காணப்படுகின்றது. இன்றைய 21ஆம் நூற்றாண்டு என்பது, இன்னும் நூறுவருடங்கள் கடந்த நிலையில், அடுத்த தலைமுறைக்கான பாரம்பரியமாக அமையபோகிறது. இந்த நிலையில் ஆவணமாக கையளிப்பு செய்யப்படுகின்ற குறித்த பதிவு எட்டுப் போடுதல் என்பதை எப்படியானதொரு வியாக்கியானத்தில் குறித்த தலைமுறைக்கு விபரிப்பு செய்யபோகின்றது என்பது சிந்திக்கப்பட வேண்டியது. இந்த நிலையில் தான் பதிவுகள் ஆற்றுகைக்கலைகளை பொறுத்தவரை ஊகிப்பிற்கான சாத்தியக்கூறுகளை பெறுமளவில் வழங்குகிறது எனலாம்.
ஆனால் நடைமுறையில், செவிவழி கடத்தப்பட்டு, பயில்வுநிலையில் இருக்கின்றமையின் காரணமாகவும், அவரவர் அறிவு பாரம்பரியமும் நினைவும் ஆவணமாக, இருக்கின்றமையின் காரணமாகவும், தொடர்ச்சியான இயங்கியல் தன்மையை பேணுவதற்கான வாய்ப்பு ஆற்றுகைக்கலைகளில் கிட்டுகிறது.
இந்த வகையில்பாரம்பரியம் அல்லது உள்ளுர்க்கலைகள் என்பது, உறைநிலையில் ( கசநநணந) இருப்பதான கற்பிதங்கள், கட்டவிழ்க்கப்பட்டு, அதன் இயங்கியல் குறித்த தெளிவும், புரிதலும் கிட்டுவதற்கு ஆற்றுகைக்கலைகளை, அதன் முழுபரிமாண இயங்கியலுடன் ஆவணப்படுத்தல் என்பது, இன்றியமையாததாகிறது.
இந்த அடிப்படையில், இதுவரைகாலமும் இடம்பெற்றிருக்கின்ற, அல்லது இடம்பெற்றுவருகின்ற ஆவணப்படுத்தல் செயலொழுங்கு ஆற்றுகைக்கலைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் காணொளிகளை மையப்படுத்தியதாக, புத்தகங்களை மையப்படுத்தியதாக அமைவதையும், ஆய்வு தேவைக்கருதி, மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வேடுகளை மையப்படுத்தியதாக அமைவதையும் அவதானிக்க முடிகிறது.
இவற்றை பொதுவில் ஆவணம் என்பதாக கருதுவதைவிட, பதிவு அல்லது சான்று, அல்லது குறியீட்டு அடையாளம் என்பதாக கொள்ளுவதே பொருத்தப்பாடுடையதாகிறது. ஏனெனில், ஆற்றுகைக்கலைகளே ஆவணமாகவும், ஆவணகாப்பமாகவும் அமைகின்றது என்பதே அதன் இயங்கியல் சூழலை அவதானிக்கின்ற போது மெய்பிக்கப்படுகின்றது.
குறிப்பாக, கூத்துக்கலை என்பது, சனரஞ்சக அரங்கு என்ற அடிப்படையில், இதுவரைகாலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆவணம் என்பது அதன் அரங்கேற்ற விழாவை காணொளியாக பதிவு செய்தல் என்ற செயலொழுங்காக அமைந்தமையையே அவதானிக்க முடிகிறது. இந்த ஆவணம் என்பதாகச் சொல்லப்படும் பதிவு என்பது அதன் முழுபரிமாணத்தையும், வரலாற்று பின்னணியையும் வெளிப்படுத்துகிறதா என்பதில் தான் ஆவணமாக ஆற்றுகைக்கலைகளை பொறுத்தவரை, காணொளியை கொள்ளுவதிலுள்ள சிக்கல் நிலை வெளித்தெரிகின்றது.
ஆற்றுகைக்கலை என்று சொல்லும் போது, ஆற்றுவோர், ஆற்றுப்படுத்தப்படுவோர், ஆற்றுகைவெளி என்ற முக்கோணத் தொடர்பு என்பது இன்றியமையாதது. அத்தகைய முக்கோணத் தொடர்பின் வெளிப்பாடாக, இதுவரையான ஆவணமாக்கல் செயற்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றதா என்பது குறித்தும், ஆராயவேண்டிக்கிடக்கிறது.
ஆற்றுகைக்கலைகளைப் பொறுத்தவரை, அதன் ஆற்றுகைக்காலம் குறிப்பாக கூத்தை எடுத்துக் கொண்டால், ஆடுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டு, சட்டங்கொடுத்தல், களரியடித்தல், அடுக்;குப்பார்த்தல், சதங்கையணிவிழா, அரங்கேற்றம், வீட்டுக்கு வீடு ஆடுதல் என்ற செயலாழுங்கில் ஆற்றுகை செய்யப்படுகின்ற காலம் ( பயிற்சி காலம்) அதன் ஒவ்வொரு செயன்முறைகளிலும், ஆவணப்படுத்தலாக அமைகிறது.
குறிப்பாக, இத்தகைய செயன்முறை காலத்தில், மேற்கொள்ளப்படுகின்ற, முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் பயிற்சி காலத்தில், ஆட்டவேகத்தை அடிப்படையாகக் கொண்டு, வழங்கப்படுகின்ற பாத்திரங்களைத் தீர்மானித்தல், பாட்டுக்களைத் தெரிவு செய்தல், ஆட்டங்களை கூட்டிக்குறைத்தல் இவையெல்லாம் பரிட்சயத்தின் அடிப்படையிலும், அனுபவத்தின் அடிப்படையிலும், நினைவில் வைத்திருக்கின்ற விடயங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த அடிப்படையில் தான், ஆற்றுகைக்கலைகளை பொறுத்தவரை, நினைவுகள் சிறந்த ஆவணமாக இருப்பதை அறியமுடிகிறது.
இயங்கியல் தன்மையுடன், கூடிய இத்தகைய ஆற்றுகைக்கலைகள், பிரதேசத்திற்கு பிரதேசம், ஊருக்குஊர் ஆற்றுகை செய்யப்படுகின்ற விதங்களில், வித்தியாசங்களைக் கொண்டுள்ளதுடன், ஆற்றுகை செய்யப்படுகின்ற காலஎல்லைக்குள்ளும் வித்தியாசங்களை பேணுவதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக ஆற்றுகை மொழி சார்ந்து, ஆற்றுகை செய்யப்படுகின்ற இடம் சார்ந்து, உடை ஒப்பனை சார்ந்து, ஆற்றுகை செய்யப்படுகின்ற கருத்தியல் சார்ந்து இத்தகைய நுண்ணியதான வித்தியாசங்களை அவதானிக்கமுடியும்.
இத்தகைய வித்தியாசங்களும் மாற்றங்களும் என்பது, பயில்வு சூழலில், அண்ணாவியார், கலைஞர்கள், ஊர்மக்கள், மூத்த கலைஞர்கள் என அவரவர் சமூகக்குழுமம் சார்ந்தும், தனித்தனியன்களாகவும், அவரவர் அனுபவம், நினைவில் இருக்கின்ற சம்பவ நிகழ்ச்சிகளின் கோர்வை என்பவற்றின் அடிப்படையில், நுணுக்கமாகவும், செயற்திறனுடனும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் தான் தனித்தனியன்களான மனிதர்களின், ஆளுமைகளின் நினைவும், அனுபவமும் ஆவணகாப்பமாக அமைவதை அவதானிக்க முடிகிறது.
தமிழர் கூத்து மரபு என்;பது பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. குறிப்பாக மட்டக்களப்பு வடமோடி, தென்மோடி கூத்துக்கள், புலிக்கூத்து, மகிடிக்கூத்து, வசந்தன் கூத்து, என்பனவும், மன்னார் கூத்து மரபுகளும், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பானக்கூத்து மரபுகளும், மலையக காமன் கூத்து, பொன்னர்சங்கர், அருச்சுனன்தபசு போன்ற கூத்துக்களும் பிரதேசத்திற்கு பிரதேசம், அண்ணாவியாருக்கு அண்ணாவியார், ஊருக்கு ஊர் வித்தியாசங்களுடன் பயில்வு நிலையில் இருந்து வருகின்றன.
இத்தகைய வித்தியாசங்கள் என்பது, அவரவர் குடும்ப பின்னணி சார்ந்து( அண்ணாவியார் ) கடத்தப்படுகின்ற அறிவு நிலை சார்ந்தும், நினைவில் இருக்கின்ற சம்பவங்கள் சார்ந்தும், செவிவழி கேட்கப்பட்டு, நினைவில் ஆவணப்படுத்தி இருக்கின்ற விடயங்கள் சார்ந்தும் பேணப்பட்டு வருவதுடன், பயில்வு நிலையிலும் இருந்து வருகின்றது. இந்த அடிப்படையில் தான் ஆற்றுகைக்காலம் என்பது ஆற்றுகைக்கலைகளை பொறுத்தவரை. சிறந்த ஆவணமாக அமைகின்றது.
ஆற்றுகைக்காலம் என்பது, கூத்தை பொறுத்தவரை, குறித்த ஆற்றுகைக்கான பயிற்சிகளமாக மாத்திரம் அமையாமல், உரையாடல்கள்வழி முன்னைய சம்பவ நிகழ்ச்சிகளினை மீட்டிப்பார்ப்பதற்கும், நினைவில் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்ற, விடயங்களின் வழி, ஆற்றுகைகளை முன்னெடுத்து செல்லவும் வாய்ப்பாக அமைவதோடு, பல்வேறு ஆளுமைகளை நினைவுகூறுவதற்கும், வாய்ப்பாக அமைகின்றது. இந்த நிலையில், ஆவணப்படுத்தலின் தார்மீக பொறுப்பாக அமைகின்ற உண்மைத்தன்மையை வெளிப்படுத்தல் அல்லது ஆவணப்படுத்தி வைத்தல் என்பது ஆற்றுகைக்கலைகள் வழி சாத்தியமாகிறது.
ஆற்றுகைகள் அல்லது ஆற்றுகைக்காலம் என்பது, ஆற்றுகைக்கான அறிவுபுலமாக மாத்திரம் அமையாமல், பாமரர், படிப்பறிவற்றவர் என்ற அடிப்படையில், காலனிய கல்விசிந்தனையில், நின்றுக் கொண்டும் புறகணிப்புக்குட்படுத்தப்பட்ட, உள்ளுர் அறிவுமுறைகளின் புரிதலுக்கும், அங்கீகரித்துக் கொள்வதற்கும், அதன்வழி நமது தொட்டுணர முடியாத பண்பாட்டு மரபுரிமைகளின் பாதுகாப்பிற்குமான அவசியத்தை, ஆற்றுகைகள், குறிப்பிட்ட ஆற்றுகைக்குரிய காலம் என்பது, நடைமுறையில், சமகால தலைமுறையினரிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த சிந்தனை மாற்றம் என்பது, ஆவணம் என்று சொல்லப்படுகின்ற, பதிவுகளில் சொல்லப்பட்ட தகவலை ஆவணமாக கையளிப்பு செய்யும் போது ஏற்படுதல் என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில், நடைமுறையில், படசட்டமேடையில், ஆடப்படுவது தான் கூத்து என்ற ஒற்றைபரிமாண கருத்துநிலைகள் சமகாலத்திலும், பேசப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம். இந்த அடிப்படையில் நோக்கும் போது சமகால சிந்தனை மாற்றத்திற்கும், அறிவுடைமைகளின் பல்வகைமைத்தன்மையை அங்கிகரித்தக் கொள்வதற்கும், ஆற்றுகைகள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்த நிலைiமை என்பது, ஆற்றுகைகளே ஆவணமாகத் தொழிற்பட்டமையின் விளைவு என்றே கருதக்கிடக்கிறது.
ஆற்றுகைக்கலைகள் காலவோட்டத்தில், தன்னை புதுபித்துக் கொண்டு இயங்குகிறது என்ற அடிப்படையில், கருத்தியல் சார்ந்த கலந்துரையாடல்களும், கட்டவிழ்க்கப்பட்டு கட்டப்பட வேண்டிய சம்பவ நிகழ்ச்சிகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு மீளுருவாக்கஞ் செய்யப்படுகின்றன. இத்தகைய நிலைப்பாடு என்பது, கூத்துச் சூழலில் இடம்பெற்றமையின் வெளிப்பாடாக கூத்து மீளுருவாக்கம் அமைகிறது. நிலவிய கற்பிதங்களை கேள்விக்குட்படுத்தி, சமகால சூழலுக்குள் பேசவேண்டிய, விடயங்களை உள்வாங்கிக் கொண்டு, சீலாமுனை கூத்து மீளுருவாக்கச் செயன்முறை, முன்னெடுக்கப்படுகிறது.
இத்தகைய முன்னெடுப்பு என்பது, ஏற்கனவே, தமது நினைவில், அனுபவத்தில் ஆவணப்படுத்தி வைத்திருந்த கருத்தியல்களோடு, சமகால நிகழ்வுகளை பொறுத்தி பார்ப்பதன் வழியும், கலந்துரையாடல்கள் வழியும் மேற்கொள்ளப்படுகிறது. இதனடிப்படையிலே, 2002 இல் அருச்சுனன் பெற்ற பாசுபதம், 2004 இல் இலக்கணண் அபிமன்யு வதை, சிம்மாசனபோர் முதலிய மீளுருவாக்கக் கூத்துக்கள் இடம் பெறுகின்றன. இத்தகைய பின்னணி என்பது, ஆற்றுகைவடிவம் ஆவணமாகத் தொழிற்பட்டமையின் வெளியீடாகவே பார்க்கப்பட வேண்டியது.
இதேநேரம், ஆவணம் என்று சொல்லப்படுகின்ற பதிவுகளில், கூத்து என்பது, வடமோடி கூத்து என்பது, தென்மோடி கூத்து என்பது, கூத்து மீளுருவாக்கம் என்பது இன்ன விடயம் தான் என்ற தகவல், ஒருவரையறைக்குள் நின்றுவிட. குறிப்பிட்ட ஆற்றுகை சார்ந்து செயற்படுகின்ற போது, ஆற்றுகைக்காலச் செயற்பாடுகளில் பங்குபற்றும் போதுதான், காலத்தின் அவசியம் கருதி ஏற்படுகின்ற மாற்றங்கள் என்பது, ஆற்றுகைக்கூடாக முன்மொழியப்படுவதை அவதானிக்கமுடியும். இந்த பின்னணியில் தான் குறிப்பிட்ட ஆளுமையின் நினைவுகள், முதன்மை ஆவணகாப்பகமாக அமைவதையும், பயிற்சிகாலம் என்பது சிறந்த ஆவணப்படுத்தல் செயன்முறையாக அமைவதையும் அவதானிக்கலாம்.
ஆற்றுகைவெளியில், ஆற்றுப்படுத்தப்படுவோர் என்ற அடிப்படையில், சிறுவர்களும், பெண்களும் முதன்மை பெறுகின்றனர். குறிப்பாக கூத்தின் ஆரம்பகால செயற்பாடுகளில் இருந்தே, சிறுவர்கள் தகவல்களை கடத்துபவர்களாக, செயற்பட்டுவருகின்றனர். இதனைஅடியொட்டி, ஆரம்பத்தில் ஆண்களுக்கானதாக வரையறுக்கப்பட்டிருந்த கூத்து, சிறுவர்களுக்கான கூத்துக்களின் அவசியத்தையும், பெண்களின் பங்குபற்றலையும் ஏற்புடையதாக்கிக் கொண்டு, பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், சில கற்பிதங்;களை கேள்விக்குட்படுத்தியும் நடைமுறையில் இயங்கியலுக்குட்பட்டு, உயிர்த்துடிப்புடன் இயங்கிவருகிறது. இத்தகைய உயிர்த்துடிப்பு மிக்க இயங்கியல் என்பது, அதன் ஆற்றுகைவழி சாத்தியமடைந்தமை என்பது மறுதலிக்க முடியாதது.
சில ஆற்றுகை வடிவங்கள், காலத்திற்கு ஏற்ப தம்மை புதுபித்துக் கொண்டு, சமகால விடயங்களை கேள்விக்குட்படுத்துவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இந்த அடிப்படையில்தான், மகிடிக்கூத்து, சமகால அதிகார நடைமுறைகளை கேள்விக்குட்படுத்துவதற்கான, வாய்ப்பை வழங்கியுள்ளமை அவதானத்திற்குரியதாகிறது. இத்தகையதொரு நிலை என்பது, நூல்வடிவிலான ஆவணம் என்று சொல்லப்படும் பதிவில் இருந்து விலகி, காலத்திற்கு காலம், ஆற்றுகை செய்யப்பட்டுவந்த பின்னணியினூடாக சாத்தியமானது எனலாம்.
இந்த அடிப்படையில், பார்க்கின்ற போது, நூல்கள், இலக்கியங்கள் என்பன ஆற்றுகைக்கலைகளைப் பொறுத்தவரை, இரண்டாம் பட்ச ஆவணம் என்று சொல்லப்படுகின்ற பதிவுகளாகவும், ஊகித்தல் அல்லது படமாக விரிவதற்கான சூழலை கட்டமைக்கின்ற சான்றாகவும், கொள்ளப்படலாமே தவிர, முழுமையான ஆவணப்படுத்தலாகக் கொள்ளுதல் என்பது சிக்கல்தன்மையுடையது.
பாரம்பரியம் உறைநிலையில் இருப்பதான கற்பிதங்கள் கேள்விக்குட்படுத்தப்படாதவரை, பதிவுகள், ஆவணமாதல் சாத்தியமாகிறது. மாறாக, பாரம்பரியம் என்பது குறித்தத் தெளிவும், பாரம்பரியக்கலைகள் என்று சொல்லப்படுகின்ற உள்ளுர்க்கலைகள் இயங்கியலுக்குட்பட்டுக் கொண்டிருப்பது குறித்த அவதானமும் மேற்கிளம்புகின்றபட்சத்தில், ஆற்றுகைக்கலைகளே, ஆவணமாக இருக்கின்ற நிலையை உணரலாம். இந்த அடிப்படையில், ஆற்றுகைக்கலைகளை அதன் கையிருப்பில், சுயாதீனமான தொழிற்பாட்டிற்கு இடமளித்தல் என்பதும், அடுத்த தலைமுறையினர் கையில், ஆற்றுகையையே ஆவணமாக கையளித்தல் என்பதும் இன்றியமையாததாகிறது.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.