பல்வேறு வெகுசன வெளிகளில் பெண்ணிலைவாதம் சார்ந்த உரையாடல்கள் நிகழ்த்தப்படும் நிலை மேற்கிழம்பியமை குறிப்பிடத்தக்தாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காரணமாக உண்மையான விடயம் மூடி மறைக்கப்படும் பண்பாட்டிலிருந்து, இவ்விதமாக தொடர் செயற்பாடுகளால் புதிய எண்ணக்கருக்களின் முன்மொழிதல்களையும், பெண்களுக்கு எதிரான பாராபட்சங்களையும் இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான போராட்டத்தினை வலுவூட்டும் கள அனுபவங்களையும் பெண்ணிலைவாதச் செயல்கள் வழங்கியுள்ளது.
இன்றைய அளவிலே முக்கியமாக பேசப்பட்டு வரும் விடயமாகவும் கருத்தியலாகவும் பெண்ணிலைவாதம் அல்லது பெண்களின் உரிமைகள் மற்றும் ஆண், பெண் சமத்துவம் தொடர்பாக பரவலாக பேசப்படுகின்றது. இவ் எண்ணக்கருவானது மேற்கத்தேய நாடுகளைப் பொறுத்த வரையில் சற்று பழைய விடயமாயினும் மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரையில் ஆண், பெண் சமத்துவம் என்பது இன்னும் கேள்விக் குறியானவையாகவே காணப்படுகின்றன. அந்த வகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அனைத்து விதமான துறைகளிலும் பங்குபற்றுதல்கள் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் பல்வேறு சமூக, பொருளாதார, கலாசார மற்றும் நம்பிக்கைகள் காரணமாக பெண்கள் இரண்டாம் தர நிலையிலேயே வைத்துப் பார்க்கப்படுகின்றார்கள்.
தென்னாசிய சமுதாயத்தில் பெண்கள் பொதுவாக பல பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள். மரபு, கலாசாரம், நம்பிக்கைகள் மாற்று கருத்துக்கள் இவற்றுள் மிகவும் முக்கியமானவை. சமத்துவத்தினையும் நீதியையும் எல்லா பெண்களுக்கும் உறுதிப்படுத்துவது என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது. பொதுவாகவே தென்னாசிய சமுதாயம் மரபு சார்ந்த, பண்பாடு சார்ந்த ,கலாசாரம் சார்ந்த விழுமியங்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். சட்ட ரீதியாக பெண்கள் தங்களுடைய ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு இவைகள் தடைகளாகவும் இருக்கின்றன. பொதுவாக பெண்கள் சார்ந்த கட்டமைக்கப்பட்ட பல விடயங்கள் கட்டவி;ழ்க்கப்பட வேண்டும்.
சமூகத்தில் தோன்றுகின்ற பொதுவான சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், முறைகேடுகள், ஒடுங்குமுறைகள், சட்ட மீறுகைகள், பிறழ்வு நடத்தைகள் போன்றவற்றை சமூகப்பிரச்சினைகள் எனலாம். பெண் பிரச்சினைகளை பற்றி பேசுதல் மற்றும் சமூக நீதி, அடக்குமுறை, சிறுவர் உரிமை தொடர்பாக உரையாடுதல் என்பது முக்கியமானதாகும். இத்தகைய சமூக பிரச்சினைகளை கண்ணாடிபோல் மக்களுக்கு எடுத்துக்காட்டி மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் செயற்பாடுகளை கவிதை, சிறுகதை, நாடகம், சுவரொட்டி, ஓவியம், பாடல்கள் மற்றும் சஞ்சிகை என பல்வேறுப்பட்ட வடிவங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.
அரசுகள் பெண்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் ஆழமான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனாலும் பெருமளவுக்கு அரசு இதனை செய்யத் தவறியுள்ளன. பெண்கள் மரபு சாரந்த நம்பிக்கைகளை கடந்து பெண்களை சமத்துவமான முறையில் உள்வாங்குவது, பெண்களுக்கான அந்தஸ்த்துக்களை நடைமுறைப்படுத்துவதனை உத்தரவாதப்படுத்தல் மற்றும் பெண்கள் பொதுவாக ஆளுமை நிலைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்ற பண்பும் இங்கு காணப்படுகின்றது. ஆகவே இவற்றையெல்லாம் தகர்த்துப் பெண்களை ஆள்நிலைப்படுத்துகின்ற பொறுப்பினை உலகளாவிய ரீதியில் பெண்ணிலைவாதமும், பெண்ணிலைவாத இயக்கங்களும் எடுத்திருக்கின்றன.
இன்று எம்மத்தியில் பெண்விடுதலை, பெண்ணிலைவாதம் என்பன குறித்து பரவலாகப் பேசப்படுகின்றது. இன்று காணப்படும் பெண்கள் மீதான சகல சமூக, பொருளாதார, கலாசார ஒடுக்கு முறைகளைக் கலைவதற்கு, பெண் என்பதால் வேறுபாடு காட்டாமல் மனித ஜீவி என்ற வகையில் உரிமையும், சுதந்திரமும் மற்றும் போராட்டமும் அப்போராட்டத்திற்கான வழிமுறைகளும் பெண்ணிலைவாதத்தின் முக்கிய நோக்கங்களாகும். பெண்ணிலைவாதம் என்ற சொல்லானது 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. இவை பெண்களின் ஜனநாயக உரிமைகளுக்குமான போராட்டத்தையே குறிக்கின்றது. அதாவது கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள், சொத்துடைமைக்கான உரிமை, வாக்களிக்கும் உரிமை, பாராளுமன்றத்திற்குச் செல்லும் உரிமை, பிறப்புக்கட்டுப்பாடு செய்யும் உரிமை, விவாகரத்து செய்யும் உரிமை போன்ற ஏனைய உரிமைகளாகும்.
பெண்களுக்கு எதிராக பல வன்செயல்கள் இடம்பெறுகின்றன. அதாவது பெண்கள் வீட்டில் ஆண்களுக்கு கீழ்படிதல், குடும்ப அமைப்பினால் பெண்கள் சுரண்டப்படுதல், தொழிலிலும், சமூகத்திலும், நாட்டின் கலாசாரத்திலும் பெண்கள் தொடர்ந்தும் குறைவான அந்தஸ்துடன் நடத்துதல் போன்றவற்றை எதிர்த்து போராட்டங்களையும் உள்ளடக்கியதாக இன்று காணப்படுகின்றது. பெண்கள் இவற்றையெல்லாம் கடந்து செல்வதற்கு பெண்கள் விழிப்புணர்வு பெற்று பெண் தலைமைத்துவத்தினை உருவாக்குதல் வேண்டும். பெண்கள் குடும்பத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்ற விதி காலங்காலமாக கீழைத்தேய சமூகங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது. தீர்மானம் எடுக்கும் செயன்முறையில் இருந்து அவர்கள் ஒதுக்கப்படுவார்கள். அவர்களுடைய செயற்பாடு குடும்பம் என்ற குறுகிய வட்டத்தினுள் அடக்கப்படுகின்றது.
இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஏனைய துறைகளோடு ஒப்பிட்டு நோக்கும் போது குறைவாகவே உள்ளது. சுதந்திரத்தின் பின்னர் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவைகளில் பெண்கள் அதிகளவு கவனம் செலுத்துகின்றார்கள். முன்னேற்றம் அடைந்துவந்த ஆண்களுக்கு நிகரான அளவிற்கு இத்துறைகளில் பெண்களின் பங்களிப்பு காணப்படுகின்றது. இதற்கு அவர்கள் சமூக, பொருளாதார ரீதியாக எதிர்நோக்கும் தடைகளே காரணமாகும். அந்த வகையில் பெண்களின் உடனடி மாற்றங்கள் எதனையும் பாதிக்கவில்லை. பெண்கள் தம் பங்குபற்றுதலுக்கு சுயமான அல்லது தனித்துவமான ஆளுமையினைப் பிரயோகித்து முன்வருவதில் பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகளே காரணமாக அமைந்துள்ளன. இதற்காக குடும்பப் பின்னணி, ஆண் வழி, உறவு வழி தலைவர்களின் ஆதரவு அல்லது பிரிவு என்பனவே பெண்களின் வெற்றி, தோல்வி பிரவேச பாதையில் முக்கிய காரணியாகியுள்ளது. இவ்வாறு வருகின்றவர்கள் எவ்வித சந்தேகமும் இன்றி மிகவும் திறமையாக செயற்பட்டுள்ளார்கள். ஆனாலும் இவர்களின் பிரவேசத்திற்கான மூல சந்தர்ப்பம் குடும்பப் பின்னணியும், ஆதரவுமேயாகும். இவ் அனுபவம் அல்லது கலாசாரம் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல மற்றும் இலங்கைக்கு மட்டும் பொருந்தக் கூடியதுமல்ல. பதிலாக உலக நாடுகள் பலவற்றில் இக்கலாசாரம் காணப்படுகின்றது. தென்னாசிய பிராந்தியமானது இறுக்கமான சமூகக்கட்டமைப்பைக் கொண்டதாகும். ஆட்சியாளன் என்பவன் ஆணாகவே இருக்க வேண்டும் என்ற நியதி வரலாற்றுக் காலம் தொடக்கம் இருந்து வருகின்றது.
மத ரீதியான மரபுப் பழக்க வழக்கங்கள் மக்களால் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதற்கமைய ஒவ்வொரு மதமும் தம்மளவிலான மரபுகளை பின்பற்றி வருகின்றன. சமயங்களிலும் பெண்களுக்கெதிரான பல்வேறு கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் எடுத்துக் கூறப்பட்டு பெண்களின் சுதந்திரத்திற்கும் பங்கம் ஏற்படும் வண்ணம் அவர்களின் சுகந்திர செயற்பாடுகளில் பங்குகொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
பெண்கள் மீதான குடும்பப் பொறுப்பும் பெண்கள் பங்குபற்றுதல் குறைவானமைக்கு காரணமாகப் பார்க்கப்படுகின்றது. அதாவது “குடும்பம் என்ற அலகு மனித விழுமியத்தின் ஒரு மூலமாக இருப்பினும் இக்குடும்பமே பெண்களுக்கு எதிரான வன்முறை விளையும் ஒரு விளைநிலமாக இருக்கின்றது.” மேலும் இக்குடும்பங்களில் பெண் வேலைக்கு செல்லாதவர்களாக இருப்பின் ஏனைய அனைத்து வீட்டு வேலைகள் மற்றும் குடும்;பப் பொறுப்பை சுமக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். ஆண்கள் வெறுமனமே வேலைக்கு போய் பணம் சம்பாதிப்பவர்களாகவே மட்டும் இருக்கின்றனர். எனவே குடும்பத்தில் இவ்வாறான பல்வேறு சிக்கல் நிலை காணப்படுகின்ற போது பெண்கள் பங்குபற்றுவதற்கோ தீர்மானம் எடுக்கும் செயன்முறையையோ மேற்கொள்ள முடியாதவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். உயர்மட்ட பதவிகளில் ஆண்கள் இருக்கின்றமை பெண்கள் உயர் பதவிகளுக்கு வந்தால் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை போன்ற மனோபாவங்களும் காணப்படுகின்றமையானது பெண்களுக்கு தீர்மானம் எடுத்தல் செயற்பாடு மிகவும் தாமதமாகவே காணப்படுகின்றது.
அத்தோடு எந்தவொரு தீர்மானம் எடுக்கும் செயன்முறையிலும் ஆண்களின் மேலாதிக்கமே காணப்படுகின்றது. இதனால் பெண்கள் தமக்கு சார்பான அல்லது பெண்கள் தொடர்பான எந்தவொரு விடயத்தினையோ சட்டத்தினையோ கொண்டுவர முடியாத நிலை நடைமுறையில் காணப்படுகின்றது. சமத்துவம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதும் மிக முக்கியமானதும் ஆகும். ஆண்கள் ஒத்துழைப்பை வழங்குவதில் பாரபட்சமின்றி செயற்படுத்தவும் ஆண், பெண் சமத்துவத்தினை நடைமுறையில் காணவும், அனுபவிக்கவும், நடைமுறைப்படுத்தவும் முடியும். “எமது சமூகம் பெண்களின் தலைமைத்துவத்தினை பழி தூற்றாமல் இருக்க வேண்டும் அப்போது தான் பெண்கள் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ஈடுபடக் கூடும்.”
ச.புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.