உலகம் பிரதான செய்திகள்

2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கிய முகப்புத்தக  நிறுவனம்


சதிக்கோட்பாடு ஒன்றை பரப்பி அது பற்றி விவாதித்து வந்த     2 லட்சம் பேர் கொண்ட குழுவை முகப்புத்தக நிறுவனம்  நீக்கியுள்ளது .  டீப் ஸ்டேட், வணிக மற்றும் ஊடக சக்திகள் தங்களுக்குள் ஒரு ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்தி   அதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்புக்கு எதிராக செயல்படுகின்றன என்ற ஒரு சதிக் கோட்பாட்டை நம்பும், அதனை பரப்பும், விவாதிக்கும் ஒரு குழுவுக்குப் பெயர்தான் கியூஅனான் (QAnon) என்பதாகும்.

டீப் ஸ்டேட் என்பது  வெளித் தோற்றத்தில் தெரியும் அரசுக்குள் செயல்படும் அதிகாரம் மிக்க ஒரு சிறு குழுவைக் குறிக்கும். அதிகாரம் மிக்க  நபா்களைக் கொண்ட சிறு வலைப்பின்னலாக செயல்படும் இந்தக் குழு அரசையே ஆட்டிப் படைக்கும் ஒரு அரசாக செயல்படும் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. இப்படி ஒரு குழு இருப்பதாக நம்புகிறவர்கள் அதை  ஆங்கிலத்தில்   ‘டீப் ஸ்டேட்’ என குறிப்பிடுவாா்கள்.

கியூஅனான் சதிக் கோட்பாட்டைப் பேசும் குழுவினர் முகப்புத்தகம், டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் செயல்பட்டு வருகின்றனர். தற்போது முகப்புத்தக நிறுவனத்தினால்  தடைசெய்யப்பட்டுள்ள Q/Qanon என அழைக்கப்படும்  குழுவில் சுமார் இரண்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

தங்கள் சமுதாயக் கொள்கைகளை மீறும் உள்ளடக்கங்களை தொடர்ந்து பதிவிட்டதற்காக  இந்த குழு அகற்றப்பட்டதாக  முகப்புத்தக நிறுவனத்தின்  செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, கடந்த மாதம் கியூஅனானுடன் தொடர்புடைய உள்ளடக்கங்களை ருவிட்டர், டிக்டாக் ஆகிய நிறுவனங்கள் தங்களது தளத்திலிருந்து நீக்கியிருந்தன.   எனினும், அதையொத்த பெயரில் இருக்கும் பல முகப்புத்தக குழுக்கள் இன்னமும் செயல்பாட்டிலேயே  உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது  முகப்புத்தக நிறுவனத்தினால்  நீக்கப்பட்டுள்ள சதிக் கோட்பாட்டு குழுவானது வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களைப் பகிர்வது தொடர்பில் எல்லையை  மீறியுள்ளதாக  ரொய்ட்டர்ஸ்   செய்தி வெளியிட்டுள்ளது. #சதிக்கோட்பாடு  #முகப்புத்தக  #கியூஅனான் #டிரம்ப்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.