215
மடு திருத்தலத்திற்கு ஓக்ஸ்ட் மாத திருவிழாவிற்கு வருகின்ற மக்கள் தற்காலிக விடுதிகள் அமைத்து தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகள் பேணப்பட்டு வருவதாகவும் பக்தர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.
மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மடு திருத்தலத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.
-இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவைக் கொண்டாடுவதற்கு ஆயத்தம் செய்யும் வண்ணம் இன்றைய தினம் (10) திங்கட்கிழமை காலை அவசர கூட்டத்தை ஏற்பாட செய்தோம். குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
முக்கியமாக நாங்கள் இன்னும் ‘கொரோனா வைரஸ்’ தொற்றின் அச்சுறுத்தலுடன் வாழ்வதனால் அதற்கு ஏற்றவாறு சுகாதார பாதுகாப்புடன் அந்த கட்டுப்பாடுகளுடன் தான் இந்த விழாவை கொண்டாட வேண்டி இருக்கின்றது.
எனவே தான் இந்த முறை எங்களுக்கு தங்கும் வசதிகள் ஒரு அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருக்கும் வீடுகளில் தங்கலாம் என்று கூறினாலும் அந்த வீடுகள் எல்லாம் ஏற்கனவே மக்களினால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகையினால் யாரும் வந்து வீடுகளில் தங்கக் கூடிய வசதிகள் இல்லை.
அதைவிட எத்தனையோ பேர் வழமையாக ஆயிரம் ஆயிரமாக வந்து கூடாரங்களில் தங்குவார்கள். ஆனால் இம்முறை இந்த கூடாரங்களும் அமைக்க வேண்டாம் என்று எமக்கு தடை செய்திருக்கிறார்கள். ஆகையினால் இந்த திருவிழாவிற்கு வந்து கூடாரங்களில் தங்கலாம் என்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை தயவுடன் தெரிவித்தக் கொள்ளுகின்றோம்.
மடு திருத்தலத்திற்கு வருகின்ற போது உங்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் பல விடயங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதாவது நீங்கள் தனியாக வாகனங்களில் வரும் போது வாகனங்களில் வருகின்றவர்களின் பெயர்கள் அவர்களின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து பட்டியலிட்டு கொண்டு வர வேண்டும்.
மேலும் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வாருங்கள். இந்த மடு திருத்தலத்தை சுற்றி வருவதற்கு 8 நுழைவாயில்கள் உள்ளது. ஆனால் அந்த நுழை வாசல் ஊடாக ஆலயததிற்கு வருகின்றவர்கள் சிறிய பயணப்பொதிகளுடன் மட்டுமே வருவதற்கு பாதுகாப்பு தரப்பினர் அனுமதி வழங்குவார்கள்.
எனவே தயவு செய்து பொது போக்குவரத்து சேவையூடாக வருபவர்கள் தயவு செய்து சிறு பொதிகளுடன் வாருங்கள். தனியார் வாகனங்களில் வருபவர்கள் அவர்களுடைய வாகனங்களிலேயே அந்த பொருட்களையும் பயணப்பொதிகளையும் வாகனத்தில் வைத்து விட்டு புனித பூமி யை சுற்றி இருக்கும் இந்த வழிபாட்டு தலத்திற்கு வரலாம்.
எதிர் வரும் ஆவணி மாதம் 14 ஆம் திகதி மாலை பேஸ்பர் வழிபாட்டுடன் திருப்பவணியும் நடாத்த ஆலோசித்து இருக்கின்றோம்.
அத்தோடு திருவிழா அன்று ஓகஸ்ட் 15 ஆம் திகதி கண்டி மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக இடம் பெறும்.அதன் பிறகு வழமையான திருச்சொரூப பவணியும் இடம் பெறும்.
அதன் பிறகு திருப்பயணிகளுக்காக மேலும் மூன்று திருப்பலிகள் அந்த நாளிலேயே ஒப்புக் கொடுக்கப்படும். எனவே பக்தர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மடு திருத்தலத்திற்கு வருகை தந்து மடு அன்னையின் ஆசீரை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ்,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. -#திருப்பலிகள் #மடுதிருத்தலம் #திருவிழா #விடுதிகள் #கொரோனா #பக்தர்கள்
Spread the love