Home உலகம் “நாங்களும் தமிழர்களே” – பாகிஸ்தானில் அறியப்படாத சிறுபான்மை தமிழ்ச் சமூகம்:

“நாங்களும் தமிழர்களே” – பாகிஸ்தானில் அறியப்படாத சிறுபான்மை தமிழ்ச் சமூகம்:

by admin

படக்குறிப்பு,1980-1990க்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதியில் நடந்த கோயில் திருவிழா

அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, ரஷ்யா முதல் பப்புவா நியூ கினியா வரை உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பாகிஸ்தானில் தமிழர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும்.

பாகிஸ்தானில் குடும்பத்துடன் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்றளவும் தமிழர்கள் எனும் தங்களது அடையாளத்தையும் கலாசாரத்தையும் இழக்காமல் இருக்க போராடி வருகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு எப்போது, எதற்காக தமிழர்கள் சென்றார்கள்? அங்கு எத்தனை தமிழர்கள் வாழ்கிறார்கள்? அவர்கள் அனைவருக்கும் தமிழில் பேச, எழுத, படிக்க தெரியுமா? பாகிஸ்தான் தமிழர்கள் எந்த கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்? தமிழகத்துக்கும் அவர்களுக்குமான உறவு எப்படி உள்ளது? அவர்கள் உலகத் தமிழர்களுக்கும், அரசுகளுக்கும் முன்வைக்கும் கோரிக்கை என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை அலசுகிறது இந்த கட்டுரை.

இந்த கட்டுரைக்காக பிபிசி தமிழிடம் பிரத்யேகமாக பேசிய இரண்டு பாகிஸ்தான் தமிழர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது பெயர் இந்த கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை.

பாகிஸ்தானில் தமிழர்களா?

பாகிஸ்தான் தமிழர்கள்

1947இல் நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தற்போதைய இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண தலைநகர் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் குடியேறியதாக ஆய்விதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, 1947ஆம் ஆண்டு, அப்போதைய மதராஸ் மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து மட்டும் சுமார் 18,000 பேர் பாகிஸ்தானுக்கு சென்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் குடியேறியதாக கூறுகிறார் பிபிசி தமிழிடம் பேசிய 60 வயதுக்கும் மேலான கராச்சி வாழ் தமிழர் ஒருவர்.

“நான் பிறந்தது, வளர்ந்தது என எல்லாமுமே பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான். நான் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள என பூர்வீகத்துக்கு சென்றதே இல்லை. என்னதான் பாகிஸ்தானில் வாழ்ந்தாலும் நாங்களும் தமிழர்கள்தான்” என்று ஆங்கிலம் கலக்காத தமிழில் சரளமாக பேசுகிறார் அவர்.

“தமிழ்நாட்டில் இருந்து கூட்டங்கூட்டமாக அப்போதைய இந்தியாவின் மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பணிவாய்ப்புகளை தேடி சென்ற எனது பெற்றோர் உள்ளிட்டோர் கடைசியாக பாகிஸ்தானின் கராச்சி நகரை வந்தடைந்தனர்” என்று அவர் கூறுகிறார்.

கராச்சியில் எத்தனை தமிழர்கள், எங்கெங்கு வசிக்கின்றனர் என அவரிடம் கேட்டபோது, “கராச்சியில் இப்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கின்றனர். அதிகபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் “மதராஸி பரா” (மதராஸ் பேட்டை) என்ற பகுதியிலும், அடுத்ததாக டிரி ரோட் மற்றும் கோராங்கி ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். சிலர் கராச்சியை ஒட்டியுள்ள நகரங்களுக்கு வாய்ப்புகளை தேடி புலம்பெயர்ந்துவிட்டனர்” என்று அவர் கூறுகிறார்.

தமிழர்கள் கராச்சி நகரத்தை சென்றடைந்த காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலானோர் அங்குள்ள ஜின்னா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அந்த மருத்துவமனை வளாகத்துக்கு அருகில்தான் தமிழர்களின் குடியிருப்பு பகுதியும் உள்ளதாக பிபிசி தமிழிடம் பேசியவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கல்வியில் சிறந்து விளங்கிய தமிழர்கள் பலர் அங்குள்ள தொழிற்சாலைகளில் பொறியியலாளர்களாகவும், அரசுப்பணியிலும் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமிழர்களை இணைக்கும் கோயில்

கராச்சி நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மதராஸி பரா பகுதியில்தான், அந்த நகரின் பெரிய இந்து மத வழிபாட்டுத்தலமான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளதாக கூறுகிறார், சுமார் 45 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் மற்றொரு தமிழர்.

“கராச்சியில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் இன்னமும் இந்து மதத்தையே பின்பற்றுகிறார்கள். அந்த வகையில், இங்குள்ள மாரியம்மன் கோயில்தான் கராச்சிவாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாக விளங்குகிறது. அதாவது, பொங்கல், ஆடி மாதம், தைப்பூசம் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளை போன்று முருகருக்கு காவடி எடுத்து அலகு குத்தும் பழக்கமும் இங்கு இன்னமும் கடைபிடிக்கப்படுகிறது. அதேபோன்று, இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வப்போது தன்னார்வலர்களால் இளம் தலைமுறையினருக்கு தமிழ் மொழியும் இங்கு கற்பிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.

‘தமிழ் மொழியை காப்பாற்ற உதவுங்கள்’

விக்கிபீடியா: இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்

பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள் காலங்காலமாக தங்களுக்குள் தமிழ் மொழியிலும், மற்ற இடங்களில் உருது மொழியிலும் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களும், அவர்களது அடுத்த சில தலைமுறையினரும் தமிழிலில் சரளமாக உரையாடுவதோடு, எழுத, படிக்கவும் தெரிந்த நிலையில், சமீப ஆண்டுகளாக அந்த நிலைமை மோசமாகி வருவதாக வருந்துகிறார் அந்த தமிழ் முதியவர்.

“கராச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், அன்று முதல் இன்றுவரை இங்குள்ள பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படவில்லை.”

“எனவே, தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த புதிதில் தமிழை நன்கறிந்திருந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பேச, எழுத, படிக்க சொல்லி கொடுத்து வந்தனர். காலப்போக்கில் அடுத்தடுத்த தலைமுறைகளை சேர்ந்த பெற்றோருக்கே தமிழ் மொழி சரளமாக பேச முடியாத நிலை உருவானதால் அவர்களது குழந்தைகளுக்கு தாய்மொழியை அறிந்துகொள்ளும் வாய்ப்பே குன்றிவிட்டது. இருப்பினும், இந்த சூழ்நிலையை கண்டு வேதனையடைந்த தன்னார்வலர்கள் சிலர் பல ஆண்டுகளாக இங்குள்ள மாரியம்மன் கோயிலில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற முறைசாரா வகுப்புகளில் அனைவரும் பங்கேற்பார்கள் என்று கூற முடியாது” என்று அவர் கூறுகிறார்.

“தமிழர்கள் பாகிஸ்தானுக்கு வந்தபோது உடலுழைப்பு சார்ந்த வேலைகளை பார்த்தார்கள். ஆனால், இப்போது நல்ல கல்வியறிவை பெறுவதற்கான சமூக அழுத்தம் அதிகரித்துள்ளது. அப்படி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் தமிழ் குழந்தைகளுக்கு தங்களது தாய்மொழியை படிப்பதற்காக வாய்ப்பே இல்லாதது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கராச்சியில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறாக இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியே.”

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கராச்சியில் தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கு பன்னாட்டு அரசுகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியும், வழிகாட்டுதலும் தேவைப்படுவதாக அவர்கள் கோருகின்றனர்.

பாகிஸ்தான் தமிழர்கள்

“தமிழகத்துக்கு ஒருமுறை கூட வந்ததே இல்லாத பாகிஸ்தான் தமிழர்கள் பலரும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமுடனே இருக்கிறார்கள். ஆனால், தமிழ் மொழியை கற்றுக்கொள்ள தேவையான பள்ளி போன்ற கட்டமைப்போ, புத்தகங்களோ இல்லாத நிலை அவர்களுக்கு சுணக்கத்தை ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசோ அல்லது தன்னார்வலர்களோ எங்களுக்கு தமிழ் மொழியை வளர்க்க உதவினால்தான் பாகிஸ்தானில் தமிழை நிலைக்க செய்ய முடியும். இதேபோன்று, பெரும்பாலான பாகிஸ்தான் தமிழர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால், அதற்கு அவசியமான பஞ்சாங்கம் உள்ளிட்ட விடயங்களும் இங்கு கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் திரும்ப விரும்புகின்றனரா பாகிஸ்தான் தமிழர்கள்?

பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு நுழைவு அனுமதி (விசா) பெறுவதில் கெடுபிடிகள் நிறைய உள்ளதாகவும், அவை சீராக்கப்பட்டால் அதிக அளவிலான பாகிஸ்தானிய தமிழர்கள் தங்களது பூர்வீகத்தை பார்வையிட வருவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் தமிழர்கள் நிரந்தரமாக தங்களது பூர்வீகத்துக்கு திரும்ப விரும்புகிறார்களா என்ற கேள்விக்கு பிபிசி தமிழிடம் பேசிய இருவரும் ஒரே பதிலை அளித்தனர்.

பாகிஸ்தான் தமிழர்கள்

“தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்த தலைமுறையினரில் பெரும்பாலானோர் தற்போது உயிருடன் இல்லை. இருப்பினும், பாகிஸ்தானிலேயே பிறந்து, வளர்ந்த பலரும் தமிழகத்துக்கு வந்து செல்ல விரும்புகிறார்கள். அவ்வப்போது சிலர் சென்று வருவதுண்டு. ஆனால், என்னை பொறுத்தவரை, பாகிஸ்தான் தமிழர்கள் யாருக்கும் மீண்டும் நிரந்தரமாக தமிழகத்துக்கு திரும்பும் எண்ணம் இல்லை. ஏனெனில், பல தலைமுறைகளாக பாகிஸ்தான்வாழ் தமிழர்களுக்குள்ளேயே திருமண உறவு நீடித்ததால் இங்குள்ள ஏராளமானோருக்கு தமிழகத்தில் நேரடி உறவுமுறைகளே இல்லை என்றே சொல்லலாம். மேலும், சமீப ஆண்டுகளாக கராச்சியில் வாழும் தமிழர்கள் வேற்று மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களை திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வருவதால், அவர்களது அடுத்த சந்ததியினருக்கும் தமிழ் மொழி கடத்தப்படுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More