Home இலங்கை UK கூலிப் படைகள் + STF தொடர்புபட்ட இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து லண்டன் பெருநகர காவற்துறை விசாரணை?

UK கூலிப் படைகள் + STF தொடர்புபட்ட இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து லண்டன் பெருநகர காவற்துறை விசாரணை?

by admin

இலங்கையில் 1980 களின் இறுதியில் பிரிட்டிஷ் தனியார் கூலிப்படைகள் புரிந்ததாகக் கூறப்படும் போர்குற்றங்கள் குறித்து லண்டனில் விசாரணை கோரும் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

லண்டன் பெருநகரப் காவற்துறை (Metropolitan Police) இந்த விசாரணைக்கான முறைப்பாட்டைப் பெற்றுள்ளனர் என்று அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.

ஜே. ஆர். ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் இலங்கைக் காவற்துறை திணைக்களத்தின் கீழ் உருவாக்கப்பட்ட STF எனப்படும் விசேட அதிரடிப்படைக்கு பிரிட்டனின் அன்றைய பிரதமர் மார்க்கிறட் தட்சர் அம்மையாரின் அரசினது அனுசரணையுடன் பிரிட்டிஷ் தனியார் கூலிப்படை பயிற்சி அளித்தது.

கீனி மீனி (Keenie Meenie Services – KMS) என்று அழைக்கப்பட்ட அந்த தனியார் பாதுகாப்பு சேவையைச் சேர்ந்த நிபுணர்களால் பயிற்றுவிக்கப்பட்ட சிறிலங்காவின் விசேட அதிரடிப்படையினர் தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த பல படுகொலைகளோடு பிரிட்டிஷ் கூலிப்படையினருக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.”மோர்னிங் ஸ்ரார்” பத்திரிகையின் முன்னாள் ஊடகவியலாளர் Phil Miller என்பவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எழுதி வெளியிட்ட ‘Keenie Meenie: the British Mercenaries Who Got Away with War Crimes’ என்னும் நூலில் தமிழர்களுக்கு எதிரான போர் குற்றங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகி இருந்தன.

1980 களின் இறுதியில் உள்நாட்டுப் போரின் தொடக்க காலத்தில் கிழக்கில் இடம்பெற்ற கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் உட்பட தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் கீனி மீனி கூலிப்படைக்கு உள்ள தொடர்புகளை இந்த நூல் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருந்தது.

பிரிட்டிஷ் கூலிப்படைகள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தை லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் தகவல் மையம் (Tamil Information Centre) என்ற அமைப்பு ஐ. நா. வின் கவனத்துக்கு கொண்டுசென்று முறைப்படியான விசாரணைகளைக் கோரியிருந்தது என்றும்- தனியார் இராணுவக் கம்பனிகளின் கீழ் இயங்கும் கூலிப்படைகளைக் கண்காணிக்கும் ஐ. நா. குழுவின் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தமிழர் தகவல் மையம் முன்னெடுத்த முயற்சிகள் காரணமாக இந்த விவகாரம் பிரிட்டிஷ் வெளிவிவகாரப் பணிமனையின் கவனத்துக்கு சென்றது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் கூலிப்படைகள் புரிந்த போர் குற்றங்கள் தொடர்பில் லண்டன் பெருநகரப் பொலீஸார் முறைப்பாடு ஒன்றைப் பெற்றுள்ளனர் என்பதை ஜெனீவாவில் உள்ள பிரிட்டனின் ராஜதந்திரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர் என்று செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தகவல்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கைத் தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் தொடர்பில் நாட்டுக்கு வெளியே நடத்தப்படுகின்ற முதலாவது விசாரணை முன்னெடுப்பாக இது இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.(படம் :’மோர்னிங் ஸ்ரார்’ முன்னாள் ஊடகவியலாளர் எழுதிய Keenie Meenie என்னும் நூலின் முகப்பு) நன்றி – Kumarathasan Karthigesu – 15- 08-2020சனிக்கிழமை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More