இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வகிக்க முடியும் என நீதியமைச்சரும். ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொலைக்காட்சியின் நியூஸ்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அரசியலமைப்பின் நான்காவது சரத்திற்கமைய, ஜனாதிபதி அனைத்து பாதுகாப்புப் பிரிவுகளினதும் கட்டளையிடும் அதிகாரியாக வேண்டும் என்பதுடன், நாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை குறைபாடுகளுடன் கொண்டுவந்தனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதி அமைச்சருமான அலி சப்ரி, ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வகிக்க முடியாது என 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், அது நான்காவது சரத்துடன் முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. திருத்தங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட அனைத்து மாற்றங்களையும் விட நான்காவது சரத்தே முக்கியத்துவம் பெறுகின்றது. அதனால், பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வகிக்கும் மக்கள் ஆணை கிடைக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, 19ஆவது திருத்தத்தை தொடர்ந்தும் மீளாய்வு செய்து வருவதாகவும் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விடயங்கள் குறித்து இப்போது மக்களுக்கு எதனையும் கூற முடியாது எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.
தாம் ஐந்து வருடங்களுக்கு மேல் ஜனாதிபதியாக இருப்பதற்கு எதிர்பார்க்கவில்லை எனவும், இரண்டு தடவைகளே ஒருவர் ஜனாதிபதியாக முடியும் என்பதை மாற்றுவதற்கும் தாம் முயலவில்லை எனவும், இந்த இரண்டு விடயங்கள் தவிர்ந்த ஏனையவை குறித்து தாம் மீளாய்வு செய்து வருவதாகவும் நீதியமைச்சரும். ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரிதெரிவித்துள்ளார்.
இதன்படி ஒருவர் இரண்டு தடவைகளே ஜனாதிபதியாக முடியும் என, 19 ஆவது திருத்தத்தில் குறிப்பட்டதன் அடிப்படையில் பிரதம மந்திரி மகிந்தராஜபக்ஸ 3 ஆவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக முடியாது.
அதனால் 2024 டிசம்பரில் நடைபெறும் தேர்தலிலும் கோத்தாபய ராஜபக்ஸவே ஜனாதிபதியாக போட்டியிட முடியும். அத்துடன் வளர்ந்து வரும் சஜித் பிரேமதாஸவை எதிர்கொள்ளும் நிலைக்கு நாமலின் அரசியல் முதிர்ச்சி அமையுமா? என்பதும் கேள்வியே.
இந்த நிலையில் வயது மற்றும், அரசியல் முதிர்ச்சியை நாமல் பெறும் வரை, கோத்தாபய இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக தேர்வாகி 2029ல் நாமலிடம் கட்சியையும், ஜனாதிபதி பதவியையும் ஒப்படைக்கலாம் என்பதனைனையே ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதி அமைச்சருமான அலி சப்ரியின் கருத்து புலப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.