பிரித்தானிய கல்வி அமைச்சர் கவின் வில்லியம்சன்ஸ் தனது பதவியைத் துறப்பது பற்றி சிந்திக்க வேண்டும் என லிபிரல் டெமொகிரட் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வெளியான ஏஎல் பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்தே இச்சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாண்டு கொரோணா காரணமாக ஏஎல் பரீட்சைகள் இடம்பெறாததால் பயிற்சிப் பரீட்சைப் பெறுபேறுகளையும் ஆசிரியர்கள் எதிர்வுகூறும் பெறுபேறுகளையும் வைத்தே இறுதியான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டன. பொதுவான காலங்களில் கூட ஆசிரியர்கள் எதிர்வுகூறும் பெறுபெறகளை வைத்தே பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்பிற்கான இடங்களை மாணவர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் வழங்கும். அதாவது ஆசிரியர் எதிர்வு கூறும் பெறுபேறுகளை இறுதிப்பரீட்சையில் எடுக்க வேண்டும்.
இறுதிப் பரீட்சைகள் இல்லாததால் பயிற்சிப் பரீட்சைப் பெறு பேறுகளையும் ஆசிரியர்களது எதிர்வு கூறல்களையும் வைத்து இறுதிப் பரீட்சைப் பெறு பேறுகள் வரும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் காத்திருந்தனர். தங்களது ஆசிரியர்கள் தந்த எதிர்வு கூறல் தகமைகளுக்கு அமைய பல்கலைக்கழக ஆசனங்களும் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே மாணவர்கள் இருந்தனர். வழமையாக இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகள் ஆசிரியர்களுடைய எதிர்வுகூறல் பெறு பேறுகளில் இருந்து பெருமளவில் மாறுபடுவதில்லை. 2010 முதல் 2018 வரையான காலப்பகுதியில் 48.8 வீதமான எதிர்வு கூறுப்பட்ட பெறுபேறுகள் இறுதிப் பெறுபேறுகளை ஒத்திருந்தது. 44.7 வீதமான எதிர்வுகூறப்பட்ட பெறு பேறுகள் இறுதிப்பெறு பேறுகளைக் காட்டிலும் சற்று அதிகமாகக் காணப்பட்டது. 6.5 வீதமான எதிர்வு கூறப்பட்ட பெறுபேறுகள் மட்டுமே இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளிலும் பார்க்க குறைவாக இருந்தது.
வழமையாக இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளில் ஆசிரியர்களின் எதிர்வுகூறல்கள் கடுமையாக வித்தியாசப்படுவதில்லை. ஆனால் சென்றவாரம் வெளியான ஏஎல் இறுதிப்பெறுபேறுகளில் 40 வீதம் மாணவர்கள் எதிர்வு கூறப்பட்ட பெறுபேறுகளைக்காட்டிலும் குறைவாக பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அதனால் அவர்களுடைய பல்கலைக்கழக ஆசனங்கள் இழக்கப்பட்டு உள்ளது. இந்த இறுதிப்பெறு பேறுகளை நிர்வகிக்க பெறுபேறுகளுக்கான அலுவலகம் ஓப்குவால் கணணி அல்கோரிதம் ஒன்றைப் பயன்படுத்தி உள்ளனர். அதன் படி தனிப்பட்ட மாணவர்களின் திறமைகளுக்குப் பதிலாக கடந்த காலங்களில் கல்லூரிகள் பாடசாலைகள் எவ்வாறு பெறு பேறுகளைப் பெற்றன என்ற விபரத்தையும் வைத்து இந்த அல்கோரிதம் பெறுபேறுகளில் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த முறையால் சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருந்த பாடசாலைகள் கல்லூரிகள் மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பெறு பேறுகளையே அரசு வெட்டிச்சாய்த்து உள்ளது. தனியார் கல்லூரிகள் கிரம்மர் ஸ்கூல்ஸ் இந்த பெறு பேற்று முறையால் பாதிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முறையீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் எவ்வாறு முறையீட்டை கையாள்வது என்பதற்கு ஒரு வழிகாட்டியயை ஓகஸ்ட் 15 மாலை ஓப்குவால் வெளியிட்டது. அதில் பயிற்சிப் பரீட்சை முடிவுகளை வைத்து முறையீட்டை கையாளும்படி இருந்தது. ஆனால் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களில் அது நீக்கப்பட்டு விட்டது. 900,000 மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை மீள்பரிசோதணைக்கு முறையீடு செய்துள்ள நிலையில் அரசு அம்முறையீடுகளை எந்த அடிப்படையில் அணுகுவது என்பதில் இன்னமும் குழப்ப நிலையிலேயே உள்ளது.
பொறிஸ் ஜோன்சனின் கொன்சவேடிவ் அரசு கொரோனா விவனாரத்தின் ஆரம்பம் முதலே பல்வேறு தீர்க்கமற்ற பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டது. தற்போது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான முக்கிய விடயத்திலும் பொறுப்பற்ற விதத்திலேயே நடந்துகொள்கின்றது. ஆரிசியர்கள் எதிர்வுகூறிய பெறு பேறுகளின் அடிப்படையிலேயே பெறுபேறுகள் வழங்கப்பட வேண்டும் அரசு தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தங்கள் பரவலாக வெளிவருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே கல்வி அமைச்சுச் செயலாளர் கவின் வில்லியம்சன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நன்றி – Thambirajah Jeyabalan… முகநூல்..