கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டிருப்பதாக மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கமாக காணப்படுகின்ற இரணைமடு குளம் உள்ளிட்ட பாரிய நடுத்தர மற்றும் சிறுகுளங்களில் மேற்கொள்ளப்பட்ட 2019, 2020 இற்கான காலபோக அறுவடையை தொடர்ந்து இவ்வாண்டுக்கான சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.
அதாவது இரணைமடு குளம், கல்மடு குளம், அக்கராயன் குளம், புதுமுறிப்பு குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், குடமுருட்டிக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் சிறு நீர்ப்பாசனக் குளங்கள் என்பனவற்றின் கீழ் சுமார் 8688 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன. இதன்மூலம் ஏறத்தாழ 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய மற்றும் நடுத்தரக் குளங்களின் கீழ் 8592 ஹெக்டெயரிலும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 96 ஹெக்டெயரிலுமாக மொத்தமாக 8688 ஹெக்டெயர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.
இவ்வாறு அறுவடைகள் மூலம் சுமார் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மறுவயற் பயிர் செய்கைகளானவை பல்வேறு செயற்திட்டங்களினூடாக ஊக்குவிக்கப்பட்டு சுமார் 1300 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த காலபோகத்தின் போது 23 ஆயிரத்து 466 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.