கேதாரபிள்ளை என்ற சமுதாய கலைஞர், சமுதாய விமர்சகர், சமுதாய நோய் நீக்குனர், வாய்மொழி மரபும் எழுத்து மரபும் இணைந்த படைப்பாக்க மரபின் முக்கிய கலைஞர், இம் மரபின் முன்னெடுப்பாளராக திகழ்ந்தவர். எம் முன்னோர்கள் உலகிற்கு சென்று விட்டார்.
முதுமையும் ஏழ்மையுமான வாழ்க்கையிலும் தன் பணியை இடையறாது தொடர்ந்த சமுதாய ஆளுமை கேதாரபிள்ளை.
பாரம்பரிய சமூகங்களின் உள்ளூர் வாழ்வியலில், சமூக ஆற்றுப்படுத்தலுக்கும் ஆரோக்கிய வாழ்வுக்கும் தம்அறிவையும் திறனையும் பங்களிப்புச் செய்யும் ஆளுமைகளுக்கு கைமாறு செய்யும் பண்பும் பண்பாடும் ஓர் அம்சமாக இருந்து வந்திருப்பதைக் காணமுடியும்
நவீன வாழ்வியல், தேவைப்படும் பொழுதெல்லாம் சமுதாய ஆளுமைகளின் பயன்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை மேற்படி சமுதாய ஆளுமைகளைக் கவனிப்பதைக் கைவிட்டு விடுகின்றன. இந்த நிலைமை குறிப்பிட்ட சமுதாய ஆளுமைகளை கவனிப்பற்ற ஏழ்மை நிலைக்கு தள்ளிவிட்டிருப்பதைக் காணமுடியும்.
ஆயினும் தம்பணியிலிருந்து விலகாத பண்பாட்டைக் கொண்டவர்களாக இந்த ஆளுமைகள் திகழ்ந்து வந்திருக்கின்றனர், திகழ்ந்தும் வருகின்றனர். இத்தகைய பாரம்பரியத்தில் ஒருவர்தான் கேதாரபிள்ளை ஐயா அவர்கள்.
காலனியந் திணித்துவிட்ட நவீன வாழ்வியல் என்பது காலாதி கால உள்ளூர் அறிவு முறைகளையும் வாழ்வியல் முறைகளையும் காட்டுமிராண்டித்தனமானது, பாமரத்தனமானது, நாகரிகமற்றது என்ற கருத்தாக்கத்துள் திளைக்க வைத்துவிட்டிருக்கிறது.
காலனியவாதிகள் திரும்பிப் போய்விட்டார்கள் எனினும் அவர்களது மாயக் கட்டுக்களை விரும்பி முன்னெடுப்பதும், வரிவுபடுத்துவதும், வலுப்படுத்துவதுமே நிகழ்த்தப்பட்டு வருகிறது. இவற்றைக் கேள்விக்குட்படுத்துவது அபிவிருத்தியை, நாகரிகமயப்படுத்தலை மறுப்பதாகவும் எதிர்ப்பதாகவுமே இன்றளவும், மிகத் தீவிரமாக விளங்கப்பட்டும், விளங்கப்படுத்தப்பட்டும் வருவதைக் காணவும் எதிர்கொள்ளவும் முடிகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கேதாரபிள்ளை ஐயா போன்ற உள்ளூர் அறிவு திறன் சார் ஆளுமைகளின் இருப்பினதும் இயக்கத்தினதும் பண்பையும் நோக்கத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியமான விடயமாக இருக்கின்றது.
ஏனெனில் அறிவு என்பது சுயமுன்னேற்றத்திற்கும் சுயநல நோக்கத்திற்கும் உரியதன்று என்ற விடயத்தை உள்ளூர் அறிவு திறன் சார் ஆளுமைகளின் இருப்பினூடாகவும் இயக்கத்தினூடாகவும் அறிந்து கொள்ள முடிகிறது. அது பொது நலன் சார்ந்தது அது சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டது. மேற்படி ஆளுமைகள் சமூகத்;தை கவனித்துக் கொள்வார்கள். சமூகம் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் என்ற வகையிலான உறவு முறையினைக் காணமுடியும். ஆயினும் மேற்படி ஆளுமைகள் பல்வேறு தொழில் முறை சார் வல்லமையுடையவர்களாக இருப்பதும் அதுசார்ந்த வருமானம் கொண்டவர்களாக இருப்பதும் யதார்த்தமானது.
நவீன அறிவு முறையின் விரிவாக்கம் மேற்படி கலைஞர்களின் தேவையை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் தொடர்பாக ‘படிப்பறிவற்றவர்கள்’, ‘பாமரர்கள்’ என்ற கருத்தை மிகவும் வலுவாகப் பதிய வைத்திருக்கிறது.
காலனியத்தின் வலிமையும் காலனியத்திற்கு உட்படுத்தப்பட்டவர்களின் வலிமையின்மையும் என்னவென்றால் உள்ளூர் அறிவு திறன்சார் ஆளுமைகளினைக் கீழ்நிலைப்படுத்தல், கேவலப்படுத்தல் என்பவற்றில் இருந்து இன்னமும் விடுபட முடியாமல் இருக்கும் அவலமே ஆகும். இத்தகையதொரு சூழலில் கேதாரபிள்ளை ஐயா போன்ற ஆளுமைகளின் ஆற்றல்களை அறிந்து கொள்வதும் மேற்கூறிய இழிநிலையில் இருந்து விடுவித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களைத் தருவதாக இருக்கும்.
இந்தப் பின்னணியில் பாடசாலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நவீன நிறுவனங்களது இருப்பும் இயக்கமும் அதுசார் அறிவுமுறையும் பற்றிய புரிதல்கள் மிகவும் அவசியமானவை.
காலனியத்துக்கு முந்திய பல நூற்றாண்டு கால வாழ்வியலை கட்டமைத்த அறிவு முறைகளையும், அறிவுருவாக்க முறைமைகளையும் மூடத்தனமானவை, பாமரத்தனமானவை, அறிவுபூர்வமற்றவை, விஞ்ஞானபூர்வமற்றவை என நிராகரிக்கும் நிலைமையே வலுவானதாகக் காணப்படுகிறது. இதுவொரு அறிவுருவாக்கல் படுகொலையாகவே கொள்ளப்படுகிறது. இதனை காலனிய நீக்கச் சிந்தனையாளர்கள் Epistemicide என்றே குறிப்பிடுகிறார்கள்.
தேசம், தேசியம் பற்றி உரத்தும் முரண்பட்டும் இயங்கும் ஒரு தேசத்தில் காலனிய நீக்கச் சிந்தனை உருவாக்கத்திற்கு பெருந் தடைச்சுவராக தேசியவாதச் சிந்தனை தொழிற்;பட்டு வருவதைக் காண முடிகிறது. அதாவது காலனியம் உருவாக்கிய அடிப்படைகளிலிருந்து பெரும்பாலும் தேசியவாதச் சிந்தனைகள் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன.
உலகமயப்படுத்தும் தராண்மைவாதப் பொருளாதாரச் சூழலின் ஆதிக்க நீக்கத்திற்கான வழிமுறையாக காலனிய நீக்கச் சிந்தனையும் செயற்பாடும் உலகளவில் வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் அதனை வரித்துக் கொண்டு மேலெழுவது தேவையாக இருக்கிறது.
எனவே எம்முன்னோர்கள் உலகத்தைச் சென்றடைந்த கேதாரபிள்ளை ஐயாவை முன்னிறுத்தி எம்மைப் பிடித்துள்ள காலனியத் தளைகள் நீங்கிய, ஆதிக்கங்கள் அற்ற வாழ்வியலை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்போம். சிந்தனைகளைக் கேள்விகளுக்குட்படுத்திக் கொண்டே முன் செல்வோம் நாங்கள். முன்செல்வோம் நாங்கள்.
முனோர்கள் உலகத்தைச் சென்றடைந்த கேதாரபிள்ளை ஐயாவை முன்னிறுத்தி காலனிய நீக்கத்திற்கான முன்னெடுப்பு – கலாநிதி சி. ஜெயசங்கர்…