யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றும் நிலை ஏற்பட்ட போது அதனை தடுக்க பாகிஸ்தான் ராணுவம் உதவியது என இலங்கை வெளியுறவுத் துறை செயலாளரும், முன்னாள் கடற்படைத் தளபதியுமான, பேராசிரியர் கலாநிதி ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்றபின், பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனதாக்கிக்கொண்டார். இதனையடுத்து இலங்கையின் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக முன்னாள் கடற்படைத் தளபதி பேராசிரியர் கலாநிதி ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டார்.
புதிய செயலராகப் பதவியேற்ற ஜயநாத் கொலம்பகே ஊடகங்களுக்கு அளித்து வரும் செவ்விகளில், வெளியுறவு கொள்கைகளில் இந்தியாவுக்கே முதலிடம் என்ற கோட்பாடை பின்பற்றவுள்ளதாகக் கூறி வருகிறார். அத்துடன் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் கேந்திர பாதுகாப்புக்கும் இலங்கை ஒருபோதும் எதிராக இருக்காது என்றும் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் பாகிஸ்தான் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜயநாத் கொலம்பகே தெற்காசியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றன. இருநாடுகளுமே இலங்கையின் நட்பு நாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மிகவும் சிக்கலான தருணங்களில் இருநாடுகளுமே உதவியும் இருக்கின்றன. யுத்த களத்தில் ஒருமுறை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தை இலங்கை ராணுவம் கைவிட வேண்டிய பாரியதொரு நெருக்கடியை தமது தாக்குதல்கள் மூலம், விடுதலைப் புலிகள் உருவாக்கி இருந்தனர்.
அந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் பல்குழல் ரொக்கெட் லோஞ்சர்ககளை (Multi-barrel rocket launchers) இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்த உதவியின் மூலம் விடுதலைப் புலிகள் கைகளில் யாழ்ப்பாணம் விழுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
இருப்பினும் இலங்கையை எந்த ஒருநாடும் இன்னொரு நாட்டுக்கு எதிரான தளமாக பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டாது. இருநாடுகளுமே இலங்கைக்கு முக்கியமானவை. எனினும் இந்தியாவுக்கே முதலிடம் இந்தியா இலங்கையின் அண்டைநாடு. அதனாலேயே இந்தியாவுக்கே முதலிடம் என்கிற வெளியுறவு கொள்கையை இலங்கை பின்பற்றுகிறது. அதாவது இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் இலங்கை ஒருபோதும் செய்யாது என்பதுவே அதன் அர்த்தம் என ஜயநாத் கொலம்பகே கூறியுள்ளார் #விடுதலைப்புலிகள் #யாழ்ப்பாணம் #வீழ்ச்சி #பாக்கிஸ்தான் #ஜயநாத்கொலம்பகே #இந்தியா