இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தனிகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட நியமிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கியதேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக 2000 ஆண்டில் நாடாளுமன்றில் பிரவேசித்த மிலிந்த மொறகொட 2001ல் மீண்டும் கொழும்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
அக்காலத்தில் ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சராக இருந்த மிலிந்த மொறகொட அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையிலும் ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தின் சார்ப்பில் கலந்துகொண்டார். பின்னர் மகிந்த ராஜபக்ஸ தலமையிலான சிறீலங்கா சதந்திரக் கட்சியின் அரசாங்க சார்பு நிலையை எடுத்திருந்தார்.
அண்மையில் மாகாணசபை முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது எனவும், தேவையற்ற பாரிய செலவை ஏற்படுத்தும் முறைமை எனவும், உள்ளுராட்சி சபைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவரது அமைப்பின் ஆய்வின் ஊடாக கருத்து வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை தொடர்பிலான சர்ச்சைகள் நிலவும் தற்போதைய சூழலில் மிலிந்த மொறகொடவை இந்தியாவுக்க்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதேவேளை மிலிந்த மொறகொட ஒரு அமெரிக்க நலன் விரும்பி எனவும், அமெரிக்க சார்பானவர் எனவும், அவரை இந்தியாவுக்கான தூதராக நியமிப்பதை ஏற்க முடியாது எனவும், அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக விமல் வீரவன்ச தலமையிலான குழுவினர் உள்ளிட்ட பலர் மிலிந்த மொறகொடவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.