வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 குற்றவாளிகள் குறித்து, சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளது . குற்றச்செயல்களில் ஈடுபடும் 14 பேரை கைது செய்வதற்காக, சர்வதேச காவற்துறையினர் மூலம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சிவப்பு அறிவித்தலை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இந்த சந்தேகநபர்கள், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையின் பதில் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறித்த 14 சந்தேகநபர்களும் கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், நீதிமன்ற செயற்பாடுகளுக்கு தேவையான இந்த 14 சந்தேகநபர்கள் குறித்து 2 மாதங்களுள் சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாகவும், பதில் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர்களுக்கு சொந்தமான, மேல் மாகாணத்தில் உள்ள 4000 மில்லியன் ரூபாவிற்கும் அதின பெறுமதியுடைய சுமார் 900 பேர்ச்சஸ் காணியை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகநபர்களுக்கு உரித்தான 12 சொகுசு கார்கள், 7 முச்சக்கர வண்டிகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் ஆகியன காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்களின் 102 வங்கிக் கணக்குகளிலிருந்த 960 இலட்சம் ரூபா பணமும் அரசுடைமையாக்கப்படவுள்ளதாக காவற்துறையின் பதில் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். #குற்றவாளிகள் #கைது #சிவப்புஅறிவித்தல் #சொத்துக்கள் #அரசஉடமை #ருவன்குணசேகர